தெலுங்கானா: கடந்த மார்ச் 7 ஆம் தேதி பைன்சாவில் நடந்த இனக் கலவரத்தைத் தூண்டியது வலதுசாரி அமைப்பான இந்து வாகினி என்று தெலுங்கானா மாநில காவல்துறை (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது. இத்தீவிர இந்துத்துவா அமைப்பின் உறுப்பினர்களான தோட்டா மகேஷ் மற்றும் டட்டு படேல் ஆகிய இருவரால் கலவரம் தொடங்கி வைக்கப்பட்டதாக தெரிகிறது.
மார்ச் 7 ம் தேதி பைன்சா நகரில் வன்முறை வெடித்தது, இதில் மூன்று காவல்துறை அதிகாரிகள் உட்பட 12 பேர் காயமடைந்தனர். நான்கு வீடுகள், 13 கடைகள், நான்கு ஆட்டோரிக்ஷாக்கள், ஆறு நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஐந்து இரு சக்கர வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த வன்முறை சம்பவங்களுக்கு முக்கிய காரணமான இந்து வாகினி மாவட்டத் தலைவர் சந்தோஷை போலீசார் கைது செய்தனர்.
கலவரம் துவக்கிய இந்து வாகினி:
செவ்வாயன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய காவல்துறை (வடக்கு மண்டலம்) இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஒய் நாகி ரெட்டி, சம்பவம் நடந்த நாளில், இரவு 8.20 மணியளவில், டட்டு படேல் மற்றும் தோட்டா மகேஷ் ஆகிய இருவர் சுல்பிகர் மசூதிக்கு அருகே தனது நண்பர்களுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ரிஸ்வானை தாக்கி வம்புக்கு இழுத்துள்ளனர்.
பின்னர், ரிஸ்வான் தனது நண்பர்களுடன் சேர்ந்து இருவரையும் தேடிச் சென்றபோது, இந்து வாகினியின் உறுப்பினர்கள் அவர்களைத் தாக்கியுள்ளனர். இத்தோடு விடாமல் மீண்டும் டட்டு படேல் மீண்டும் சுல்பிகர் மசூதிக்கு அருகில் சென்று சண்டை வளர்த்துள்ளனர், இது இரண்டு மத குழுக்களுக்கு இடையே கல் வீசப்படுவதற்கு வழிவகுத்தது என்று போலீசார் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர சுமார் 500 கூடுதல் படைகள் பைன்சாவுக்கு விரைந்தன. கடைசியில் இரவு 10.30 மணியளவில் காவல்துறையினர் வன்முறையை முற்றிலுமாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். கூட்டம் கூடுவதை தடுக்க சிஆர்பிசி பிரிவு 144 ன் கீழ் காவல்துறை தடை உத்தரவுகளை அறிவித்தது, அதன் பின்னர்,வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று காவல்துறை தெரிவித்தனர்.
பாஜக எம்.பி மிரட்டல்:
பாஜக நிஜாமாபாத் பாராளுமன்ற உறுப்பினர் தர்மபுரி அரவிந்தின் அச்சுறுத்தல்களை அடுத்து காவல்துறை மேற்குறிப்பிட்டவாறு அறிக்கை வெளியிட்டது.
“டிஆர்எஸ் மற்றும் எய்ஐஎம்மின் அழுத்தத்தின் கீழ் காவல்துறை செயல்படுகிறது. இன்னும் சில நாட்களில் பாஜக ஒரு கூட்டத்தை நடத்தி தனது பலத்தை காட்ட வேண்டியிருக்கும். மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இந்து சமூகத்தை பைன்சாவில் கூட செய்வோம். வரும் நாட்களில், அதிக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும். எனவே நீங்கள் உடனடியாக உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளுங்கள். ” என போலீசாருக்கு மற்றும் மாநில அரசுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பாஜக எம்பி. பேசியுள்ளார்.
“150 இந்து அமைப்பின் உறுப்பினர்களை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். கைது நடவடிக்கைகள் உடனே நிறுத்தப்பட வேண்டும். இல்லையெனில், வரவிருக்கும் நாட்களில், இந்து சமூகம் ஒன்றுபட்டு கட்டவிழ்த்தினால், காவல்துறையினர் அதன் சுமைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அத்தகைய நிலைமைக்கு இட்டுச் செல்ல வேண்டாம் ”என்று சர்ச்சைக்குரிய எம்.பி. மிரட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
நிஜாமாபாத்தைச் சேர்ந்த பாரதீய ஜனதா கட்சி பாராளுமன்ற உறுப்பினரான அரவிந்த் தர்மபுரியை, தெலுங்கானா காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை வீட்டுக் காவலில் வைத்தனர். இந்த மோதல்கள் தொடர்பாக காவல்துறையினர் 13 வழக்குகளை பதிவு செய்து பாஜக தலைவர்கள் உட்பட பலரை கைது செய்தனர்.