பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தில் 37 வயதான தலித் நபர் ஒருவரை பழைய தகராறு ஒன்றின் காரணமாக இழுத்து சென்ற சிலர் அவரை கடுமையாக தாக்கியும், கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்கவும் வைத்துள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது.
சங்கலிவாலா கிராமத்தைச் சேர்ந்த ஜக்மைல் சிங் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி தனது வீட்டில் இருந்து இரண்டு நபர்களால் அழைத்துச் செல்லப்பட்டதாக துணை போலீஸ் சூப்பிரண்டு (டிஎஸ்பி) பூட்டா சிங் தெரிவித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாங்குலிவாலா கிராமத்தில் வசிக்கும் ரிங்கு, அமர்ஜீத் சிங், கோலி மற்றும் பீட்டா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மீது புதன்கிழமை(14-11-19) வழக்கு பதிவு செய்யப்பட்டது.
“நாங்கள் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து வருகிறோம், இதுவரை எவரையும் கைது செய்யவில்லை” என்று டிஎஸ்பி தெரிவித்தார்.
போலீஸ் புகாரின்படி, பாதிக்கப்பட்ட தலித் சமூகத்தை சேர்ந்த ஜக்மைல் கடந்த செப்டம்பர் 21 அன்று ரிங்குவுடன் தகராறு செய்திருந்தாலும் அவர்கள் இருவரும் சமரசத்தை எட்டியிருந்தனர்.
எனினும் அதன் பின்னர் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி காலை 9 மணிக்கு பஞ்ச் குர்தியால் சிங்கின் இல்லத்திலிருந்து ரிங்கு மற்றும் பிந்தர் அவரை அழைத்துக்கொண்டு அமர்ஜித் இருந்த ரிங்குவின் வீட்டிற்கு அழைத்துசென்றுள்ளனர். அங்கு ஜக்மைலை ஒரு தூணில் கட்டி நான்கு பேர் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
“அவர்கள் என்னை கம்புகள் மற்றும் கம்பிகளால் அடித்தனர். நான் தண்ணீர் கேட்டபோது, அவர்கள் என்னை வலுக்கட்டாயமாக சிறுநீர் குடிக்க வைத்தார்கள், ”என்று பாதிக்கப்பட்ட ஜக்மைல் கூறியுள்ளார்.
கடத்தல், கொலைக்கு முயற்சித்தல், தானாக முன்வந்து காயம் ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் லெஹ்ரா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடந்து வருகிறது.