Alleged Police Brutalities Indian Judiciary Muslims Pogrom

ஹாசிம்புரா இனப்படுகொலை: 42 முஸ்லீம்களை ஈவு இரக்கமின்றி ரோட்டில் வைத்து சுடுகொல்லபட்ட கொடூரம்!

உ.பி. மாநிலம் மீரட் நகரில் உள்ள ஹாசிம்புராவில் நடந்த முஸ்லீம் படுகொலையை மோடியின் குஜராத்தில் நடந்த முஸ்லீம் பெருந்திரள் படுகொலையின் முன்னோடி எனலாம். போலீஸ், இராணுவம் உள்ளிட்ட மொத்த அரசு இயந்திரமும் ஆர்.எஸ்.எஸ்ஸாக மாறி நடத்திய படுகொலை என விமர்சிக்கப்படும் இப்படுகொலையின் தொடக்கப்புள்ளியாக இரண்டு சம்பவங்கள் அமைந்தன.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஷா பானு என்ற வயதான, கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட தாய், ஜீவனாம்சம் தரக்கோரி தொடுத்த வழக்கில் உச்சநீதி மன்றம் அவருக்குச் சாதகமான தீர்ப்பை ஏப்ரல் 1985-ல் அளித்தது. அப்பொழுது ராஜீவ் காந்தி தலைமையில் இருந்த காங்கிரசு அரசு, உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யும் விதத்திலான சட்டமொன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றத் தயாரானது.

இச்சட்டம் 1986 மே மாதத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாகவே, பாபர் மசூதி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ராமர் சிலையை அவ்வளாகத்தினுள் சென்று வழிபடுவதற்கு இந்துக்களை அனுமதிக்குமாறு உத்தரவிட்ட பைசலாபாத் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று, 1986 பிப்ரவரியில் பாபர் மசூதி வளாகம் திறந்துவிடப்பட்டது.

முஸ்லீம் தாய்மார்கள்:

உத்திர பிரதேச ஆயுதப்படை போலீசாரால் படுகொலை செய்யப்பட்ட தமது அன்புக்குரியவர்களின் புகைப்படங்களுடன் முசுலீம் தாய்மார்கள் (கோப்புப் படம்)

முசுலீம் தாய்மார்கள்

இந்த இரண்டு நிகழ்வுகளும் மதவெறி அரசியல் செழித்து வளர்வதற்கான வாய்ப்புகளைத் திறந்துவிட்டன. குறிப்பாக, வெகுகாலமாகப் பூட்டப்பட்டுக் கிடந்த பாபர் மசூதி வளாகத்தை ராமர் வழிபாட்டுக்காகத் திறந்துவிட்ட நிகழ்வு, ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறிக் கும்பலுக்குத் தமது நிகழ்ச்சிநிரலை மேலும் வன்மத்தோடு எடுத்துச் செல்வதற்கு உந்து விசையாகப் பயன்பட்டது. அக்கும்பல் இந்தி பேசும் வடமாநிலங்களில், “அறம் காப்போம், ஆலயம் காப்போம்” என்ற முழக்கத்தை முன்வைத்து, ஊர்வலங்களையும், ரத யாத்திரைகளையும் நடத்தி, எந்நேரத்திலும் இந்து-முஸ்லீம் கலவரம் வெடிக்கலாம் என்ற முறுகல் நிலையை ஏற்படுத்தி வந்தது.

இச்சூழ்நிலையில்தான் உ.பி. மாநிலத்திலுள்ள மீரட் நகரில் 1987 ஏப்ரல், மே மாதங்களில் இந்து-முஸ்லீம்களிடையே அடுத்தடுத்து மோதல்களும், கலவரங்களும் நடந்தன. அதில் இரு தரப்பிலும் சொத்துக்களுக்கும், தொழில்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டதோடு, கணிசமான உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டன. உ.பி.யை ஆண்டு வந்த காங்கிரசு அரசு ஒருபுறம் இம்மோதலில் குளிர்காய்ந்துகொண்டே, இன்னொருபுறம் இந்து மதவெறிக்குச் சார்பாக ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டது.

முஸ்லீம்களுக்கு பாடம் புகட்ட:

அச்சமயத்தில் மீரட் நகரையும் உள்ளடக்கிய காசியாபாத் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளராக இருந்த விபூதி நாராயண் ராய் இப்படுகொலை பற்றி நினைவுகூர்கையில்,

“போலீஸ் மற்றும் பிரதேச ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர்களுள் பெரும்பாலோர் இந்துக்களாக இருந்ததோடு, அவர்கள் அனைவரும் கலவரத்திற்குக் காரணம் முஸ்லீம்கள்தான் என்று நம்பினர். மீரட் மினி பாகிஸ்தானாக மாறிவிட்டதென்றும், முஸ்லீம்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டியது அவசியமானது என்றும் அவர்கள் கருதி வந்ததாக”க் குறிப்பிட்டிருக்கிறார்.

