முஹம்மத் நபி குறித்து இழிவாக பேசிய முன்னாள் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நுபூர் சர்மாவுக்கு ஆதரவாக மலேசியாவில் உள்ள (Batu caves) பத்து குகைகளில் நின்று கொண்டு ஆதரவு தெரிவிக்கும் காணொளி டிக்டோக்கில் வைரலால் ஆனதை தொடர்ந்து நான்கு நபர்களை மலேசிய போலீசார் கைது செய்துள்ளனர்.
18 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், இந்தியாவிலும் நேபாளிலும் இந்து ராஷ்டிரம் கோரியும், நுபுர் ஷர்மாவின் நபிகளார் குறித்தான இழிவான பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தும் பேசப்பட்டுள்ளது.முருகன் கோவிலில் நின்று கொண்டு ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்களையும் எழுப்பினர்
வீடியோ வெளியானதும் எதிர்ப்பு வலுக்கவே சிறிது நேரத்தில் டிக் டாக்கில் வீடியோவை பதிவேற்றிய அந்த நபர் வீடியோவை நீக்கிவிட்டார், எனினும் இது தொடர்பாக மலேசிய டிக் டாகர்கள் மற்றும் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வீடியோ பதிவிட்டனர்.
முக்கியமாக ட்விட்டரிலும் இந்த காணொளி வைரல் ஆனது, பலரும் மலேசிய அதிகாரிகளை டாக் செய்து நடவடிக்கை எடுக்குமாறு கோரினர். இதனால் அரண்டு போன அந்த இந்துத்துவா ஆதரவாளர் மன்னிப்பு வீடியோவை வெளியிட்டார். எனினும் அதுவும் அவரை பாதுகாக்கவில்லை.
இது குறித்து புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ அப்துல் ஜலீல் ஹாசன் கூறுகையில், 26 முதல் 27 வயதுடைய அந்த நபர்கள், மத்திய காவல்துறை தலைமையகத்தின் வகைப்படுத்தப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு, வழக்கு/சட்டப் பிரிவு அதிகாரிகளால் இன்று மேரு, கிளாங்கில் கைது செய்யப்பட்டனர் என கூறினார்.
வீடியோ பதிவேற்றம் செய்ய பயன்படுத்தப்பட்ட கேஜெட்களையும் போலீசார் கைப்பற்றியதாக அவர் கூறினார்.
“தலைமறைவாக உள்ள மற்றவர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தொடர்கின்றன, மேலும் வீடியோவில் இடம்பெற்றுள்ள மற்ற நபர்கள் விசாரணையில் உதவ முன்வர வேண்டும்” என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் புக்கிட் அமானின் வகைப்படுத்தப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவை 03-22666071 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அப்துல் ஜலீல் கூறினார்.
இவர்கள் மீது தேச துரோகச் சட்டம் 1948 இன் பிரிவு 4(1) (பொதுமக்களிடையே அச்சம் அல்லது பதட்டத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் செயல்படல்), மலேசிய தண்டனைச் சட்டம் 505 (பி) பிரிவு உட்பட மல்டிமீடியா சட்டம் 1998 இன் பிரிவு 233, ஆகிய சட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.