அன்புள்ள இந்துத்துவர்களுக்கு,
எல்லா அடிப்படைவாதத்துக்கும் ஒரு நியாய தர்மம், ஒரு ஆறாத வடு இருக்கும். குற்றங்களில் ஈடுபடும் எல்லா ஹீரோவுக்கும் பிளாஷ்பேக்கில் ஒரு அநீதி இருப்பது போல. ஒசாமா பின் லாடன் ஒன்றும் ரேபிஸ் வியாதி பீடித்து இரட்டை கோபுரத்தை தகர்க்கவில்லை. மத்திய கிழக்கில் அமெரிக்கா நடத்திய வெறியாட்டங்கள், ஆடிய இரட்டை வேடங்கள் ஏற்படுத்திய பாதிப்பின் பின்னணியில் வலுவான ஒரு கோபம் இருக்கிறது.
அதே போல யூதர்களுக்கு எதிரான கோபங்களும் வெறுப்புகளும் நூற்றாண்டுகளாகவே ஐரோப்பாவில் இருந்தன. பன்றியின் நரகலை யூதர்கள் உண்ணுவதைப்போன்ற சித்திரம் ஐரோப்பாவில் மத்திய காலத்தில் மிகப்பிரசித்தம். Judensau என்று கூகுள் செய்து பாருங்கள். இந்த சித்திரம் நிறைய சர்ச்சு கோபுரங்களில் கூட சிலை வடிக்கப்பட்டு இருக்கிறது. அப்படி நூற்றாண்டுகளாக கனல் விட்டுக்கொண்டு இருந்த கோபம்தான் ஹிட்லருக்கு நன்கு பயன்பட்டது.
அது போலவே உங்களுக்கும் அலாவுதீன் கில்ஜி அந்தக்கோயிலை உடைத்தார், அவுரங்கஜீப் இந்த வரியை விதித்தார் என்றெல்லாம் வரலாற்றுக்கோபங்கள் இருக்கலாம். அவை எல்லாம் சரியா தவறா என்ற வாதத்துக்குள் புக வேண்டாம். அவை எல்லாமே அநீதிகள் என்றே வைத்துக்கொள்வோம். ஐரோப்பியர்களுக்கும் அரேபியர்களுக்கும் இருந்த ஆற்றாமைக்கும் உங்களுள் கனன்று கொண்டிருக்கும் இந்த ஆற்றாமைக்கும் என்ன வித்தியாசம்?
யூதர்களுக்கு எதிரான ஐரோப்பியர்களின் கோபத்தை பயன்படுத்திக்கொண்ட ஹிட்லர் மேலோ, அமெரிக்கர்களுக்கு எதிரான அரேபியர்களின் கோபத்தை பயன்படுத்திக்கொண்ட ஒசாமா பின் லேடன் மேலோ உங்களுக்கு வரும் வெறுப்பு ஏன் ஹெட்கேவார் மேலோ, சவர்க்கர் மேலோ அல்லது அமித் ஷா மேலோ வருவதில்லை?
ஏனெனில் அவர்களின் கோபத்துக்கான முழு வெளிப்பாட்டை உலகம் கண்டுகொண்டது. இவர்களின் கோபத்துக்கான வடிகாலை இன்னமும் காணவில்லை. கொஞ்சம் 1992ல், கொஞ்சம் 2002ல் பார்த்தாலும் நாஜிகள் போன்ற, அல் கொய்தா போன்ற ஒரு கோரத்தாண்டவத்தை இன்னமும் நாம் பார்க்கவில்லை. பாழாய்ப்போன இந்த நேருவின் செக்யூலரிஸம் (அல்லது உங்கள் பாஷையில், Sickularism) நடுநடுவே வந்து கெடுக்கிறது. விளைவு, ஹிட்லருக்கும், ஒசாமாவுக்கும் கிடைத்த வாய்ப்பு சாவர்க்கருக்கு கிடைக்காமல் போய் விட்டது.
அப்படி முழுமையாகக் கிடைக்கும் பட்சத்தில், அது நடத்தும் கோரத்தாண்டவம் காண முடியாததாக இருக்கும். அது அரங்கேறிய பின் உங்களில் முக்கால்வாசிப்பேர் பெரும் கசப்புணர்வோடு இந்துத்துவத்தை விட்டு வெளியேற வாய்ப்பிருக்கிறது.
ஏனெனில் நீங்கள் இயல்பில் வன்முறையாளரோ, சைக்கோவோ அல்ல என்று நம்புகிறேன். வரலாற்று அநீதி என்று நீங்கள் உழன்று கொண்டிருக்கும் இருட்டில் கிடைத்திருக்கும் ஒற்றை ஒளியை பின்பற்ற முயற்சிக்கிறீர்கள், ஆனால் அது ஒளி அல்ல, நம் எல்லாரையும் அழிக்கும் ஆழித்தீ என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அது விளைவிக்கும் நாசம் நம்மையும் பாதிக்கும். நம் சந்ததியையும் பாதிக்கும். ஒசாமாவின் கோபவடிகால், தொடர்ந்த போரில், நாசத்தில் அரேபியாவை தள்ளியது. ஹிட்லரின் கோப வடிகால் ஏற்படுத்திய நாசங்கள் பற்றி தெரியும். அவர் பெரிதும் காதலித்த ஜெர்மனியே இரண்டாக உடைந்து போய் பற்பல ஆண்டுகள் நிச்சயமின்மையில் உழன்றது. அந்தப்போர் ஏற்படுத்திய குற்ற உணர்ச்சி இன்றளவும் ஜெர்மனியர்களை விட்டு நீங்கவில்லை. அதாவது தாத்தாக்கள் உருவாக்கிய கலகம் பேரன் பேத்திகளை வாட்டி வருகிறது.
இதை ஏன் நான் இப்போது எழுதுகிறேன். சவர்க்கருக்கும் ஹெட்கேவாருக்கும் கிடைத்திராத வாய்ப்பு அமித் ஷாவுக்கு கிடைக்கும் போலத் தோன்றுகிறது. ஆனால் உங்கள் ஆதரவினால்தான் அந்த வாய்ப்பு அவருக்கு கிட்ட இருக்கிறது. உங்களின் ஆதரவு பறிபோனால், அந்த வாய்ப்பும் பறிபோகும். இந்தியாவை, இந்து மதத்தை நீங்கள் ஆழ்ந்து நேசிப்பது உண்மையானால், இந்துக்கள் சமூகப்பொருளாதார அளவில் முன்னேற வேண்டும் என்றால் அந்த வாய்ப்பு கிடைக்காமல் செய்ய வேண்டும். பாரத மாதா ஜெயிக்க வேண்டும் என்று நெஞ்சார விரும்பினால்…
…நாற்பதுகளின் ஐரோப்பாவாக, இரண்டாயிரங்களின் அரேபியாவாக இந்தியா மாற இருப்பதை உங்களால் தடுக்க முடியும்.
அன்புடன்
ஸ்ரீதர் சுப்ரமணியம்!