லக்னோ: பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் உள்ள சூல்ரா கிராமத்தில் நான்கு கிலோ அரிசி மற்றும் மாம்பழங்களைத் திருடியதாக கூறி தலித் சமூக சிறுவன் விஜய் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால், ஆத்திரமடைந்த குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி வாரணாசி-படோஹி சாலையில் உள்ள கப்சேதியில் சடலத்தை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தந்தை அளித்த புகாரின் பேரில், கப்சேதி போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
நடந்த சம்பவம்:
பப்பு ராமின் மகன் விஜய் குமார் கௌதம் (14) 2022 ஜூலை 21 அன்று உ.பி., வாரணாசியில் அமைந்த கப்சேதி பகுதியில் உள்ள சூல்ரா கிராமத்தில் உள்ள குட்டு சிங்க் என்பவரின் மளிகை கடைக்கு சென்றுள்ளார். அப்போது மாம்பழம் மற்றும் நான்கு கிலோ அரிசியை திருடியதாக சிறுவன் மீது குற்றம் சாட்டி மேல் சாதியினராக கருதப்படும் குட்டு சிங், பகாண்டு, சவுரப் சிங் மற்றும் ஷிவம் சிங் ஆகியோர் விஜய்யை அடித்து உதைத்ததாக சிறுவனின் குடும்பத்தார் கூறுகின்றனர். மேலும் தாக்கப்பட்டது குறித்து வெளியே கூறினால் கொன்று விடுவோம் என, மிரட்டியதாக குடும்பத்தாரிடம் சிறுவன் விஜய் கூறி உள்ளான்.
தந்தை குற்றச்சாட்டு:
குற்றம் சாட்டப்பட்டுள்ள சௌரப் தாமே, 112 என்ற தொலைபேசி எண்ணில் போலீஸ்காரர்களை வரவழைத்து விளக்கமளித்த பின்னர் போலீசார் சென்று விட்டதாகவும் இறந்தவரின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
மகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் லோஹ்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சிறுவனின் தந்தை கூறினார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி விஜய் இறந்து விட, தனது மகனின் உடலை பார்த்த தாய் சுனிதா தேவி மயக்கமடைந்தார். மதிய நேரத்தில் எட்டாம் வகுப்பு மாணவர் விஜய் உயிரிழந்த தகவல் அறிந்ததும் கிராம மக்கள் கொந்தளித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அதிகாரிகள் சாந்தம் அடைய செய்தனர்.
எனினும் கிராமத்தில் பதற்றம் நிலவுவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நன்றி:மூக்நாயக்