பிரதேச ஆயுதப்படை போலீஸ் ஹாசிம்புராவைச் சேர்ந்த 42 முஸ்லீம்களைச் சுட்டுப் படுகொலை செய்ததற்கு அடிப்படையாக இருந்தது இந்து மதவெறிதான் என்பதற்கு விபூதி நாராயணின் இந்த வாக்குமூலத்திற்கு அப்பால் வேறு சான்றுகள் தேவையில்லை.

முஸ்லிம்களை சுற்றிவளைத்த பிரதேச ஆயுதப் படை:

1987, மே 22 அன்று மீரட் நகரில் முஸ்லீம்கள் நெருக்கமாக வாழ்ந்துவந்த ஹாசிம்புரா பகுதியைச் சுற்றிவளைத்த பிரதேச ஆயுதப் படையைச் சேர்ந்த 41 ஆவது பாட்டாலியன் பிரிவு, முசுலீம்கள் அனைவரையும் வீட்டைவிட்டு வெளியேறுமாறும், தவறினால் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்றும் உத்தரவிட்டது. வீட்டைவிட்டு வெளியேறிய ஆண்,பெண், குழந்தைகள், முதியவர்கள் அனைவரும் நடுத்தெருவில் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டனர்.

காலியாக இருந்த வீடுகளினுள் புகுந்து தேடுதல் வேட்டை நடத்திய ஆயுதப் படை போலீசார் வீட்டினுள் இருந்த உடமைகளைச் சேதப்படுத்தியதோடு, பணம், நகைகளைக் கொள்ளையடித்தனர். துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்ட முஸ்லீம்களுள் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் தனியாகவும் இளவயது முஸ்லீம்கள் தனியாகவும் பிரிக்கப்பட்டனர். இளவயது முஸ்லீம்களுள் 42 பேர் பிரதேச ஆயுதப் படை போலீசாரால் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றப்பட்டுக் கடத்திச் செல்லப்பட்டனர். இன்னுமொரு 324 பேர் அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டனர்.

டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் குண்டடிபட்ட தடயத்தைக் காட்டும் முகமது உஸ்மான்.
டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் குண்டடிபட்ட தடயத்தைக் காட்டும் முகமது உஸ்மான்.

ஒருவர் பின் ஒருவராகச் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரம்:

சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டு, கடத்திச் செல்லப்பட்ட 42 பேரில் ஒரு பகுதியினர் முராத் நகரில் உள்ள மேல்கங்கை கால்வாய் பகுதியில் நிற்க வைத்து ஒருவர் பின் ஒருவராகச் சுட்டுக் கொல்லப்பட்டு, அவர்களின் சடலங்கள் அக்கால்வாயில் வீசியெறியப்பட்டன. மற்றொரு பகுதியினர் மகான்பூர் பகுதியில் உள்ள ஹிண்டன் கால்வாய் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டு வீசியெறியப்பட்டனர்.

இதே சமயத்தில் போலீஸ் நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட 324 பேரும் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, மீரட் மற்றும் ஃபதேகர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். அங்கும் அவர்கள் தாக்கப்பட்டதில் ஐந்து முஸ்லீம்கள் ஃபதேகர் சிறையிலேயே மரணமடைந்தனர். மேலும், மலியானா என்ற கிராமத்தில் பிரதேச ஆயுதப் படை நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் இருபதுக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்.

கொடூர படுகொலைகள்:

முராத் நகர் மேல்கங்கை கால்வாய் கரையிலும் ஹிண்டன் கால்வாய் கரையிலும் சுடப்பட்ட 42 பேரில் ஆறு பேர் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தனர். இவர்களுள் நால்வர் முராத் நகர் போலீஸ் நிலையத்திலும், இருவர் இணைப்புச் சாலை போலீசு நிலையத்திலும் கொடுத்த புகாரையடுத்துதான் இப்படுகொலை சம்பவம் அம்பலத்திற்கு வந்தது.

ஹாசிம்புரா படுகொலைகள்
படுகொலைக்கு முன்பு : ஹாசிம்புராவைச் சேர்ந்த முசுலீம்களை, தமது வீடுகளிலிருந்து இராணுவச் சிப்பாய்களால் துப்பாக்கி முனையில் இழுத்து வரப்பட்டு, சாலையில் கைகளைத் தூக்கியவாறு உட்கார வைக்கப்பட்டுள்ள பயங்கர காட்சிகள்.

