பாஜகவிடம் இருந்துதான் சிவசேனா விலகியதே தவிர, இந்துத்துவ கொள்கையிலிருந்து விலகிக்கொள்ளவில்லை’ என அயோத்தியில் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
பாஜகவின் கூட்டணியிலிருந்து வெளியேறி, என்.சி.பி கட்சியுடன் கூட்டணி வைத்து மகாராஷ்டிர முதல்வரான சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே அயோத்தியில் ராமா் கோயில் கட்ட ரூ. 1 கோடியை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தாா்.
அயோத்தியில் செய்தியாளா்ளிடம் பேட்டியளித்த உத்தவ் தாக்க்ரே. ‘நான் பாஜகவிடம் இருந்து தான் பிரிந்தேனே தவிர , இந்துத்துவ கொள்கையிலிருந்து பின்வாங்கவில்லை. பாஜகவும், இந்துத்துவமும் ஒன்றல்ல.
அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானத்திற்கு பங்களிப்பாக எனது அறக்கட்டளையிலிருந்து ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்குகிறேன்.
ஒரு முதல்வராகவோ அல்லது மகாராஷ்டிர அரசு சாா்பிலோ நான் இதை வழங்கவில்லை. என்னுடைய தனிப்பட்ட பங்களிப்பாக அளிக்கிறேன். ஏனென்றால் நான் ராம பக்தன்.
“நான் நேற்று யோகி ஜியுடன் பேசினேன், நிச்சயமாக நம் கோவிலைக் கட்டுவோம், மகாராஷ்டிராவிலிருந்து கோயில் கட்டுமானத்திற்கு உதவ வரும் ராம் பக்தர்கள் அயோத்தியில் தங்குவதற்காக இடம் அளிக்குமாறு அவரிடம் கேட்டுக் கொண்டேன். ” இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.