குஜராத்: கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் இருப்பதாக செயற்கையாக சித்தரிப்பதாகவும், கொரோனா சிகிச்சைக்கென மாநிலத்தில் உள்ள முக்கிய மருத்துவமனையான அஹமதாபாத் பொது மருத்துவமனை பாதாளச் சிறையை விட மோசமான நிலையில் இருப்பதாகவும் அம்மாநில அரசின் மீது குஜராத் உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இது வரை குஜராத்தில் கொரானாவால் ஏற்பட்ட மொத்த மரணங்களில் 45% , அதாவது 377 மரணங்கள் அஹமதாபாத் மருத்துவமனையிலே தான் நடந்துள்ளன.
நீதிபதிகள் ஜே.பி பர்திவாலா, ஐலேஷ் வோரா ஆகியோர் அடங்கிய அமர்வு, ” மாநிலத்தின் சுகாதார நிலமையை ‘மூழ்கும் டைட்டானிக்’ கப்பலோடு ஒப்பிட்டதோடு, மருத்துவமனையின் நிலை பரிதாப நிலையில் உள்ளதாக கவலையும், வேதனையும் தெரிவித்தனர்.
“நோயாளிகளும், மருத்துவப் பணியாளர்களும் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி அறிந்திருக்கிறீர்களா?, போதிய அளவு வெண்டிலேட்டர்கள் இல்லாமல் பலர் மருத்துவமனையிலேயே மரணம் அடைந்துள்ளனர் என்ற தகவலையாவது தெரிந்து வைத்துள்ளீர்களா?”, என அரசு உயர் அதிகாரிகளையும், சுகாதார அமைச்சரையும் ஒரு பிடி பிடித்தனர் நீதிபதிகள்.
அஹமதாபாத் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவனைகள் உட்பட அனைத்து சிறப்பு வசதிகள் கொண்ட பெரிய மருத்துவமனைகளும் 50% படுக்கைகளை கொரோனா நோயாளிகளுக்கென கட்டாயம் ஒதுக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்க அரசுக்கு ஆணையிட்டனர்.
தனியார் ஆய்வுக் கூடங்களுக்கு அரசு கட்டுப்பாடு விதித்திருப்பதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ‘ அதிகமான சோதனைக் கருவிகளை வாங்கி தட்டுப்பாடில்லாமல் விநியோகித்து, அரசு நிர்ணயித்த கட்டணத்திலேயே கொரோனா சோதனை செய்ய தனியார் ஆய்வுக் கூடங்களையும் அனுமதிக்க வேண்டும்’, எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், ‘கொரோனா சோதனையில் பாசிடிவ் ஆன நபர்களை வீடுகளிலோ, அல்லது குவாரன்டைன் (Quarantine) தடுப்பு அறைகளிலோ தனிமைப்படுத்தினால் மட்டும் போதுமானது; நோய் அறிகுறி உள்ளவர்களை மட்டும் மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்கலாம்’, எனவும் ஆலோசனை வழங்கியுள்ளது.
இந்நிலையில் மோடியின் குஜராத் மாடலின் அடிதளங்கள் தற்போது தெரிய வர ஆரம்பித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.