எனினும், படுகொலை நடந்த சமயத்தில் ஆட்சியிலிருந்த காங்கிரசு அரசும், அதற்குப் பின் வந்த சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி அரசுகளும் 36 அப்பாவி முஸ்லீம்களை பச்சைப் படுகொலை செய்த போலீசாரைத் தண்டனையிலிருந்து காப்பாற்றுவதில்தான் குறியாக நடந்துகொண்டன.

போலீசாருக்கு பதவி உயர்வுகள்:

இப்படுகொலை நடந்த இரண்டாவது நாளே உ.பி. மாநில அரசின் சி.பி.சி.ஐ.டி. பிரிவு விசாரணையைத் தொடங்கிவிட்டாலும், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகுதான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பிரதேச ஆயுதப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்டு 60 பேரை சி.பி.சி.ஐ.டி.

போலீசார் தமது விசாரணையில் குற்றவாளிகளாக அடையாளம் காட்டியிருந்தாலும், உ.பி. மாநில அரசு 19 கீழ்நிலை போலீசார் மீது மட்டுமே வழக்கு தொடர அனுமதியளித்தது. இவர்களுள் 16 பேர் மீதுதான் கொலைக்குற்றம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டன. எனினும், இந்த 19 பேரும் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படவில்லை. மாறாக, அவர்களுக்குப் பதவி உயர்வுகள் தடையின்றி வழங்கப்பட்டன.

ஹாசிம்புரா படுகொலைகள்:

ஹாசிம்புரா படுகொலைகள்
அரசு பயங்கரவாத குற்றவாளிகளை விடுதலை செய்த தீர்ப்பைக் கண்டித்துத் தன்னார்வ அமைப்புகள் டெல்லியில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

குற்றவாளிகளுள் ஒருவரும் ஆஜர் ஆகவில்லை:

1996-ல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உ.பி. மாநில காசியாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கியபோதும், இக்குற்றவாளிகளுள் ஒருவர்கூட அந்நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர்கள் தலைமறைவாகிவிட்டதாக நீதிமன்றத்தில் புளுகியது, உ.பி மாநில அரசு. மேலும், இப்படுகொலை குறித்த தடயங்கள் ஒவ்வொன்றும் – படுகொலை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் தொடங்கி, முதல் தகவல் அறிக்கைகள் உள்ளிட்டு அனைத்தும் அழிக்கப்பட்டன அல்லது காணாமல் போகச் செய்யப்பட்டன.

Image

குற்றவாளிகள் அனைவரும் விடுதலை:

இந்நிலையில்தான் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போராடிவந்த ஹாசிம்புரா பாதுகாப்பு கமிட்டி, “இந்த வழக்கு காசியாபாத்தில் நடந்தால் நீதி கிடைக்காது; எனவே, வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்” என்று கோரி உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்ததை யடுத்து, இவ்வழக்கு டெல்லிக்கு மாற்றப்பட்டது. 2002-ல் வழக்கு மாற்றப்பட்ட சமயத்தில் முக்கிய சாட்சியங்களுள் பெரும்பாலோர் இறந்துவிட்டிருந்தனர். முக்கிய தடயங்களும் அழிக்கப்பட்டிருந்தன. டெல்லி நீதிமன்றத்திலும் பதின்மூன்று ஆண்டுகளாக வழக்கு இழுத்தடிக்கப்பட்டு, இறுதியில், “சந்தேகத்தின் பலனைக் குற்றவாளிகளுக்கு அளித்து அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து” தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

6 பேர் ஆயுதப் படை போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டது உண்மை:

“ஹாசிம்புராவைச் சேர்ந்த 42 முஸ்லீம்கள் பிரதேச ஆயுதப் படை வேனில் கடத்திச் செல்லப்பட்டது உண்மை. அம்முஸ்லீம்களுள் 36 பேர் ஆயுதப் படை போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதும் உண்மை” என ஒப்புக்கொண்டுள்ள நீதிமன்றம், “குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டவர்கள்தான் அந்தப் படுகொலையைச் செய்தார்கள் என்பதை அரசு தரப்பும் சாட்சியங்களும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கவில்லை” எனக் கூறி குற்றவாளிகளை விடுதலை செய்திருக்கிறது.

படுகொலையைச் செய்தது பிரதேச ஆயுதப் படைதான் என்பதை ஏற்றுக்கொண்டுள்ள நீதிமன்றம், “அப்படையைச் சேர்ந்த வேறு யார் இப்படுகொலையைச் செய்தது? உண்மையான குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தாமல் அரசு அவர்களைப் பாதுகாப்பது ஏன்?” என்ற கேள்விகளை எழுப்ப வாய்ப்பிருந்தும் அவற்றை உள்நோக்கத்தோடு புறக்கணித்துவிட்டது. மாறாக, தப்பிப் பிழைத்தவர்கள் அளித்த சாட்சியங்களில் காணப்படும் குறைபாடுகளைப் பூதக்கண்ணாடி கொண்டு ஆராய்ந்து, அவற்றை வஞ்சகமாக ஒதுக்கித் தள்ளிவிட்டது.

