Corona Virus Tamil Nadu

‘இனி ஒரு மருத்துவர் கரோனா நோயால் இறந்தால், அரசு மரியாதையோடு, குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட வேண்டும்’ – மருத்துவர். இரா.செந்தில்..

உயிர்த் தியாகத்தைப் போற்றுவோம், தீண்டாமையை ஒழிப்போம்!

சென்னையில் அப்போலோ மருத்துவர் கரோனா நோயால் இறந்தபோது மயானத்திற்குள் அவருடைய பிணம் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல நேற்று முன் தினம் ஒரு நரம்பியல் மருத்துவர் கரோனா நோயால் இறந்த போது, அவருடைய உடலை எடுத்துச் செல்ல முயன்ற ஆம்புலன்ஸ் வாகனம் தாக்கப்பட்டது. அவரோடு வந்தவர்கள் தாக்கப்படுகிறார்கள். அவருடைய உடலை தகனம் செய்ய அனுமதி மறுக்கப்படுகிறது.
இது தீண்டாமையின் புதிய வடிவம்.

சாதி அடிப்படையில் பிணங்களுக்கு வழி மறுக்கப்பட்டது. இப்பொழுது நோயின் அடிப்படையில். மனிதர்களுக்குள் நிலவும் எல்லாவிதமான பாகுபாடுகளையும், வெறுப்புணர்வுகளையும், தீண்டாமையையும் எதிர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை எல்லோருக்கும் கற்றுக்கொடுக்கும் பாடம் இது.

கைதட்டி மருத்துவப் பணியாளர்களை பாராட்டும் செயல் வெறும் சம்பிரதாயமாகவே செய்யப்பட்டிருக்கிறது. அடையாளச் செயல்கள் எவ்வளவு பயனற்றவை என்பதற்கும், அறிவுப்பூர்வமாகவே மக்களை வழிநடத்த வேண்டும் என்பதற்கும் இதைவிட சான்று என்ன இருக்க முடியும்? கரோனா நோய் குறித்த அறிவியல் பூர்வமான, அறிவுப் பூர்வமான புரிதல்களை ஏற்படுத்த வேண்டும். மாறாக, உணர்ச்சிகளின் அடிப்படையில் இந்த சமுதாயத்தை வழி நடத்த முயலும் முயற்சிகள் பயனளிக்காது என்பதை விட, ஆபத்தானவை என்பதையே இந்த வெறுப்பு நிகழ்வுகள் காட்டுகின்றன.

பொள்ளாச்சியில் துப்புரவுப் பணியாளர்களை தெருவில் நிற்க வைத்து, அவர்களின் கால்களைக் கழுவி வணங்கினார்கள். அடையாளச் செயல்கள். வீட்டிற்கு உள்ளே அழைத்துச் சென்று சாப்பாடு மேஜையில் சமமாக உட்கார வைத்து சாப்பாடு போடுவார்களா?

நாடு முழுவதிலும் மக்கள் எழுந்து நின்று, பிரதமரும், முதலமைச்சர்களும் கூட சேர்ந்து நின்று, கை கட்டி மருத்துவப் பணியாளர்களுக்கும், துப்புரவுப் பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்கள். நன்றி தெரிவிக்காவிட்டால் பரவாயில்லை. வெறுப்பைக் காட்டாதீர்கள்.

பல்லாயிரக்கணக்கான மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் போர்முனையில் போராடும் போர் வீரர்களைப் போல கரோனா தொற்றுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உயிரிழந்தால், அது போர்முனையில் வீரர்கள் உயிரிழப்பதைப் போல.அவர்கள் நோயினால் இறக்கவில்லை.

நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு மருத்துவப் பணியாளர் இறக்கும் போதும் நாடே எழுந்து நின்று ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்த வேண்டும். இனி ஒரு மருத்துவர் கரோனா நோயால் இறந்தால், அவர் உடல் அரசு மரியாதைகளோடு, குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட வேண்டும்.

இந்தியச் சமூகமே, நன்றியுள்ள சமூகமாக மாறு!
மருத்துவர். இரா. செந்தில்,சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்,தங்கம் மருத்துவமனை