விலங்குகளில் பசு மாடு மட்டுமே ஆக்ஸிஜனை சுவாசித்து, ஆக்ஸிஜனை வெளியிடுகிறது . மேலும் சுவாசப் பிரச்சினை, உள்ளவர்கள் பசு மாட்டின் அருகே நின்று அதனை தடவிக்கொடுத்தால் சரியாகிவிடும் (!)என்று உத்தரகாண்ட் பாஜக முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.
டெஹ்ராடூனில் நடந்த ஒரு விழாவில் திரிவேந்திர சிங் ராவத் பசு மாட்டு பால் மற்றும் சிறுநீரின் மருத்துவ பண்புகளை புகழ்ந்துரைக்கும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
பசு மாட்டை நாம் மாதா என்று அழைப்பதால்தான், அது மனிதர்கள் சுவாசிக்க ஆக்ஸிஜன் வெளியிடுகிறது. பசுவின் சிறுநீர், சாணம் ஆகியவை மனிதர்களின் உடலுக்கு மிகவும் நல்லது(?!). குறிப்பாக கிட்னி, இதயத்துக்கு உகந்தது. காசநோய் இருப்பவர்கள் பசு மாட்டின் அருகே நின்றுவந்தால் குணமாகும் என்று அறிவியல் அறிஞர்கள் சான்று அளித்துள்ளார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
அமைச்சர் இவ்வாறு கூறியிருந்தாலும் இப்படி எந்த ஒரு அறிவியலாளரும் கூறவில்லை , இது விஞ்ஞானத்திற்கு முரணான பேச்சு என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
இதனிடையே முதல்வர் திரிவேந்தர சிங் ராவத் பேச்சு சர்ச்சையாகி உள்ள நிலையில் அவருடைய அப்பேச்சை அம்மாநில முதல்வர் அலுவலகமும் ஆதரித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் மக்கள், பசுமாட்டுடன் நெருங்கிப் பழகிவருகிறார்கள், தெய்வமாக வணங்குகிறார்கள் ,இதனை குறிப்பிட்டே முதல்வர் பேசியுள்ளார் என முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
2017 ஜனவரியில், ராஜஸ்தானில் பாஜக அரசாங்கத்தின் முன்னாள் கல்வி அமைச்சர் வாசுதேவ் தேவ்னானி, ஆக்ஸிஜனை உள்ளிழுத்து வெளியேற்றும் ஒரே விலங்கு பசு மாடு மட்டும் தான் என்ற அதே கருத்தை முன்வைத்திருந்தார்.
மேலும் இதே போன்ற கருத்தை கடந்த ஆண்டு உத்தரகண்ட் கால்நடை பராமரிப்பு அமைச்சர் ரேகா ஆர்யாவும் கூறியிருந்தார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் தீவிரவாத குற்றவழக்கில் ஜாமீனில் உள்ளவரும்,எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான பாஜக தலைவர் பிரக்யா சிங் தாக்கூர், தன் புற்றுநோயை குணப்படுத்த(!) பசு சிறுநீர் உதவியதாகவும், பசுவை ஒரு குறிப்பிட்ட முறையில் தடவினால் இரத்த அழுத்தத்தை (!)கட்டுப்படுத்த உதவும் என்றும் கூறினார்.
உலகில் மரம் ,செடிகளை தவிர எந்த ஒரு விலங்கோ பறவையோ ஆக்ஸிஜனை வெளியிடாது என்பது சிறு வயதிலேயே பள்ளிக்கூடங்களில் சொல்லித்தரப்படும் அறிவியல் என்பது நினைவுகூரத்தக்கது.
முக்கிய பதவிகளை வகித்து கொண்டு இவ்வாறான கருத்துக்களை தொடர்ந்து பாஜக அமைச்சர்கள் தெரிவித்து வருவது குறித்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.