ரோஹிங்கியா விவகாரம்: விஎச்பி, இந்துத்துவாவினரின் கண்டனம்; சொந்த அமைச்சரின் அறிவிப்பையே மறுத்த ஒன்றிய உள்துறை அமைச்சகம் !
ரோஹிங்கியா மக்கள்:
உலகின் மிக மோசமான இனபடுகொலைக்கு ஆளாகி, வாழ்வதற்கு இடமின்றி தவிக்கும் ரோஹிங்க்யா மக்களில் சிலர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். பல முறைகள் அவர்கள் தங்கி இருக்கும் பகுதிகளில் மர்மமான முறையில் தீ விபத்து ஏற்பட்டு வந்தது. வலது சாரிகள் ரோஹிங்க்யா மக்களை தீவிரவாதிகள் என்றும், குற்றம் புரிபவர்கள் என்றும் வசைபாடி வந்தனர். இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் ரோஹிங்க்யா மக்களுக்கு தங்குவதற்கு இடவசதி செய்து தரப்படும் என அறிவிப்பை வெளியிட்டார்.
அமெரிக்க சிஐஏ வால் தீவிரவாத அமைப்பு என அடையாளம் காணப்பட்ட வி.எச்.பி அமைப்பு கண்டனம்:
இந்த நிலையில் ஒன்றிய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஹர்தீப் , ரோஹிங்கியாக்களை அகதிகள் எனக் கூறி, அவர்களுக்கு டெல்லி பக்கர்வாலாவில் EWS குடியிருப்புகள் ஒதுக்க உள்ளதாக அறிவித்தமையை தொடர்ந்து விஸ்வ ஹிந்து பரிஷத் செயல் தலைவர் அலோக் குமார் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
“2020ல் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் ரோஹிங்கியாக்களை இந்தியாவில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அறிவித்ததை ஹர்தீபுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்,” என்று விஎச்பி அலோக் குமார் கூறினார்.
ரோஹிங்கியாக்கள் அகதிகள் அல்ல, ஊடுருவல்காரர்கள் என்பது உச்ச நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரம் உட்பட,ஒன்றிய அரசின் நிலையான நிலைப்பாடு என்று அலோக் குமார் மேலும் கூறினார்.
அந்தர்பல்டி அடித்த ஒன்றிய அரசு?:
பாகிஸ்தானிலிருந்து வரும் இந்து அகதிகள் டெல்லியில் உள்ள மஜ்னு-கா-திலாவில் தொடர்ந்து பரிதாபமான நிலையில் வாழ்வது வருத்தத்திற்குரியது” என்று அவர் கூறினார், ரோஹிங்கியா விவகாரம் குறித்து மறுபரிசீலனை செய்ய அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
விஎச்பி கோரிக்கையை ஏற்ற உள்துறை அமைச்சகம் ?
இந்து முஸ்லிம் என வேறுபாடுகள் இல்லாமல் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு வாழ்விடம் அமைத்து தாருங்கள் என கூறுவதை விட்டுவிட்டு ரோஹிங்கியா மக்களை இந்தியாவை விட்டு வெளியேற்ற ஏற்பாடு செய்யுங்கள் என்று மனிதாபிமானம் இல்லாமல் ஒரு கோரிக்கையையும் அரசுக்கு விஎச்பி முன்வைத்தது தான் தாமதம், ஒரு சில மணி நேரத்தில் ஒன்றிய அமைச்சகம் ரோஹிங்கியா குறித்து சொந்த கட்சி அமைச்சரின் அறிவிப்பை குறிப்பிடாமல் மீடியாக்களில் வெளியான செய்திகளை மட்டும் சுட்டிகாட்டி மறுப்பு தெரிவித்து ட்வீட் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத வெளிநாட்டினர் சட்டத்தின்படி நாடு கடத்தப்படும் வரை தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்கள் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லி அரசு தற்போது இருக்கும் இடத்தை தடுப்பு மையமாக அறிவிக்கவில்லை என்றும், அதை உடனடியாக செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“புதுதில்லி பக்கர்வாலாவில் உள்ள ரோஹிங்கியா, சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு, EWS அடுக்குமாடி குடியிருப்புகளை வழங்க உள்துறை அமைச்சகம் (MHA) எந்த உத்தரவும் வழங்கவில்லை” என்று MHA ட்வீட் செய்துள்ளது.
“ரோஹிங்கியாக்களை புதிய இடத்திற்கு மாற்ற டெல்லி அரசு முன்மொழிந்தது. MHA ஏற்கனவே வெளியுறவு அமைச்சகம் மூலம் சம்பந்தப்பட்ட நாட்டிற்கு நாடு கடத்தப்பட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது, அது வரையில் ரோஹிங்கியா, சட்டவிரோத வெளிநாட்டினர், தற்போதைய இடத்தில் தொடர்வதை உறுதிப்படுத்த GNCTD க்கு MHA உத்தரவிட்டுள்ளது,” என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
“சட்டவிரோத வெளிநாட்டினர் சட்டத்தின்படி நாடு கடத்தப்படும் வரை தடுப்பு மையத்தில் வைக்கப்படுவார்கள். டெல்லி அரசு தற்போது இருக்கும் இடத்தை தடுப்பு மையமாக அறிவிக்கவில்லை. அவர்கள் உடனடியாக அதைச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர், ”என்று மற்றொரு ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நாட்டில் தஞ்சம் புகுந்தவர்களை இந்தியா எப்போதும் வரவேற்கிறது. அனைத்து ரோஹிங்கியா அகதிகளும் டெல்லியின் பக்கர்வாலா பகுதியில் உள்ள EWS குடியிருப்புகளுக்கு மாற்றப்படுவார்கள். அவர்களுக்கு அடிப்படை வசதிகள், UNHCR ஐடிகள் மற்றும் 24 மணிநேரமும் டெல்லி போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும்,” என்று ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் ட்வீட்டில் அறிவித்தார்.
தற்போது இந்த அறிவிப்பை தான் ஒன்றிய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது என்பதை ஊடகங்கள் சுட்டி காட்டுவதில்லை.