“காவிகளே, உடை என்பது எனது தனிப்பட்ட உரிமை; அதனால் அமைதியாகுங்கள்” என தன் உடை குறித்து விமர்சிப்பவர்களுக்கு காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி பதிலடி கொடுத்துள்ளார்.
அமெரிக்காவில் சர்வதேச பெண் அரசியல்வாதிகள் பங்கேற்கும் மாநாட்டில் பங்கேற்க்க அமெரிக்கா செல்லவிருந்த ஜோதிமணியை தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி வழியனுப்பி வைத்தார்.
அப்போது ஜோதிமணி எம்.பி ஜீன்ஸ் மற்றும் டீ ஷர்ட் உடையணிந்திருந்தார். இந்நிலையில் அவரது உடையை விமர்சித்து இந்துத்துவா கும்பல் மோசமான வகையில் சமூக வலைதளங்களில் தாக்குதல் நடத்தினர். தமிழக பா.ஜ.க-வின் அதிகாரப்பூர்வ பக்கத்திலும் இது குறித்து விமர்சிக்கப்பட்டது.
இவர்களுக்கு பதிலடி தரும் வகையில் “காட்டன் சேலை, ஜீன்ஸ் போன்ற ஆடைகள் எனது விருப்பமான உடைகள். எனவே நான் திரும்பி வந்தவுடன் அவற்றில் சிலவற்றை நீங்கள் நெஞ்செரிச்சல் அடையும் வகையில் பதிவிடுவேன். அதுவரையும், கலாச்சாரம் பற்றி தேடி கற்றுக்கொள்ளுங்கள்.” என்று ஜோதிமணி எம்பி கருத்து தெரிவித்துள்ளார்.
அவரின் இந்தப் பதிவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.