Corona Virus Islamophobia Muslims

டெல்லி தனிமைப்படுத்தல் மையத்தில் உணவு மருந்தின்றி உயிர் இழந்த தமிழகத்தை சேர்ந்த தப்லீகி ஜமாத் முஸ்தபா..

கடந்த மாதம் நிஜாமுதீன் மர்க்கஸில் தப்லிகி ஜமாஅத் கூட்டத்தில் பங்கேற்று, பிறகு கெஜ்ரிவால் அரசால் வடமேற்கு டெல்லியின் சுல்தான்புரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மையத்தில், வைக்கப்பட்ட முகமது முஸ்தபா என்ற 50 வயது நீரிழிவு நோயாளி, போதிய உணவு, முறையான சிகிச்சை கிடைக்கப்பெறாமல் புதன்கிழமை காலை இறந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.இது குறித்து நேஷனல் ஹெரால்ட் வெளியிட்ட ஆக்கத்தின் தமிழாக்கமே கீழே தரப்பட்டுள்ளது..

அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகவே முஸ்தபா உயிர் இழந்துள்ளதாக தனிமைப்படுத்தல் மையத்தில் உள்ளவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

‘முஸ்தபாவுக்கு (நீரிழிவு நோயாளி) மருந்து மற்றும் உணவு சரியான நேரத்தில் வழங்கப்படுவதில்லை என பலமுறை மருத்துவர்களிடமும், மருத்துவமனை ஊழியர்களிடமும் சொல்லியும் அவர்கள் அதை பொருட்படுத்தவே இல்லை’ என்கிறார் அதே தனிமைப்படுத்தல் மையத்தில் உள்ள மற்றொரு நோயாளி.

எதிர்ப்பு போராட்டம்:

தனிமைப்படுத்தல் மையத்தில் வைக்கப்பட்டுள்ள தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த பலரும் தங்கள் அறைகளுக்கு வெளியே வந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். மருத்துவர்கள் பற்றாக்குறை, முறையான சிகிச்சை இன்மை என தாங்கள் அனுபவிக்கும் சித்திரவதை குறித்து வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றினர்.

தனிமைப்படுத்தல் மையத்தில் உள்ள மற்ற நோயாளிகள் எதிர்ப்பு போராட்டத்தைத் தொடர்ந்து அனுமான் பக்தராக தன்னை காட்டி கொள்ளும் கெஜ்ரிவாலின் அரசு முஸ்தபா மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது.

தமிழ்நாட்டை சேர்ந்தவர் முஸ்தபா:

தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் வசித்து வந்த முஸ்தபா, ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு மாற்றப்பட்டார்.

டயாபடீஸ் மாத்திரை வேண்டும். சரியான நேரத்தில் உணவு வேண்டும் என முஸ்தபா பல முறை கூறியும் அதை எவருமே கேட்கவில்லை. எனக்கு மருந்து மற்றும் உணவு வழங்கப்பட்டால் போதும், நான் குணம் அடைந்து விடுவேன் என கூறினார் எனது கணவர்.ஆனால் இப்போது என்னால் அவரை பார்க்க கூட முடியாது என்கிறார் முஸ்தபாவின் மனைவி ராசியா.

அவர் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார், செவ்வாய்க்கிழமை மாலை தனது மனைவியுடன் பேசியபோதும், மிகவும் பலஹீனமான குரலில் விரைவில் ஏதாவது சாப்பிட கிடைக்கும் என்று நம்புவதாக கூறியுள்ளார். “தமிழ்நாட்டில் கோவிட் -19 நோயாளிகளை கவனிக்கும் சிறப்பு அதிகாரி சித்திக்கிற்கு இது குறித்து நாங்கள் அறிவித்தோம். தமிழக அரசாங்கத்தின் மூலம் தில்லியில் உள்ள தமிழ்நாடு அரசாங்கத்தின் முதன்மை வதிவிட ஆணையருக்கும் தகவல் கொடுத்தோம்” என்று தமிழ்நாட்டில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் உறுப்பினர் பாத்திமா முசாஃபர் விளக்கினார்.

மனிதநேயமற்ற மிருகங்களா?:

முறையான பாதுகாப்பு உடையை அணிந்து கொண்டு டெல்லியில் உள்ள ஐ.யூ.எம்.எல் உறுப்பினர்கள் மூலம் உணவு அனுப்பி வைக்கப்பட்டது, எனினும் உணவை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர் என்கிறார் பாத்திமா முசாஃபர்.

