CAA Hindutva NRC

ஹிந்து ராஷ்டிர சட்ட திருத்தம்! – ஸ்ரீதர் சுப்ரமணியம்.

குடியுரிமை (திருத்த) மசோதாவில் என்னதான் பிரச்சினை என்ற கேள்வி நிறைய பேருக்கு இருக்கிறது. ஹிந்துத்துவர்கள் இந்த சட்டத் திருத்தத்தை ஆவேசமாக ஆதரித்து, பல்வேறு லாஜிக்குகளை பயன்படுத்தி எழுதி வருகிறார்கள்.

‘பல்வேறு லாஜிக்குகள்’ என்பதுதான் சரியான பதம். ஏனெனில் ஒரே ஒரு லாஜிக் என்பது அதில் கிடையாது. பல்வேறு வகைகளில் வாதிட்டு மட்டுமே இதனை ஒப்பேற்ற வேண்டும். நேரடியாக ஒரே வாதத்தில் அவர்கள் கேட்பதானால், ‘ஆமாம், இது இந்து ராஷ்டிரம்தான். அதைத்தான் நாங்கள் நிறுவ முயற்சிக்கிறோம். இப்போது என்ன சொல்லுகிறாய்?’ என்றுதான் கேட்க வேண்டும்.

சரி, அப்படி முகத்தில் அடித்தாற்போல கேட்காமல் சுற்றி வளைத்தாவது வருகிறார்களே என்ற வரை நல்லது. அந்த அளவுக்கு இன்னமும் இவர்கள் வெட்கம் கெட்டுப் போய் விடவில்லை. அதுவரை ஆறுதல்.

அது ஒரு புறம் இருக்கட்டும், மசோதாவில் அப்படி என்னதான் பிரச்சினை என்று சிலர் கேட்கலாம். இந்த சட்டம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து மத-ரீதியாக ஒடுக்குமுறைக்கு ஆளாகி இந்தியாவுக்கு வரும் அகதிகளுக்கு குடியுரிமை கொடுக்கிறோம் என்று சொல்வதுதான். ஆனால் ஒரு நிபந்தனை : அந்த அகதிகள் முஸ்லிம்களாக இருக்கக் கூடாது.

அதுவும் சரிதானே, இவை எல்லாம் முஸ்லிம் நாடுகள்தானே, அங்கே எப்படி முஸ்லிம்கள் ஒடுக்குமுறைக்கு ஆளாவார்கள் என்று கேட்கலாம்.

பாகிஸ்தானில் நிறைய முஸ்லிம் பிரிவுகள் இருக்கின்றன. இவர்கள் நிறைய அடக்குமுறைகளுக்கு ஆளாகிறார்கள். சுன்னி பெரும்பான்மை தேசமான பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்களின் மசூதிகள், வசிப்பிடங்கள் தொடர்ந்து தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றன.

அஹமதியா, இஸ்மாயிலி :

அதிலும் குறிப்பாக அஹமதியா, இஸ்மாயிலி என்று இரண்டு பிரிவுகள் உள்ளன. பாகிஸ்தானிய சட்டம் இவர்களை முஸ்லிம்கள் என்றே கூட ஏற்றுக்கொள்வதில்லை. எனவே மசூதிகள் கட்டிக்கொள்ளவோ, பொதுவிடங்களில் வழிபடவோ இவர்களுக்கு அனுமதி இல்லை. அரசு வேலைகள் முதல் அரசு சலுகைகள் வரை இவர்களுக்கு மறுக்கப்பட்டு வருகின்றன. சொல்லப் போனால் பாகிஸ்தானிய இந்துக்களை விட கொடும் அடக்குமுறைக்கு ஆளாகி வருபவர்கள் இவர்கள். அப்படி கொடுமைகளை அனுபவிக்கும் அஹமதியாக்கள், இஸ்மாயிலிகள் இந்த சட்டத்தில் வர மாட்டார்கள்.

(இயற்பியலுக்கு நோபல் பரிசு பெற்ற அப்துஸ் சலேம் ஒரு அஹமதியா. இவரே பெரும் தொல்லைகளுக்கு உள்ளானார். ‘நோபல் பரிசு பெற்ற முதல் முஸ்லீம்’ என்று இவர் கல்லறையில் வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. பின்னர் அரசாங்கமே அதில் ‘முஸ்லீம்’ என்ற வார்த்தையை அழித்து விட்டது.)

அடுத்த பிரச்சினை இங்கே சேர்க்கப்பட்டிருக்கும் நாடுகள். ஏன் பூட்டான், மியான்மர், நேபாள் போன்ற நாடுகள் வரவில்லை என்ற கேள்விக்கு பதில் இல்லை. பூட்டானில் மத வழிபாட்டுக்கு சுதந்திரம் இல்லை. புத்த விகாரம் அல்லது ஹிந்துக்கோவில்கள் தவிர வேறு வழிபாட்டுத் தலங்கள் அங்கே கட்டிக்கொள்ள முடியாது. ஆனால் பூட்டான் இந்தப்பட்டியலில் இல்லை.

