கடந்த பிப்ரவரி 9 அன்று, கோவாவில் உள்ள கத்தோலிக்க சமூகத்தின் பேராயர் குடியுரிமை திருத்த சட்டம், 2019 க்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். “சிஏஏ சட்டத்தை உடனடியாகவும், எந்த நிபந்தனையுமின்றியும் ரத்து செய்ய வேண்டும். என்.பி.ஆர் மற்றும் என்.ஆர்.சி ஐ செயல்படுத்துவதை கைவிட வேண்டும்” என்று அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கிறது அந்த அறிக்கை. எனினும் அறிக்கை பரவலாக மீடியாக்களால் கொண்டு செல்லப்படவில்லை.
இந்த திருச்சபையின் நிலைப்பாடானது, கோவாவின் சட்டமன்றத்தின் எட்டு கத்தோலிக்க உறுப்பினர்களின் அரசியல் செல்வாக்கில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது, ஏற்கனவே அவர்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் காங்கிரசிலிருந்து ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு மாறியவர்கள்.
கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கோவா மக்கள்தொகையில் 26 சதவிகிதம் உள்ளனர். எனவே இந்த திருச்சபையின் முடிவு எம்.எல்.ஏ களுக்கு கடும் பின்னடைவாக அமைந்துள்ளது. திருச்சபையின் ஆதரவை பெறவும் வேண்டும், அதே சமயம் பாஜக கட்டளைகளை ஏற்கவும் வேண்டும் என்பதால் செய்வதறியாது திகைத்து உள்ளனர் கத்தோலிக்க பாஜக எம்.எல்.ஏக்கள்.