கடந்த மார்ச் 8ம் தேதி அன்று, இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தார் மாவட்டத்தின் சுர்குடாவில் ஒரு கிறிஸ்தவ தனியார் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது, சுமார் 70 பேர் கொண்ட ஒரு கும்பல் அங்கே சென்று வன்முறை செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் சுமார் இரவு 8.30 மணியளவில் ஜாகு என்ற நபருக்கு சொந்தமான வீட்டில் நடைபெற்றுள்ளது, அவ்விடத்தில் சுமார் 30 பேர் பிரார்த்தனை செய்ய கூடியிருந்தனர்.
கும்பலில் இருந்த சிலர் ஆயுதங்களை வைத்திருந்தாகவும், ஒரு சிலர் கட்டிடத்தை சுற்றி வளைக்க, மற்றவர்கள் வீட்டிற்குள் நுழைந்து, அங்கு குழுமி இருந்த கிறிஸ்தவர்களை இழி சொற்களால் திட்டி, தாக்கியதாகவும், பைபிள்கள், தளபாடங்கள், மிதிவண்டிகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை எரித்ததாகவும், இதில் பலத்த காயங்கள் ஏற்பட்ட 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது உள்ளூர் ஊடகம்.
தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக விசாரணையைத் துவக்க தேவையான முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்வதாக காவல்துறையினர் கிறிஸ்தவர்களுக்கு உறுதியளித்துள்ளனர். தாக்குதலை நடத்திய கும்பல் இந்து வலதுசாரி சித்தாந்தத்துடன் தொடர்புடையது என்று நம்பப்படுகிறது.
இந்திய சுவிசேஷ பெலோஷிப் (இ.எஃப்.ஐ) ஆண்டு அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டில் சத்தீஸ்கர் மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 55 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இதன் மூலம் உத்தரபிரதேசத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது சத்தீஸ்கர் மாநிலம் என்கிறது அவ்வறிக்கை.