இன்று டெல்லி டிஸ் ஹசாரி நீதிமன்றத்தில் சந்திரசேகர் ஆசாத்தின் ஜாமீன் மனு விசாரணையின் போது, கூடுதல் அமர்வு நீதிபதி காமினி லாவ் டெல்லி காவல் துறையினரை கடுமையாக சாடினார். பீம் இராணுவத் தலைவரான ஆசாதுக்கு “போராட்டத்தின் மூலம் தனது எதிர்ப்பை தெரிவிக்க இந்திய அரசியலமைப்பில் உரிமை வழங்கப்பட்டுள்ளது ” என்று கூறினார்.
நீதிபதியின் சரமாரியான கேள்விகள்:
“தர்ணாவில் ஈடுபடுவதில் என்ன தவறு உள்ளது ? எதிர்ப்பு தெரிவிப்பதில் என்ன தவறு? எதிர்ப்பை வெளிப்படுத்துவது அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமை ”என்று டெல்லி காவல்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் கூடுதல் அரசு வக்கீல் பங்கஜ் பாட்டியாவிடம் கடுமையாக கேள்வியை முன்வைத்தார். ஜமா மஸ்ஜித் பாகிஸ்தான் போல டெல்லி போலீசார் நடந்து கொள்கிறார்கள் என்றும் நீதிபதி கூறினார். மேலும் இந்த மனு மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
“நீங்கள் ஜமா மஸ்ஜித் ஏதோ பாகிஸ்தான் போல நடந்து கொள்கிறீர்கள். அது பாகிஸ்தானாக இருந்தாலும், நீங்கள் அங்கு சென்றும் கூட எதிர்ப்பு தெரிவிக்கலாம். பாகிஸ்தான் பிரிக்கப்படாத இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. குடிமக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு.”என்று நீதிபதி லாவ் கூறினார்.
144 தடை உத்தரவு “துஷ்பிரயோகம்”:
போராட்டத்திற்கு முன் அனுமதி தேவை என்று அரசு வழக்கறிஞர் குறிப்பிட்டபோது, நீதிபதி லாவ் அதை எதிர்த்தார், 144 வது பிரிவைப் பயன்படுத்துவது “துஷ்பிரயோகம்” என்று உச்ச நீதிமன்றம் பலமுறை கூறியுள்ளது என அவர் கூறினார்.
பாராளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் , பிற்காலத்தில் தலைவர்களாகவும் அமைச்சர்களாகவும் மாறியுள்ளதை தான் பார்த்துள்ளதாகவும் நீதிபதி கூறினார். பாராளுமன்றத்தில் சொல்லப்பட வேண்டிய விஷயங்கள் சொல்லப்படவில்லை என்றும், அதனால்தான் மக்கள் வீதிகளில் இருக்கிறார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.
அரசு வழக்கறிஞருக்கு பாடம் எடுத்த நீதிபதி :
ஆசாத் தவறாக பதிவிட்ட சில இடுகைகளை வாசித்து காட்டுங்கள் என நீதிபதி கேட்டார். அதற்கு ஜமா மஸ்ஜித்தில் மக்களை கூடுமாறு ஆசாத் பதிவிட்டுள்ளதாக வழக்கறிஞர் படித்து காட்டினார்.
இதனை கேட்டு கோபம் அடைந்த நீதிபதி “போராட்டம் நடத்துவதில் என்ன பிரச்சினை? யார் வேண்டுமானாலும் அமைதியாக போராடலாம். எதிர்ப்பை வெளிப்படுத்துவது என்பது ஒருவரின் அரசியலமைப்பு உரிமை. இதில் வன்முறை எங்கே வந்தது? இந்த இடுகைகளில் உள்ள தவறு என்ன? நீங்கள் அரசியலமைப்பைப் படித்தீர்களா? ”
“மத வழிபாட்டு தளங்களுக்கு வெளியே ஒருவர் எதிர்ப்பு தெரிவிப்பது எந்த சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதை நீங்கள் எனக்குக் காட்ட வேண்டும்” என்று அரசு வழக்கறிஞரை நோக்கி சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார் நீதிபதி.
பின்னர் டெல்லி காவல்துறையினரிடமிருந்து வன்முறையைத் தூண்டுவது தொடர்பான ஆதாரங்களையும் நீதிபதி கோரினர்., அதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் , “எங்களிடம் ட்ரோன் படங்கள் உள்ளன. எனினும் இதுவரை எங்களிடம் ஆடியோ-வீடியோ பதிவு ஏதும் இல்லை “ என கூறினார்.
ஆசாத் ஏன் கைது செய்யப்பட்டார்?:
பழைய டெல்லியின் தரியகஞ்ச் பகுதியில் குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆசாத் கடந்த டிசம்பர் 21ம் தேதி முதல் சிறையில் இருந்து வருகிறார். பொலிஸ் அனுமதியின்றி கடந்த டிசம்பர் 20 ம் தேதி சிஏஏ வுக்கு எதிராக ஜமா மஸ்ஜித்திலிருந்து ஜந்தர் மந்தர் வரை அணிவகுப்பை ஆசாத்தின் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.