இன்று இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சூரிய கிரகணம் தெரிந்தது. சூரிய கிரகணம் என்பது ஒரு விஞ்ஞான நிகழ்வே,ஆனால் இதையொட்டி பல்வேறு மூட நம்பிக்கையில் ஊறியவர்களாக மக்களை காண முடிகிறது.
கிரகணத்தின் போது சாப்பிடக்கூடாது, பயணம் செய்யக்கூடாது போன்ற மூட நம்பிக்கைகளாவது ஜீரணிக்க முடிகிறது. ஆனால் கர்நாடகாவில் காலாபுராகி பகுதியில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சிலரை கழுத்து/தலை மட்டும் வெளியே தரும் விதத்தில் பெற்றோரே மண்ணில் புதைத்து சித்திரவதை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுளளது.
கலாபுராகி நகரத்தின் புறநகரில் உள்ள தாஜ்சுல்தான்பூர் கிராமத்தில் சூரிய கிரகணத்தின் போது (8.00 A. M. முதல் 11.05 A. M வரை) மூன்று குழந்தைகள் சஞ்சனா (4), பூஜா கயாமலிங்கா (6) மற்றும் காவிரி (11) ஆகியோர் கழுத்து வரை புதைக்கப்பட்டனர்.
“இந்த சம்பவம் குறித்த தகவல் எங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் கிடைத்தது. நாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, புதைக்கப்பட்ட குழந்தைகளை வெளியே எடுத்து அவர்களை மருத்துவமனைக்கு உடனே அழைத்து சென்றோம்.தற்போது குழந்தைகள் நலமாக உள்ளனர் ”என்று கலாபுராகி தாலுகா தெஹ்சில்தார் மல்லேஷா தெரிவித்துளளார்.
இவ்வாறு செய்வதால் குழந்தைகளுக்கு தோல் நோய்,உடல் ஊனம் ஏற்படாது என தாங்கள் நம்புவதாக கூறுகின்றனர். ஆனால் இதற்க்கு விஞ்ஞானத்தில் எந்த அடிப்படையும் இல்லை. மாறாக மண்ணுக்குள் விஷ ஜந்துக்கள் இருக்குமேயானால் குழந்தைகள் மரணித்து போக கூடும். எனவே இவ்வாறான மூட நம்பிக்கைகளை ஒழித்து கட்டவேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.