செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்க
கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனத்துடன் வலியுறுத்தல்
சிவகாசியில் வாரபத்திரிக்கையில் (குமுதம் ரிப்போர்ட்டர்) பானியாற்றி வரும் கார்த்திக் என்ற செய்தியாளர் நேற்று மர்ம நபர்களால் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த வாரம் வெளியான அந்த இதழில் விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்வர்மன் ஆகியோரிடையே உட்கட்சி பிரச்சனை நிலவுவதாக வெளியாகியுள்ள செய்தியை தொடர்ந்து செய்தியாளர் கார்த்திக் தாக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தி தமிழகம் முழுவதும் உள்ள செய்தியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சொல்ல முடியாத வேதனையும் ஏற்படுத்தியிருக்கிறது
ஒரு தகவல் ஒரு பத்திரிகையில், தொலைக்காட்சியில் வெளியான வெளியாகும் போது முன்பு அரசியலை சார்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட செய்தியின் உண்மைத்தன்மையின் அடிப்படையில் தங்களை மாற்றிக்கொள்ள முயல்வதை முன்பு பார்த்த அதே தமிழகம் தான் தற்போது இது போன்ற தாக்குதல் சம்பவங்களையும் பார்த்துக்கொண்டு இருக்கிறது.
அரசியலில் நேர்மையும் தூய்மையும் மாய்மால வார்த்தைகள் என நினைப்போரிடம் இருந்து இது போன்ற வன்முறை வெறியாட்டங்களை தவிர ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை எதிர்நோக்க முடியாதுதான்
ஆனாலும் எல்லோரையும் ஒரே பார்வையில் வைத்து சீர் தூக்க வேண்டிய ஆளும் கட்சியை சேர்ந்தவர்களே இது போன்ற அடாவடி செயலில் ஈடுபட்டிருப்பதை கண்டு பொதுமக்களும் குறிப்பாக பத்திரிகையாளர்கள் கடும் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளார்கள் என்பதே நிதர்சனம்
தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் கார்த்திக்கிற்கு தேவையான சிகிச்சை உதவிகளை தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக செய்து தர வேண்டும் என வலியுறுத்தும் அதே வேளையில் தாக்குதலை நடத்திய அரசியல் குண்டர்களையும் அவர்களை ஏவிவிட்ட சிறுமதியாளர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் எனவும் கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் தமிழக முதலமைச்சரையும் அரசையும் கேட்டுக்கொள்கிறது
குற்றவாளிகள் மீதான கடும் நடவடிக்கை மட்டுமே இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்கும் என்பதை கருத்தில் கொண்டு பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டத்தை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது என கோவை பத்திரிகையாளர் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.