டில்லி விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் வெப்பத் திரையிடல் தொடங்குவதற்கு முன்னர் (ஜனவரி மாதத்தின் நடு பகுதியில்) சீனா மற்றும் பிற கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து டெல்லிக்கு வந்த பல ஆயிரம் பேர்களில் 17 பேருக்கு, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் அறிகுறிகள் உள்ளதாக டில்லி சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டில்லியில் கொரோனா வைரசுக்கான விமான நிலையத் திரையிடல் செயல்முறை தொடங்குவதற்கு முன்பு டில்லிக்குத் திரும்பிய பயணிகளைக் கண்டறியும் முயற்சிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக சீனாவின் வுஹான் பல்கலைக்கழகத்தில் இருந்து கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நிலையில் கேரளா திரும்பிய 3 மருத்துவ படிப்பு பயிலும் மாணவர்களில் ஒருவர் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்திருந்தார்.
மற்ற இரு மாணவர்களின் உடல்நிலையும் சீராக இருப்பதாகவும், விரைவில் அவர்களும் குணம் அடைவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். இந்தியா முழுவதும் 15,000 க்கும் மேற்பட்ட மக்கள் “சமூக கண்காணிப்பில்” (community surveillance) வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது