செப்டம்பர் 25 புதன்கிழமை அன்று மத்திய பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து கட்டிடத்தின் அருகே மலம் கழித்ததற்காக இரண்டு தலித் சமூகத்து சிறார்கள் அடித்து கொல்லப்பட்டுள்ளனர். இந்த 2 சிறார்கள் வீட்டிலும் கழிப்பறை வசதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது .அதற்கு காரணமும் மேல் ஜாதியினர் தான். யாதவ் தரப்பினர் பலியான குழந்தைகளின் வீடுகளில் கழிப்பறை கட்டுவதற்கு தடை விதித்துள்ளனர்.
இந்த குற்றத்திற்காக இரண்டு சகோதரர்களை போலீசார் கைது செய்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் பாவ்கேதி கிராமத்தில் காலை நேரத்தில் நடந்துள்ளது என்று சிர்சோடு காவல் நிலைய ஆய்வாளர் ஆர்.எஸ். தகாத் பி.டி.ஐ யிடம் தெரிவித்தார். கொலை செய்யப்பட்ட குழந்தைகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ள 2 சகோதரர்களான ஹக்கீம் யாதவ் மற்றும் ராமேஸ்வர் ஆகியோர் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். கொலை மற்றும் பட்டியல் சாதியினர்/பட்டியல் பழங்குடியினரின் (அட்டூழியங்களைத் தடுக்கும்) ஐபிசி பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நியூஸ் 18 செய்தி வெளியிட்டுள்ளது.
கொல்லபட்ட குழந்தைகள் 12 வயது ரோஷ்னி மற்றும் 10 வயது அவினாஷ் என அடையாளம் காணப்பட்டுளளது . இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து , மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்ததாகவும் காவலர் தகாத் தெரிவித்தார்.
அவினாஷின் தந்தை, மனோஜ் வால்மீகி, யாதவர்கள் குழந்தைகளை முன்பே திறந்த வெளியில் மலம் கழித்ததற்காக திட்டியதாகக் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறியுள்ளார். வால்மீகிக்கு வீட்டில் கழிப்பறை இல்லை, எனவே தான் அவ்வாறு குழந்தைகள் வெளியே மலம் கழித்துள்ளனர்.மேலும் இவரது குடும்பம் மட்டுமே ஊரில் உள்ள ஒரே தலித் குடும்பமாகும். தண்ணீர் பிடிக்கும் போதும் இவர்களுக்கு வரிசைமுறை மறுக்கப்படுகிறது.அனைவரும் சென்று விட்ட பின்னர் தண்ணீர் மீதம் இருந்தால் மட்டுமே இவர்களுக்கு கிடைக்கும்.
அக்டோபர் 2, 2018 அன்று அப்போதைய மத்திய பிரதேச பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மாநிலத்தில் திறந்த வெளியில் மலம் கழித்தல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது என்று இதற்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த ஒரு வருடம் முன்னதாக அறிவித்து விட்டார். அப்போதே இது குறித்து குணா எம்.பி.யாக, காங்கிரசின் ஜோதிராதித்ய சிந்தியா கேள்விகளை எழுப்பியிருந்தார். தற்போது மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.
எனினும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (குவாலியர் ரேஞ்ச்) ராஜபாபு சிங், “ஹக்கீம் யாதவ் மனரீதியாக நிலையற்றவர் என்றும், இந்த கொலை சம்பவத்திற்கும் திறந்த வெளியில் மலம் கழிப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும்” கூறினார்.
நியூயார்க்கில் ஸ்வச் பாரத் அபியனை வழிநடத்தியதற்காக கேட்ஸ் அறக்கட்டளையின் விருதை பிரதமர் நரேந்திர மோடி பெற்று கொண்ட சில மணி நேரங்களிலேயே குழந்தைகள் மீதான தாக்குதல் நடந்துள்ளது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய மோதி “ஸ்வச் பாரத் அபியன் திட்டத்தின் கீழ் 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. ” என்று கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக மத்திய பிரதேசத்தின் பாஜக மற்றும் காங்கிரஸ் அரசாங்கங்கள் இரண்டையும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
Courtesy&Image Credits:The Wire