அஞ்சுமன்-இ-இஸ்லாம் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், கர்நாடகாவின் ஹுப்பள்ளியில் உள்ள ஈத்கா மைதானத்தில் விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்கள் திட்டமிட்டபடி நடத்தலாம் என அனுமதி அளித்தது.
உயர்நீதிமன்றம் தீர்ப்பு:
ஹுப்பள்ளி ஈத்கா மைதானத்தில் விநாயகர் பந்தல் அமைக்க கர்நாடக உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தது.
நீதிபதி அசோக் எஸ் கினகி தலைமையிலான பெஞ்ச் இரவு 11.30 மணிக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ஹுப்பள்ளி மைதானம் தொடர்பாக ‘சொத்து தகராறு ஏதும் இல்லை” என்றும் , அதனால் பெங்களூரு ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த வழக்கில் பொருந்தாது எனவும் தீர்ப்பு அளித்தது.
சிறுக சிறுக பறிப்போகும் ஈத்கா? :
சர்ச்சையாக்கப்பட்டுள்ள ஈத்கா மைதானம் ஹூப்பள்ளி-தார்வாட் சிட்டி கார்ப்பரேஷனின் கீழ் இருப்பதாகவும், மனுதாரர் (அஞ்சுமன்-இ-இஸ்லாம் எனப்படும் உள்ளூர் முஸ்லிம் அமைப்பு), ரம்ஜான் மற்றும் ஈதுல் அல்ஹா ஆகிய இரண்டு சந்தர்ப்பங்களில் வெறுமென மைதானத்தைப் பயன்படுத்த உரிமம் பெற்றவர் மட்டுமே என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்தது. குறித்த மைதானம் வாகனங்களை நிறுத்துவது உள்ளிட்ட வழக்கமான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும், அது வழிபாட்டு தலமல்ல எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்துத்துவா அமைப்பினருக்கு சார்பாக மாநகராட்சி?:
ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த அனுமதி வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், மைதானத்தில் விநாயகப் பந்தல் அமைக்க அனுமதித்ததன் மூலம், (முஸ்லிம்) ‘வழிபாட்டுத் தலம்’ என்ற நிலையை மாற்ற நகராட்சி ஆணையர் முயற்சிப்பதாக மனுதாரர்கள் தெரிவித்தனர். எனினும், மனுதாரருக்கு சொத்து சொந்தமானது இல்லை என்றும், கர்நாடகா முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டத்தின்படி, தற்காலிகமாக சொத்தை பயன்படுத்த மட்டுமே மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது என்றும் மாநகராட்சி நீதிமன்றத்தில் தெரிவித்தது.
“ஈத்கா மைதானம் வக்பு வாரியத்தின் சொத்து என்று 1965-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தற்போதைய முடிவு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல, மேலும் இந்த உத்தரவு நீதிமன்ற அவமதிப்புக்கு சமம்” என்று வக்ஃப் வாரியத்தின் தலைவர் ஷஃபி சாதி கூறினார்.
பெங்களூரின் வரைபடம் மற்றும் 1871 & 1938 ஆம் ஆண்டு ஆவணங்கள், தி குயின்ட் ஊடகத்தின்படி அங்கு ஈத்கா மற்றும் இடுகாடு இருப்பதைக் காட்டுகிறது என தெரிவித்துள்ளது.
நீதிபதி கினகியின் தீர்ப்பால் ஈத்காவில் விநாயகர் சதுர்த்தி:
ஹூப்பள்ளி-தர்வாத் நகர மாநகராட்சி (HDMC) நகரின் ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை மூன்று நாட்களுக்கு அனுமதித்து உத்தரவு பிறப்பித்தது. இது மைதானத்தில் விநாயகர் சிலையை நிறுவக் கோரிய இந்து தரப்பு கொண்டாட்டத்தைத் தூண்டியது. ஆறு இந்து அமைப்புகள் விநாயகர் சிலையை நிறுவ அனுமதி கோரியிருந்தன, அவற்றில் ஒன்றுக்கு HDMC அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக, ஆகஸ்ட் 26 அன்று, பெங்களூரு சாமராஜப்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானத்தைப் பயன்படுத்துவதைப் பற்றி மாநில அரசு முடிவு எடுத்துக்கொள்ளலாம் என கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சின் உத்தரவை நீதிபதி கினகி மேற்கோள் காட்டி, ஈத்கா மைதானத்தில் விநாயகர் சிலைகளை நிறுவ இந்து அமைப்புகள் அளித்த விண்ணப்பங்களை பரிசீலிக்க தார்வாட் நகராட்சி ஆணையருக்கு நீதிபதி கினகி அனுமதி அளித்தார்.
“குறிப்பிட்ட காலத்திற்கு சம்பந்தப்பட்ட மைதானத்தில் சமய மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்துதல் போன்றவற்றிற்காக பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து, சட்டத்தின்படி உரிய உத்தரவை பிறப்பிக்க கமிஷனருக்கு அனுமதி உண்டு” என நீதிபதி கினகி செவ்வாய்கிழமை முன்னதாக கூறினார்.
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் உயர்நீதிமன்ற உத்தரவு:
கடந்த செவ்வாயன்று பெங்களூரு சாமராஜ்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் நள்ளிரவில் நீதிபதி கினகியின் உத்தரவால் ஈத்கா மைதானத்தில் விநாயகர் விழா நடைபெற்று வருகிறது.