வன்முறையைத் தடுக்கவும், டெல்லியில் இயல்புநிலையை மீண்டும் கொண்டுவரவும் மத்திய அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் புதன்கிழமை வலியுறுத்தி உள்ளார். மக்களின் சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டங்களை அடக்குவதற்கு சங்க பரிவார் எடுத்த நடவடிக்கையின் விளைவாக இந்த கலவரம் ஏற்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பினராயி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேசிய தலைநகரில் மக்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்கிறார்கள் எனவும் வெறுப்பு பிரச்சாரங்களும் அச்சுறுத்தும் நடவடிக்கைகளும் நடந்து வருவதாக பினராயி கூறியுள்ளார். வன்முறையின் பின்னணியில் உள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மத்திய உள்துறை அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளார்.
வீதிகளில் நடைபெற்று வரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களைஅடக்கி ஒதுக்கிவிட முடியும் என்ற சங்க பரிவாரின் குழாய் கனவுகளின் (pipe dreams) விளைவாக தான் டெல்லி கலவரம் ஏற்பட்டது. சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இந்தியாவின் ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற விழுமியங்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
டெல்லியில் அமைதியை மீண்டும் கொண்டுவர மதச்சார்பற்ற சக்திகள் முன்வர வேண்டும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்கள் கூட தாக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.வெறுப்பு பிரச்சாரம் செய்து, கலவரங்களைத் தூண்டிய பாஜக தலைவர் இன்னும் சுதந்திரமாக இருக்கிறார் என்பது கவலைக்குரிய விஷயம். மத வெறியுடன் கலவரங்களில் படையினரும் ஈடுபட்டுள்ளனர் என்பது சட்டத்தின் ஆட்சியின் கடுமையான சரிவைக் குறிக்கிறது.
மேலும் டெல்லியில் வசிக்கும் கேரள மக்கள் தங்கள் உயிர்கள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பு குறித்து கவலையில் உள்ளதாகவும், அவர்கள் அச்ச உணர்வை போக்கிட மத்திய அரசு ஆவன செய்யவேண்டும் எனவும் பினராயி கோரிக்கை வைத்துள்ளார்.