கர்நாடக பாஜக அமைச்சர் ஒருவர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் “சர்வாதிகார” தன்மைக்கு எதிராகப் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.மோடியின் சர்வாதிகார தன்மையே பிராந்தியவாத கிளர்ச்சிகளுக்கு காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.
பி.எஸ். யெடியூரப்பா தலைமையிலான கர்நாடக பாஜக அரசாங்கத்தின் சிறு நீர்ப்பாசன அமைச்சர் ஜே.சி.மதுசாமி. இவர் மோடி அரசுக்கும் இந்திரா காந்தி தலைமையிலான அரசாங்கத்திற்கும் இடையே உள்ள ஒப்பமைவை சுட்டி காட்டி பேசினார். மைசூருவில் ‘தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் பிராந்திய சுதந்திரம்’ என்ற தலைப்பில் அகில பாரத ஷரனா சாகித்ய பரிஷத் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் இவ்வாறு அவர் பேசினார்.
நீட்டுக்கு எதிராக மத்திய அமைச்சர் தேஜஸ்வி முன் பேச்சு:
“முன்னேறியவர்களை மேலும் முன்னேறச் செய்யும் வகையிலும், பின்தங்கியவர்களை மற்றவர்களுக்கு இணையாக முன்னேற்றம் அடைய செய்யும் வகையிலும் மத்திய அரசின் கொள்கைகள் இருக்க வேண்டும்.” என்று நீட் தேர்வு குறித்து பேசும் போது கூறினார்.
நீட் மற்றும் சி.இ.டி தேர்வின் அறிமுகம், கர்நாடகா, தமிழ் நாடு போன்ற மாநிலங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் வாதிட்டார். மேலும் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திற்கு எடுத்துச் செல்லுமாறு பெங்களூர் தெற்கின் எம்.பி. தேஜஸ்வி சூர்யாவிடம் அவர் கேட்டு கொண்டார்.
“மத்திய அரசாங்கத்தில், ஒரு சர்வாதிகார அணுகுமுறை காண முடிகிறது. அது நம் ஒற்றுமையை பாதிக்கிறது. நாம் முன்னேறும்போது அது தாராளமயமாக்கப்பட்டிருக்க வேண்டும் , ஆனால் அது மையப்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம். நமக்கும் NEET தேர்வு முறைக்கும் தொடர்பு என்ன? இதை, தேஜஸ்வி சூர்யா நீங்கள் கேட்க வேண்டும். நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினர். இன்று கர்நாடகாவில் 160 சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் காலியாக உள்ளன. நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக உள்ள அனுபவத்தில் ஒரு அமைச்சராக, இதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். பிராந்தியவாதத்தின் உயர்வுக்கு இந்திய அரசின் சர்வாதிகார ஆட்சியே முக்கிய காரணம், ”என்றார்.
பாஜக அமைச்சரின் ஆதங்கம்:
“முன்னர் நாம் கல்வியில் சிறப்பான நிலையில் இருந்தோம்; ஆனால் இப்போது நஷ்டத்தில் இருக்கிறோம். இந்த பிராந்தியத்தைச் சேர்ந்த ஒருவராக நீங்கள் (தேஜஸ்வி சூர்யா ஆளும் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக) என்ன நீட் பரிசோதனை செய்தீர்கள். முற்போக்கான மாநிலங்களை வளர்ச்சியடையாத நிலைக்கு இழுக்கும் கொள்கை இந்திரா காந்தியின் கொள்கைகளுக்கு ஒத்ததாகும், இதை தான் நாம் அப்போது விமர்சித்து வந்தோம்.”
“நாம் இந்திரா காந்திக்கு எதிராகப் பேசும்போது, பின்தங்கியவர்களை முன்னேற்றும் முயற்சியில் ஏற்கனவே முன்னேறியவர்களின் வளர்ச்சியை அவர் தடுமாறச் செய்வார் என்று நாம் கூறி வந்தோம். அவர் (இந்திரா காந்தி) தனது சோசலிசத்தை நடத்துவதற்காக.. குடிசைகள் கட்ட, பங்களாவை இடிப்பார் என்று நாம் கூறினோம். ஆனால் இப்போதோ என்ன நடக்கிறது?, நீங்கள் (சூர்யா) மாநில உரிமைகளில் கை வைத்துள்ளீர்கள், நீங்கள் ஒரே நேரத்தில் பல்வேறு உரிமைகளில் கை வைத்துள்ளீர்கள்! ”என்று மதுசாமி குற்றம் சாட்டினார்.
“கல்வி என்பது ஒரு மாநில வரையறைக்கு உட்பட்டது, ஆனாலும் அதில் மத்திய அரசு தலையிட்டது. இதன் விளைவாக, வடக்கில் இருந்து பலர் இங்குள்ள மருத்துவ கல்லூரி இடங்களை நிரப்புகிறார்கள், அதே சமயம் பல இடங்களை காலியாக இருந்தும் உள்ளூர் மாணவர்களால் சேர முடியாமல் உள்ளது. இது அடுத்த நான்கு ஆண்டுகளில் மாநிலத்தில் சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறையை ஏற்படுத்தும்” என அவர் கூறினார்.
அடுக்கடுக்கான வாதங்கள்:
தொடர்ந்து பேசிய அவர் “முதுகலை படிப்புகளில் அந்தந்த மாநிலத்தில் இருந்தே சேவை மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க தமிழ்நாட்டு அரசு எடுத்து வரும் முயற்சிகளை மேற்கோள் காட்டிய அமைச்சர், ‘தேசியவாதி’ கட்சியாக இருந்தும் கூட, கர்நாடகா அத்தகைய நடவடிக்கைளை கூட எடுக்கவில்லை என்றும் கூறினார்.
ஒருவருக்கு அவர்களின் சரியான பங்கை வழங்கும்போதுதான் ஒற்றுமை உணர்வு உருவாகும் என்று அவர் கூறினார், வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர் மற்றும் கர்நாடகாவின் கோடகு மாவட்டத்திலும் வளர்ச்சியின்மையை சுட்டிக்காட்டினார். “நிர்வாகத்திலும் நாம் தோல்வியுற்றுள்ளோம், ஏனெனில் வருவாய் பதிவுகளில் சீரான தன்மை போன்ற விவகாரத்திலும் கூட நாடு சுதந்திரம் பெற்றது முதல் இந்நாள் வரை சரி செய்யப்படவில்லை,” என்று அவர் கூறினார்.
பஞ்சாபில் பாஜக எம்.எல்.ஏ ஒருவரை நிர்வாண படுத்தி விவசாயிகள் தாக்கிய காணொளி வைரல் ஆன நிலையில் தற்போது பாஜக கட்சியை சேர்ந்த ஒருவரே மோடி அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளது, பொது மக்களையும் தாண்டி சொந்த கட்சிக்குள்ளாகவே மோடி தலைமையிலான மத்திய அரசின் மீதான எதிர்ப்பு மனநிலையை காட்டுவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.