Gujarat Muslims

குஜராத் இனக்கலவரம் நடந்து 18 ஆண்டுகளுக்கு பின்னும் சொல்லொண்ணா துயரில் முஸ்லிம்கள்!

பாஜக-மோடி ஆட்சியில் 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனக்கலவரத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சுமார் 17,000 முஸ்லிம்கள் இன்றளவும் துன்பங்களைச் சுமந்து மாநில, மத்திய அரசுகளின் உதவியை எதிர்பார்த்து துயர வாழ்க்கையில் உழல்கின்றனர்.

மிக மோசமான நிலையில் முஸ்லிம்கள்:

இனக்கலவரத்தால் தங்களுடைய வசிப்பிடங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட மிக ஏழ்மையான  முஸ்லிம்கள், மறுவாழ்வு மையம் என்ற பெயரில் மனிதன் வாழ்வதற்கே தகுதியற்ற வகையில் அமைக்கப்பட்ட சிதிலமடைந்த தற்காலிக கூடாரங்களில் அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.

 அத்தகைய சில குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 500 நபர்கள் கடந்த வாரம் குஜராத்தில் வடக்கு மஹேசனா மாவட்டம் கடி தாலுகாவில் உள்ள நந்தசன் கிராமத்தில் ஒன்று கூடி, நீண்ட காலமாக அரசால் புறக்கணிக்கப்பட்டு வரும் தங்களுடைய பல கோரிக்கைகளில் பிரதானமான 3 கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

அடிப்படை வசதிகளும் இல்லை:

தங்களுடைய மறுவாழ்விற்கான விரிவான திட்டத்தை இனிமேலாவது வகுத்து வீடு, கல்வி, அடிப்படை வசதிகள், வாழ்வாதாரம், சுகாதாரம், அடிப்படை உரிமை போன்றவற்றை தங்களுக்கு உறுதி செய்யுமாறு மத்திய,மாநில அரசுகளை அழுத்தமாக வலியுறுத்துவதென முடிவெடுத்துள்ளனர்.

ஐ.நா-வால் அறிவிக்கப்பட்டு, ஆனால் இந்தியாவில் பெரிதாகக் கண்டு கொள்ளப்படாமல் கடந்து சென்ற “மதம்-நம்பிக்கைகளின்  அடிப்படையிலான கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்வதற்கான சர்வதேச தினம் – UN-declared International Day to Commemorate the Victims of Violence Based on Religion or Beliefs”-ஐ முன்னிட்டு ” சிறுபான்மையினர் ஒருங்கிணைப்புக் குழு – Minority Coordination Committee (MCC)”ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.அதில் கலந்து கொண்ட பல ஆண், பெண்கள் குஜராத் முஸ்லிம்களுக்கு எதிராக மூன்று மாதகாலம் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான இனப்படுகொலையில் தங்களுடைய குடும்பத்தினர், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்ததை கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்டனர்.

” இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்தவர்களுக்காக மாநில அரசு சுட்டு விரலைக் கூட அசைக்கவில்லை. உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான தற்காலிக குடியிருப்புகள் கூட ஜமாஅத்தே இஸ்லாமி, இஸ்லாமிய நிவாரணக் குழு, அஹமதாபாத் சர்வஜனிக் வெல்ஃபேர் ட்ரஸ்ட் போன்ற தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும், தனிநபர் கொடையாளிகள் மூலமாகவுமே அமைக்கப்பட்டன”,

என MCC நிர்வாகியான முஜாஹித் நஃபீஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 தற்போதைய பிரதமரான நரேந்திர மோடி குஜராத்தில் முதல்வராக இருந்த 2002 ஆம் ஆண்டு மோடியின் கண்காணிப்பில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையில் ஆண்கள், கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைகள் உட்பட சுமார் 2000 பேர் கொல்லப்பட்டனர்; 2 லட்சம் பேர் வீடிழந்தனர்; 302 தர்காக்கள், 209 பள்ளிவாசல்கள், 13 கல்விக்கூடங்கள் இடித்துத் தகர்க்கப்பட்டன; முஸ்லிம்களுக்குச் சொந்தமான சுமார் 2.5 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அழிக்கப்பட்டன.

வஹாப் அன்சாரி

  “இடம் பெயர் தொழிலாளர்களுக்கு இடம் வழங்கும் குஜராத் அரசு, அரசின் துணையுடன் நடத்தப்பட்ட இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு வசிப்பிடம் வழங்குதைப் பற்றி நினைக்கவே இல்லை“, என வருத்தம் தெரிவித்தார் வஹாப் அன்சாரி என்ற சமூக சேவகர்.

  “பாசிச இனக்கலவரக்காரர்களால்  முஸ்லிம்ளுடைய சொத்து ஆவணங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டதால் தற்போது அவர்களால் லோன் கூட பெற இயலவில்லை“, என விவரித்தார் சமூக சேவகரான முஹம்மது கசம் வோரா.

தற்போது அச்சு ஊடகம், மின்னணு ஊடகம், சமூக ஊடகங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான விரோதப் போக்கை உமிழ்வோர் மீது குஜராத் உயர்நீதிமன்ற வழக்கறிஞரான சம்சாத் பதான் நடத்தும் “சிறுபான்மையினர் உரிமை அமைப்பு (Minority Rights Forum)” மூலமாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆயினும்  நிர்வாகத்தில் ஊடுருவியுள்ள பாசிச சிந்தனையில் ஊறிப்போன கயவர்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என குற்றச்சாட்டு வைகபடுகிறது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலைமைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சம்ஷாத் பதான் ஆதங்கம்

 காங்கிரஸின் முன்னாள் குஜராத் மாநிலத்தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான திரு.அர்ஜுன் மொத்வாடியா அவர்கள், ” இனக்கலவரத்தால் துரத்தப்பட்டவர்கள், நர்மதா அணைக்கட்டால் பாதிக்கப்பட்டவர்கள், பட்டேல் சிலையால் அப்புறப்படுத்தப்பட்ட மக்கள் என யாருக்குமே மறுவாழ்வு அளிக்கும் எந்த திட்டமுமே குஜராத் அரசிடம் இல்லை”, என குற்றம் சுமத்துகிறார்.

ஆக மொத்தம் பல்வேறு தன்னார்வு அமைப்புகள் முயற்சிகள் மேற்கொண்டாலும் இன்று வரை பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கவில்லை, படுமோசமான நிலையில் தொடர்ந்து  அவர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பது விமர்சகர்களின் கருத்து.