எங்கள் டெல்லி ஐ.யூ.எம்.எல் தொண்டர்கள் உலர்ந்த பழங்கள், மருந்துகள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பழங்களை எடுத்துச் செல்ல எங்கள் எம்.பி.க்களிடமிருந்து பெறப்பட்ட கடிதங்களையும் கூட வைத்திருந்தனர், இருந்தும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வாயிலில் இருந்த போலீசார் உணவை தூக்கி எறிந்து எங்கள் தொண்டர்களை விரட்டியடித்துள்ளனர்.

யாரையும் உதவ அனுமதிக்கப் போவதில்லை என்றால், அவர்கள் மக்களுக்கு உணவு மற்றும் மருந்தை வழங்க வேண்டும். ஆனால் அதை அவர்கள் செய்வதில்லை. தனிமைப்படுத்தல் மையத்தில் உள்ளவர்கள் இறப்பதற்கு விடப்படுகிறார்கள், ”என்று அகில இந்திய முஸ்லீம் தனிநபர் வாரியத்தின் உறுப்பினருமான பாத்திமா முசாஃபர் தெரிவிக்கிறார்.

தனிமைபடுத்தல் மையத்தில் வழங்கப்படும் உணவு:

மதிய உணவு காய்கறி ஆனத்துடனான இரண்டு ரொட்டிகளாகவும், இரவு உணவு வழக்கமாக பருப்புடன் 2 ரொட்டிகளாகவும் இருக்கும் என நேஷனல் ஹெரால்ட் தெரிவித்துள்ளது. “மதியம் 2.30 மணிக்குப் பிறகு மதிய உணவு வழங்கப்படுகிறது. நீரிழிவு நோயாளி எவ்வாறு உயிர்வாழ முடியும்?. நீரிழிவு நோயாளி ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு முறை சாப்பிட வேண்டும்.

https://twitter.com/AijazAwalqi/status/1253755634132058113

எங்களுக்கு காலையில் தேநீர் கிடைக்காது, ஒரு பாக்கெட் பிஸ்கடோ அல்லது சாக்லேடோ வாங்கவும் கூட நாங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. எங்களிடம் பணம் உள்ளது. ஆனால் நாங்கள் கட்டிடத்திலிருந்து வெளியேறினாலேயே போலீசார் கத்துகிறார்கள். அவர்களும் எங்களுக்கு உதவ மறுக்கின்றனர் என்கிறார் சுல்தான்புரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இனாயத்துல்லா.

இனாயத்துல்லாவும் நீரழிவு நோயாளி என்பதால் ரொட்டி துண்டுகளை சிறு சிறு துண்டுகளாக்கி வைத்து கொண்டு, மயக்கம் போட்டு விழாமல் இருக்க அதை சாப்பிட்டு கொள்வதாக தெரிவிக்கிறார்.

கவனிப்பற்று சித்திரவதை அனுபவிக்கும் மக்கள்:

சுல்தான்புரியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் ஐந்து தளங்களும் சுமார் 550 நோயாளிகளும் உள்ளனர், ஆனால் மருத்துவர்கள் அனைத்து தளங்களையும் பார்வையிடுவதில்லை. மருத்துவர்கள் தினமும் வருவதில்லை, அவர்கள் வரும்போது கூட, எங்களுக்கு போதுமான மருந்துகளைத் தருவதில்லை. மருத்துவர்கள் முதல் மற்றும் இரண்டாம் தளங்களுக்கு மட்டுமே செல்கிறார்கள், ஆனால் ஐந்து தளங்களிலும் நோயாளிகள் உள்ளனர்.

செவிலியர்கள் யாரும் இங்கு வருவதில்லை. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய்கள் மற்றும் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட பலர் இங்கு உள்ளனர். அவர்களின் மருந்துகளில் பெரும்பாலானவை முடிந்துவிட்டன. நாங்கள் மருந்துகளை கோருகிறோம், ஆனால் மருத்துவர் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே எங்களுக்கு மருந்து கொடுக்கிறார். இங்குள்ள பலர் ஒரு நாளைக்கு மூன்று முறை மருந்துகளை சாப்பிட வேண்டிய நிலையில் உள்ளவர்கள். இந்த மையத்தில் கோவிட் -19 ஐ விட அதிகமான மக்கள் கவனிப்பு இல்லாததால் இறப்பார்கள் ” என்று இனாயத்துல்லா கூறுகிறார்.