பிரதேச ஆயுதப் படை போலீசார், தமது அடையாளத்தை மறைக்கும்படி தலைக்கவசம் அணிந்துகொண்டுதான் இப்படுகொலையைச் செய்துள்ளனர். இப்படுகொலையில் தப்பிப் பிழைத்து சாட்சியம் அளித்தவர்கள், தாம் துப்பாக்கியின் முன் நிறுத்தப்பட்டபொழுது உயிர் பயத்திலும் பதற்றத்திலும் போலீசாரின் அடையாளத்தை கவனித்திருக்க மாட்டார்கள். அப்படியே கவனித்திருத்தாலும், படுகொலை நடந்து இருபது ஆண்டுகள் கழித்து குற்றவாளிகளை அச்சுப்பிசகாமல் அடையாளம் காட்டுவது அசாத்தியமானது.

மேலும், வழக்கின் முக்கியமான தடயங்கள் அனைத்தும் அரசால் திட்டமிட்டு அழிக்கப்பட்டிருந்தன. இப்படிப்பட்ட நிலையில் நீதிமன்றம் சந்தர்ப்ப சாட்சியங்களைக் கொண்டு குற்றவாளிகளைத் தண்டித்திருக்க முடியும். ஆனால், முக்கிய தடயங்கள் அழிக்கப்பட்டது, சாட்சியங்கள் குற்றவாளிகளைச் சந்தேகத்திற்கிடமின்றி அடையாளம் காட்டத் தவறியது – என ஒவ்வொன்றையும் குற்றவாளிகளுக்குச் சாதகமாக்கித் தீர்ப்பு அளித்திருக்கிறது, டெல்லி நீதிமன்றம்.

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அப்சல் குருவைத் தண்டிப்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லாதபோதும், சமூகத்தின் கூட்டு மனசாட்சியைத் திருப்திபடுத்துவதற்காக அவருக்குத் தூக்கு தண்டனையை உறுதி செய்தது, உச்சநீதி மன்றம். இந்த வழக்கிலோ பாதிக்கப்பட்ட முஸ்லீம்களின், 28 ஆண்டுகளாக நீதிமன்றத்தை நம்பியிருந்தவர்களின் மன உணர்வுகளை நீதிமன்றம் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு ஒரு நியாயமான தீர்ப்பை வழங்க வேண்டும் என்ற நியாய உணர்வுக்கு பதிலாக, குற்றவாளிகளைத் தப்ப வைக்க வேண்டும் என்ற காவி உணர்வோடு நீதிமன்றமும் செயல்பட்டிருப்பதை இத்தீர்ப்பு எடுத்துக்காட்டுகிறது.

கடந்த இருபது, இருபத்தைந்து ஆண்டுகளில் நாடெங்கும் நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் போலீசாரால் எவ்வித ஆதாரமுமின்றித் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டு, போலி மோதல்களில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இக்கொலை வழக்குகளுள் ஒருசில, நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்து வருகின்றன. இந்த நிலையில் ஹாசிம்புரா குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டிருப்பது போலீசார் இந்து மதவெறியோடு நடத்திவரும் படுகொலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆசிர்வாதமேயாகும்.

அநீத தீர்ப்பு:

தமக்கு இழைக்கப்பட்ட கொடூரமான அநீதிக்கு நீதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் 28 ஆண்டுகளாகக் காத்திருந்து, அதற்காகப் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு, அதற்காகப் போராடி வந்தவர்களை எள்ளிநகையாடும் விதத்தில் இன்னொரு அநீதி இழைக்கப்படும்பொழுது, அத்துயரத்தை எந்தவொரு வார்த்தையாலும் எடுத்துச் சொல்ல முடியாது.

https://twitter.com/arbabali_jmi/status/1528258332435263489

1987-ல் நடந்த ஹாசிம்புரா முஸ்லீம் படுகொலை வழக்கில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருந்த இந்து மதவெறி பிடித்த போலீசார் அனைவரையும் விடுதலை செய்து டெல்லி நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு அநீதியானது மட்டுமல்ல, நீதிமன்றங்கள் உள்ளிட்டு அரசு இயந்திரத்தின் அனைத்துக் கூறுகளும் ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறி பாசிசத்தின் கைக்கூலியாகச் செயல்படுவதன் அடையாளமும் ஆகும்.

செல்வம் (புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2015 இல் வெளியான கட்டுரை சிறிய மாறுதல்களுடன்.