ஹைதராபாத் : முகமது நபியை அவதூறாகப் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே, தொடர் வெறுப்பு பேச்சுகளுக்கு பெயர்போன பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கை ஐதராபாத் போலீஸார் சற்று முன் கைது செய்தனர்.
நபிகளாரை இழிவாக பேசியதற்காக பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கிற்கு எதிராக ஹைதராபாத்தில் போராட்டங்கள் வெடித்தன, மேலும் அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
உள்ளூர் காவல்துறையினர் மற்றும் கமிஷனர் அதிரடிப்படை குழு மங்கள்ஹாட்டில் உள்ள எம்.எல்.ஏ வீட்டிற்கு வந்து அவரை கைது செய்தது.
ஐபிசி பிரிவு 153 ஏ, 295 ஏ மற்றும் பிற பிரிவுகளின் கீழ் டபீர்புரா மற்றும் ஷாஹினாயத்கஞ்ச் காவல் நிலைய எல்லையில் வழக்கு பதிவு செய்யப்பட்டதன் பேரில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையில் பேசியதற்காக எம்எல்ஏவை நாங்கள் கைது செய்துள்ளோம், அவர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்” என்று ஹைதராபாத் காவல்துறையின் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.