அசாமில் NRC நடத்தப்பட்டது. அசாமில் ஜனத்தொகை 3.30 கோடி. இது இந்தியாவின் ஜனத்தொகையில் 2.4% மட்டுமே. அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (என்.ஆர்.சி.) இறுதிப்பட்டியல் வெளியான போது, இந்தப் பட்டியலில் 3.11 கோடி பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், இந்தப் பதிவேட்டில் இடம் பெற விண்ணப்பித்த மக்களின் எண்ணிக்கை 3.30 கோடி. இதனால், மீதமுள்ள சுமார் 19 லட்சம் பேரின் இந்தியக் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது.
இந்த 19 லட்சம் பேரும் இனி நீதிமன்றம் சென்று தக்க ஆவணங்கள் கொடுத்து தாங்கள் இந்த தேசத்தின் குடிமக்கள் தான் என்பதை நிறுவ வேண்டுமாம்? கூலி வேலை செய்து தங்களின் வாழ்க்கை பாடுகளை சமாளிக்கும் சாமானிய ஜனங்கள் இப்படி நீதிமன்றத்திற்கு அலைய முடியுமா??
இந்த குடியுரிமை நீக்கப்பட்டவர்கள் பட்டியலில் சாமானியர்கள் மட்டும் இல்லை, கார்கில் போரில் இந்தியாவிற்கான போராடிய ராணுவ அதிகாரி முகம்மது சனாவுல்லாவும் அடங்குவார், இவரையும் அசாமில் உள்ள கோவால்பாரா மத்திய சிறையில் அடைத்து வைத்தார்கள் எனில் என்ன நிலைமை என்பதை நீங்கள் தான் யூகிக்க வேண்டும்.
இந்த பட்டியலில் முன்னால் ராணுவ வீரர்கள், சி.ஆர்.பி.எப் வீரர்களின் பல குடும்பங்கள் இடம்பெறவில்லை, இதை எல்லாம் விட முன்னாள் இந்திய ஜனாதிபதி பக்ருத்தீன் அலியின் குடும்பத்தாரும் கூட இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.
அசாமில் நடத்தப்பட்ட NRCக்கு செலவிடப்பட்ட தொகை ரூ.1600 கோடி. அதாவது 3.30 கோடி நபர்களுக்கு ரூ.1600 கோடி எனில் ஒரு நபருக்கு ஆன செலவு ரூ.399. இந்தியாவின் ஜனத்தொகை 137 கோடி, மொத்த இந்தியாவிற்கும் NRC செய்தால் ஆகும் செலவு ரூ.54,663 கோடிகள். இன்று நம் தேசமே பொருளாதார முட்டுச் சந்தில் சிக்கித்தவிக்கிற போது ஏற்கனவே ஜி.எஸ்.டி உள்ளிட்ட பல தொகைகளை மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்காமல் இழுத்தடித்து வரும் வேளையில் இந்த புதிய ரூ.54,663 கோடி செலவை யார் ஏற்பது.
அசாமில் 3000 பேரை அடைத்து வைக்க கட்டப்பட்ட ஒரு தடுப்பு முகாமின் செலவு ரூ.45 கோடிகளாம். அப்படியெனில் 19 லட்சம் பேரை இதே பாணியில் அடைத்து வைக்க ஆகும் செலவு என்ன?? அசாம் சிறைக்கு மட்டும் ரூ.30,000 கோடிகள் செலவாகும்..
இந்த முட்டாள்தனத்தை தேசம் முழுமைக்கும் அமுல்படுத்தினால், எத்தகைய கொந்தளிப்புகள் ஏற்படும் என்பதை சிந்தித்து பாருங்கள். இந்திய அரசு ஆதார் அட்டையை கொண்டு வரும் போதே அதை ஒரு தேசிய ஆவணம் என்றது. இன்றைக்கு இதே மத்திய அரசு தான் கொடுத்த ஆதார், பான் கார்டு, வாக்காளர் அட்டை, பாஸ்போர்டு என எதனையும் ஆவணமாக ஏற்க இயலது எனில், ஒரு மொத்த தேசத்தையுமே முட்டாளாக மாற்ற துடிக்கும் மோடி-அமித் ஷா- பாஜகவை இந்த தேசம் ஒரு போதும் மன்னிக்காது.
இந்த உன்மைகளை கடைகோடி இந்தியவர் வரை கொண்டு செல்ல வேண்டியது இன்று நம் ஒவ்வொருவரின் கடமை….
குறிப்பு : இதுவரை அசாமின் அகதிகள் முகாமில் 28 பேர் போதிய உணவும் மருத்துவமும் இன்றி இறந்துபோயுள்ளனர். சிறைக்கைதிகளை போல வெளியுலகை காண இயலாமல் கட்டிட காட்டிற்குள் புதைப்பட்டுள்ளனர். அதில் ஆறு மாத கைக்குழந்தையும் அடக்கம்.
கணவனுக்கு அனுமதி கொடுத்து, மனைவியை முகாமில் அடைத்தும், ஒரு தாயின் இரு மகள்களில் ஒருவருக்கு அனுமதி கொடுத்து ஒருவரை முகாமில் அடைத்துள்ளனர். என்னமாதிரியான சட்டம் இது.
ஆக்கம்: முத்து கிருஷ்னன்