மோசமான இடம்:

தண்ணீர் பற்றாக்குறை, சுகாதாரமற்ற சூழல் மற்றும் கொசுக்கள் பற்றிய புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. கெட்டுப்போன உணவு பாக்கெட்டுகள் அப்புறப்படுத்தப்படுவது இல்லை, கட்டிடத்தை சுத்தம் செய்ய யாரும் வருவதில்லை. “கட்டிடம் மிகவும் தூசி நிறைந்ததாகவும் குளியலறைகள் அசுத்தமாகவும் உள்ளன. நாங்கள் வீட்டிற்குச் செல்லும் போது பல புதிய நோய் தொற்றுடன் தான் செல்வோம் போலிருக்கிறது.

இங்கு முஸ்தபாவின் மரணம் முதல் மரணம் இல்லை. இதே தனிமைப்படுத்தல் மையத்தில் ஏற்கனவே ஒருவரும் இறந்துள்ளார்.

‘முஸ்தபா போன்ற இன்னும் பல மரணங்கள் நிகழும்’:

கொசுக்கள் சுற்றி வருகின்றன, ஃபேணும் இல்லை. இவ்வளவு தூசி இருப்பதால் இங்குள்ள ஆஸ்துமா நோயாளி ஒருவருக்கு மூச்சு விடுவது கடினமாக உள்ளது. அவரது மருந்துகள் முடிந்துவிட்டன, ஆனால் அவருக்கு புதிய இன்ஹேலர் வழங்கப்படவில்லை. நாங்கள் பணம் தர தயாராக உள்ளோம், அப்படியிருந்தும், இந்த அடிப்படை பொருட்களை வாங்கி தரவும் கூட யாரும் எங்களுக்கு உதவ முன்வருவதில்லை. அரசாங்கம் எங்களுக்கு சரியான நேரத்தில் மருந்து மற்றும் உணவை அனுப்பாவிட்டால் முஸ்தபா போன்ற இன்னும் பல மரணங்கள் நிகழும் ”என்று பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொருவர் அழுதபடி கூறுகிறார்.

முஸ்தபா உடல் அடக்கம்:

முஸ்தபா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இறந்துவிட்டார் என்றும் அவரது உடல் எல்.என் மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கிற்கு மாற்றப்பட்டுள்ளது என்றும் தமிழக மாளிகையின் முதன்மை வதிவிட ஆணையருக்கு எழுதிய கடிதத்தில், தில்லி நோடல் அதிகாரி குறிப்பிட்டுள்ளார். முஸ்தபாவின் குடும்பம் ஒப்புதல் அளித்த பின்னரே டெல்லியில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தீர்வு என்ன:

இத்தனை கொடூரங்கள் அரங்கேறி கொண்டுள்ளது, எனினும் நம் பெரும்பான்மை தமிழக ஊடகங்களும் கூட இந்த செய்தியை வெளியிடவில்லை. தெரியவில்லையா அல்லது மறைக்கப்பட்டதா என்று எமக்கு தெரியவில்லை. மதசார்பற்ற அரசியல் செய்கிறோம் என கூறிக்கொள்ளும் காட்சிகள் ஆகட்டும் தமிழர்களுக்கு ஒன்று என்றால் குரலை உயர்த்தி பேசும் அப்படியான அரசியல் கட்சி தலைவர்கள் ஆகட்டும் , இது விஷயத்தில் மவுனம் காப்பது ஆச்சிரியம் அளிக்கிறது. ஏன் டெல்லியில் உள்ள தப்லீகி ஜமாத்தை சேர்ந்தவர்கள் தமிழர்கள் இல்லையா என்ன? உடனே தலையிட்டு டெல்லியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உதவ முன்வாருங்கள் !

நாம் இந்த செய்தியை இங்கு வெளியிட்டுள்ளது, வீண் வேலையாக இல்லை. இதை படிக்கும் மக்களாகிய நீங்கள் தான் இதை பற்றி சிந்திக்க வேண்டும். டெல்லி சுல்தான்புரியில் அகப்பட்டு கொண்டிருக்கும் மக்களை காப்பாற்ற வேண்டும். இத்தனை நடந்தும் கூட கெஜ்ரிவால் இது குறித்து இன்னும் வாய் திறக்கவில்லை. எனவே மக்களே, இந்த செய்தியை தமிழக அரசியல் கட்சிகளிடம் எடுத்து செல்லுங்கள். தமிழக முதல்வர் நேரடியாக களத்தில் இறங்க செய்யுங்கள், மதசார்பற்ற அரசியல் தலைவராக காட்டி கொள்ளும் கெஜ்ரிவால் அரசிடம், தமிழக முதல்வர் பேசட்டும் நிலைமையை சீர்படுத்தட்டும்.

நன்றி: நேஷனல் ஹெரால்ட், பர்ஸ்ட் போஸ்ட்