ரோஹிங்கியா :

மியான்மரில் வசிக்கும் முஸ்லீம் சிறுபான்மை இனத்தின் பெயர் ரோஹிங்கியா. அந்த தேசத்தின் இயற்கையான குடிகளில் ஒன்றாக இவர்கள் இருந்தாலும் இவர்களுக்கு அங்கே குடியுரிமை கிடையாது. சொல்லொணா அடக்குமுறைக்கு தொடர்ந்து ஆளாகி வருகிறார்கள். சமீபத்தில் கூட ராணுவத்தின் கொடும் தாக்குதல்களுக்கு தப்பி நிறைய பேர் பங்களாதேஷ் மற்றும் இந்தியா ஓடி வந்தார்கள். ஆயிரக்கணக்கானோர் அதில் இறந்தனர்.

ரோஹிங்கியா

ஆனால் இவர்கள் எல்லாம் இந்த சட்டத்தில் வர மாட்டார்கள். சொல்லப்போனால் மியான்மர் பிரிட்டிஷ் இந்தியாவின் அங்கமாக இருந்திருக்கிறது. சுதந்திரம் வரை பண்பாட்டு ரீதியாக இந்தியாவுடன் பின்னிப் பிணைந்தே இருந்திருக்கிறது. அதே சமயம், சட்ட மசோதாவில் இடம் பெற்றிருக்கும் ஆப்கானிஸ்தான் பிரிட்டிஷ் இந்தியாவுடன் இருந்ததில்லை. இந்தியாவுடன் எல்லையையும் பகிரவில்லை. இந்தியாவின் அண்டை நாடுகள் எனும் லிஸ்டிலேயே வரத் தகுதி இல்லாத நாடு இது. ஆயினும் அது இந்த சட்டத்தில் இருக்கிறது. ஆனால் இந்தியாவுடன் எல்லை பகிரும் பூட்டான், நேபாளம், மியான்மர் போன்றவை இந்தப்பட்டியலில் இல்லை.

உய்குர்:

அடுத்ததாக, சீனாவின் சிங்கியாங் மாகாணத்தில் விய்கர் (Uyghur) என்ற முஸ்லீம் சமூகம் வசிக்கிறது. (ஆங்கில ஸ்பெல்லிங்கை வைத்து இவர்களை ‘உய்குர்’ என்று பெரும்பாலோனோர் அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.) ரொஹிங்கியாக்களைப் போலவே இவர்களும் கொடும் அடக்குமுறைகளை சந்தித்து வருகிறார்கள். உரிமைகளுக்கு போராடும் விய்கர்களை மாபெரும் சிறை வளாகங்களில் அடைத்து வைத்து இருக்கிறது சீனா. வெளியே கேட்டால் இவற்றை ‘தொழிற் பயிற்சி மையங்கள்’ என்று அழைக்கிறார்கள். இந்தப் ‘பயிற்சி மையங்களுக்கு’ ஐரோப்பிய அமெரிக்க ஊடகவியலாளர்கள் திருட்டுத்தனமாக போய் போட்டோ எல்லாம் எடுத்துப்போட்டு, அவை சந்தி சிரித்தது தனிக்கதை. அக்சய் சின் பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்தது.

உய்குர்

ஆனால் இது சிங்கியாங்கின் ஒரு பகுதியாக சீனாவால் சொந்தம் கொண்டாடப்படுகிறது. இந்த சர்ச்சை இன்னமும் தீரவில்லை. (இது பறிபோனதற்குத்தான் இந்துத்துவர்கள் நேருவை விடாமல் திட்டி மூக்கை சிந்திக்கொண்டு இருக்கிறார்கள்.) அதாவது தங்கள் தேசத்தின் ஒரு பகுதி என்று இவர்கள் சொந்தம் கொண்டாடும் இடத்திலேயே ஒடுக்குமுறைக்கும் ஆளாகுபவர்களுக்கு குடியுரிமை கொடுக்க இவர்கள் தயாராக இல்லை.

அடுத்ததாக முஸ்லீம் பெரும்பான்மை தேசங்களில் ‘மத ரீதியாக ஒடுக்குமுறைக்கு’ ஆளாவது என்பது ஹிந்து, சீக்கியர்களுக்கு மட்டும் நடப்பதில்லை. மாற்றம், முன்னேற்றம் வேண்டி குரல் கொடுக்கும் முஸ்லிம்களும் ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்கள். அதே போல இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து விமர்சித்து, நாத்திகம் குறித்து இணையத்தில் எழுதிய நிறைய பேர் கொலையுண்டார்கள். ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக எழுதியவர்களுக்கும் குறி வைக்கப் பட்டார்கள். அதன் எதிரொலியாக கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான வலைப்பூ (blog) எழுத்தாளர்கள் ஐரோப்பிய தேசங்களுக்கு தப்பி அங்கே அடைக்கலம் பெற்றார்கள். இவர்களில் 75 விழுக்காட்டினர் முஸ்லிம்கள்தான். (இது பற்றி ஏற்கெனவே சில பதிவுகள் எழுதி இருக்கிறேன்.)

