ரவி சேகர் – ஏக்தா இருவரும் வாரணாசியில் வாழும் தம்பதியர். இவர்களுக்கு ஆர்யா என்ற 14 மாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. கடந்த 19ம் தேதியன்று, வாரணாசியில் இடதுசாரிகள் சார்பில் நடத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கெதிரான அமைதி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தம்பதியர் இருவருமாக இணைந்து காற்று மாசுப்பாடினை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தும் NGO அமைப்பு ஒன்றிணையும் நடத்தி வருகின்றனர். உபி வாரணாசியில் தடையை மீறி நடத்தப்பட்ட அந்த சிஏஏ அமைதி எதிர்ப்பு போராட்டத்தில் பங்குபெற்று சிறைக்கு சென்ற 60 க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களில் இவர்களும் ஒருவர். யோகியின் காவல்துறையினர் பெற்றோரை கைது செய்த காரணத்தால் இப்போது அவர்களது 14 மாத பெண் குழந்தை ஆர்யா, உறவினர்களின் பாதுகாப்பில் பராமரிக்கப்பட்டு வருகிறாள்.
இதுபற்றி கூறும் ரவி சேகரின் தாயார் சீலா திவாரி ‘அவள் சாப்பிடுவதில்லை. எப்படியாவது சிரமப்பட்டு அவளுக்கு ஒரு சில ஸ்பூன் உணவை கொடுக்கிறோம் . அவள், ‘அம்மா ஆவோ, பாபா ஆவோ (அம்மா வேணும் , அப்பா வேணும்)’ என்று எப்போதும் சொல்லி கொண்டே இருக்கிறாள். அவர்கள் வருவார்கள் என்று நாங்கள் அவளிடம் சொல்லிக்கொண்டிருக்கிறோம். என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை” என்று கூறினார்.
போராட்டத்தில் பனாரஸ் இந்து பல்கலையை சேர்ந்த 12 மாணவர்களும், குடிமக்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் நடத்திய தடியடியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி எட்டு வயது சிறுவன் ஒருவனும் கொல்லப்பட்டுள்ளான். மேலும் இந்தியாவிலேயே அதிகமான (21) நபர்கள் சுட்டு கொல்லப்பட்டதும் தலைமை பூசாரி யோகி ஆதித்யநாத் ஆளும் உபி மாநிலத்தில் தான்.