Intellectual Politicians Uttar Pradesh

காவி நிற கழிப்பறையை கோவில் என்று நினைத்து வணங்கிய மக்கள்!

உத்தரபிரதேசத்தில் மாவட்டத்தின் மவ்தஹா கிராமத்தில் கழிப்பறை கட்டிட சுவர் ஒன்றிற்கு காவி நிறம் பூசப்பட்டிருந்ததால் கோயில் என்று நினைத்து மக்கள் பூஜை செய்து வந்துள்ளனர். மூடிய கதவுகளுக்குப் பின்னால் ஒரு சிலை இருப்பதாகக் கருதி ஒரு வருடத்திற்கும் மேலாக தங்கள் பிரார்த்தனைகளைச் செய்து வந்துள்ளனர். உபி மாநிலத்தில் காணும் இடமெல்லாம் பாஜக வின் காவி நிறம் பளிச்சிடும் வண்ணம் அனைத்து முக்கிய அரசு கட்டிடங்களுக்கும், முஸ்லிம்களின் ஹஜ் வாரியம் உட்பட அனைத்திற்கும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்தியநாத் காவி வர்ணம் பூசி வருகிறார். இதில் தற்போது கழிவறையும் விதிவிலக்கு இல்லாமல் ஆகிவிட்டது.

ராகேஷ் சாண்டல் என்ற குடியிருப்பாளர் கல்ஃப் நியுஸிடம் தெரிவித்தாவது: ”சமூக சுகாதார மையத்தின் வளாகத்தில் அமைந்துள்ள கட்டிடம் காவி வர்ணம் பூசப்பட்டு கோவிலின் வடிவத்தில் இருந்தது. இது ஒரு கோவில் என்று மக்கள் நம்பினர், யாரும் அதை தோண்டி துருவ நினைக்கவில்லை. இது ஒரு கழிப்பறை என்று ஒரு அதிகாரி சமீபத்தில் எங்களிடம் சொன்ன பிறகு தான் உண்மையை நாங்கள் அறிந்து கொண்டோம்.

மேலும் தொடர் குழப்பங்களை தவிர்ப்பதற்காக கட்டிடத்தின் நிறம் இப்போது இளஞ்சிவப்பு நிறமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த கழிப்பறை ஒரு வருடத்திற்கு முன்னர் பிரதமரின் ஸ்வச் பாரத் அபியன் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. உத்தரபிரதேசத்தின் பல மாவட்டங்களில் இந்த திட்டத்தின் கீழ் பொது கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. பெரும்பாலும் அத்தனைக்கும் காவி நிறமே பூசப்பட்டுள்ளது.

எட்டாவா என்ற அமிர்த்பூர் கிராமத்தில் உள்ள 350 கழிப்பறைகளில் 100 கழிவறைகள் காவி நிறத்தில் வர்ணம் பூசப்பட்டுள்ளதாக நியூஸ் 18 இன் 2018 அறிக்கை கூறுகிறது. காவி நிறம் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் விருப்பமான வண்ணம் என்றும், கழிவறைகளுக்கு ஒரே நிறத்தை பூசுவது இப்பகுதியில் அதிக வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் கிராம மக்கள் நினைத்தனர்.

மவ்தஹா கிராமத்தில் உள்ள கழிப்பறையானது ஒரு வருடத்திற்கும் மேலாக பூட்டப்பட்டுள்ளது. காவி நிறத்தில் இருந்து பிங்க் நிறத்திற்கு மாறியும் , கழிப்பறை இன்னும் பொது பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.