ஈழத் தமிழர்கள்:

கடைசியாக, ஈழத் தமிழர்கள். இதை எல்லாரும் சொல்லி விட்டார்கள் என்பதால் நான் அதிகம் உள்ளே போகவில்லை. ஆனால் எழுபதுகளுக்குப் பின் இந்தியாவின் அண்டை நாடுகள் முழுக்க பார்த்தால் கொடும் அடக்குமுறைக்கு உள்ளான ஒரே இந்து சமூகம் என்றால் அது ஈழத் தமிழர்கள்தான். சொல்லப்போனால் அறுபதுகளில் பாகிஸ்தானுடன் இருந்த பொழுது பங்களாதேஷில் அடக்குமுறை நடந்தாலும் சுதந்திரம் பெற்ற பிறகு தேசம் தன்னை செக்யூலராக அறிவித்துக் கொண்டு முடிந்த அளவு முன்னேற முயற்சி செய்து கொண்டிருக்கிறது. தஸ்லிமா நஸ்ரின் குறிப்பிட்ட இந்து எதிர்ப்பு போராட்டங்களும் கூட அயோத்தியில் மசூதி இடிக்கப்பட்ட போது அந்தக்கோபத்தில் பங்களாதேஷில் நடந்த கலவரங்கள்தான். அங்கே கலவரம் நடந்த அதே காலகட்டத்தில் இந்தியாவில் என்ன நடந்தது என்பது நமக்கே தெரியும்.

ஈழத் தமிழர்கள்

கடைசியாக ஒரு விஷயம்: வங்க தேச போருக்கு முன் பாகிஸ்தானிய ராணுவத்தின் கைகளில் வங்க தேச இந்துக்கள் பெரும் அடக்குமுறைக்கு ஆளானார்கள். அவர்கள் லுங்கியை எல்லாம் கழட்டி ‘காட்ட’ சொன்னார்கள் என்ற படங்களை பதிவிட்டு உணர்ச்சி பொங்க இந்துத்துவர்கள் எழுதி வருகிறார்கள். அது போருக்கு முன். ஆனால் இவர்கள் மாய்ந்து மாய்ந்து ஆதரிக்கும் இந்த சட்டமும் அதையேதான் செய்கிறது! ஒடுக்குமுறைக்கு தப்பி வீடு வாசலையெல்லாம் விட்டு ஓடி வரும் மக்களை லுங்கியை கழட்டி காட்ட சொல்கிறது. ஆகவே இவர்கள் எந்த அடக்குமுறையை பார்த்து உணர்ச்சி வசப்படுவதாக நடிக்கிறார்களோ அதே அடக்குமுறையை இவர்கள் இங்கே கட்டவிழ்த்து விட முயற்சிக்கிறார்கள்.

இதுதான் விஷயம். இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றும் முயற்சியின் இரண்டாம் அடி எடுத்து வைக்கப்பட்டு இருக்கிறது. முதல் அடி காஷ்மீரில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு விட்டது. அடுத்தது இது. மூன்றாவது அடி தேசிய குடிமக்கள் பதிவேடு – National Register of Citizens. இதுவும் நடைமுறைக்கு வந்தால், இந்தியாவிலேயே இருக்கும் சுமார் 20 கோடி முஸ்லிம்களும் தாம் இந்தியர்கள்தான் என்று நிரூபிக்க அலைய வேண்டி இருக்கும். இந்து பாகிஸ்தானாக இந்தியாவை மாற்றும் திட்டத்தின் அடுத்த கட்டம்தான் இது.

சரி, இந்து பாகிஸ்தானாக நாமும் மாறுவதில் என்ன தவறு என்று கேட்கலாம். பொருளாதாரத்தில் நாசமாய்ப் போவதில், மேலை நாடுகள் அடிக்கடி எச்சில் துப்பி, அதை வெட்கமின்றி துடைத்துக்கொண்டு கடப்பதில், சில நூற்றாண்டுகள் பின்னே போய் வசிப்பதில், தீவிரவாதத்துக்கு பிளாட் கட்டி கொடுப்பதில், நாடு நாடாக போய் திருவோடு ஏந்தி நிற்பதில், எந்த வெட்கம் மானமும் நமக்கும் இல்லை என்றால் நாமும் மாறலாம்.

அதெல்லாம் இல்லை, நவீன தேசமாக நாம் மாற வேண்டும். இந்தியாவை 22ம் நூற்றாண்டுக்கு கொண்டு போக வேண்டும், கடும் உழைப்பில் ஈட்டிய சமூகப்பொருளாதார முன்னேற்றங்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அவற்றை மேலும் பெருக்க வேண்டும் என்று விரும்பினால் இந்த சட்டத்தை கடுமையாக எதிர்க்க வேண்டும். பாமரத்தனமான பிற்போக்கு சிந்தனைகளோடு அரசு கொண்டு வர முயலும் இதனை தடுத்து நிறுத்த எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

ஆக்கம் : ஸ்ரீதர் சுப்ரமணியம்.