NPR Political Figures Telangana

‘என்னிடமே பிறப்பு சான்றிதழ் இல்லை, என் அப்பாவிடம் எப்படி இருக்கும்?’ தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ..

‘என்னிடமே பிறப்பு சான்றிதழ் இல்லை. என் அப்பாவிடம் எப்படி இருக்கும்?’ என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சட்டசபையில் கூறி இருக்கிறார்.

‘நாங்கள் நிலவுடமைக் குடும்பம்தான். ஆனால் ஒரு கிராமத்து வீட்டில்தான் நான் பிறந்தேன். ஊர்ப்பெரியவர் ஒருத்தர் “ஜென்ம நாமா” என்று எழுதிக் கொடுத்தார். அதில் அரசு சீல் எல்லாம் எதுவும் இல்லை. சும்மா ஒரு காகிதம்தான். எனக்கே இப்படி இருக்கும் பொழுது கிராமத்தில் வசிக்கும் தலித், பழங்குடி மற்றும் ஏழைகளை எப்படிப் போய் ஆவணம் கேட்பேன்?‘ என்று கூறி இருக்கிறார்.

CAA பற்றி பேசும் பொழுது ‘நாகரிகம் அடைந்த எந்த சமூகமும் இதர மதங்களை அனுமதித்து விட்டு ஒரே ஒரு மதத்தை தள்ளி வைக்கும் செயலை செய்யத் துணியாது! இந்த சட்டம் வந்ததில் இருந்து தேசத்தின் மதிப்பு உலக அளவில் குறைந்து போயிருக்கிறது. ஐநா சபை துவங்கி உலக நாடுகளில் எல்லாம் இப்பொழுது இதைப் பற்றித்தான் பேசுகிறார்கள்.’ என்றிருக்கிறார் முதல்வர் சந்திரசேகர் ராவ் .

சிஏஏ இந்திய அரசியலமைப்பின் அடிப்படைகளுக்கு எதிரானது என்று அவர் கூறினார்.

“அரசியலமைப்பின் முதல் வாக்கியம் மதச்சார்பின்மையை வலியுறுத்துகிறது. ஆனால், ஒரு குறிப்பிட்ட மதத்தை விலக்கு என்று அவர்கள் சொன்னால், அது எங்களுக்கு ஏற்கத்தக்கதல்ல. நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம். நாங்கள் மட்டுமல்ல, எந்த நாகரிக சமூகமும் அதை ஏற்றுக்கொள்ளாது” என்றார்.

எதிர்வரும் நாட்களில் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அரை நாள் விவாதம் அனுமதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

“நாம் கண்ணியத்துடன் வாழ வேண்டும். ஆம், நாங்கள் இந்த நாட்டின் ஒரு பகுதியாக இருக்கிறோம், எங்களுக்கு உரிமை உண்டு. நாங்கள் நிச்சயமாக குரல் எழுப்புவோம். தீர்மானம் குறித்து பாஜக உறுப்பினர்களும் பேசட்டும். எல்லோருடைய கருத்துக்களையும் இங்கு பதிவு செய்வோம். பின்னர் அதை பொதுமக்கள் முன் வைப்போம். எது சரியானது என்று அவர்கள் தீர்ப்பளிப்பார்கள், ” என்றார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்

இதைத்தொடர்ந்து தெலங்கானா சட்டசபையில் CAA மற்றும் NRCகக்கு எதிரான தீர்மானம் கொண்டு வருவதற்கு சபாநாயகர் அனுமதி அளித்திருக்கிறார்.