பிரபல எழுத்தாளரும் ,உலகறிந்த சமூக சேவகருமான ஹர்ஷ் மந்தர் ஒரு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் கூட. மத்தியப்பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப்பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்ற பெருமையை விட இவர், கலவரங்களில் அனாதைகளாக்கப்பட்ட முஸ்லிம்,தலித் மற்றும் பழங்குடியினருக்காவும் , மனநல காப்பகங்களில் பிள்ளைகளாலும் உறவினர்களாலும் கைவிடப்பட்ட மனநோய் பாதித்தவர்களை காப்பக கொடுமைகளில் இருந்து மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து வருபவர் என்கிற பெருமதிப்பு உண்டு.
“உணவு எனது உரிமை”- என்ற பெயரில் அமைப்பு ஒன்றை நடத்திவரும் அவர், டெல்லி பல்கலை, ஜாமியா மிலியா பல்கலை மற்றும் அமெரிக்க கலிபோர்னியா இன்ஸ்டிட்யூட் ஆப் இன்டக்ரல் ஸ்டடீஸ்,போஸ்டன், ஆஸ்டின், நியூயார்க் பல்கலைகழங்களிலும், இங்கிலாந்தின் சஸக்ஸ் பல்கலை,ஸ்டான்போர்டு கல்லூரி , ஐதராபாத் நல்சார் சட்டப்பல்கலை ஆகிய உயரிய கல்விக்கூடங்களில் கவுரவ பேராசிரியராக அவ்வப்போது அங்குள்ள மாணவர்களுக்கு சொற்பொழிவு ஆற்றும் மதிப்பிக்க பணிகளை மேற்கொள்பவர். முன்னதாக ” தி இந்து” நாளிதழில் இவருக்காக எப்போதும் ஒரு கட்டுரை காளம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் அனைத்துவித சமூக பிரச்சனைகளைப்பற்றியும் தீவிரமான ஆராய்ச்சிகளுக்கு பிறகு தரவுகளோடு ஆதாரப்பூர்வமாக எழுதி வருபவர். இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரைகையிலும் இவருக்கான தனியிடம் உண்டு.
மனித உரிமை ஆணையத்தின் கீழ் பணியாற்றிய காரணத்தால் இந்தியாவில் நிகழும் அத்தனை அவலங்களையும் விரல்நுனியில் வைத்திருப்பவர். மத்திய அரசின் கீழ் தேசிய குடிமக்கள் மற்றும் பாதுகாப்பு ஆணையத்திலும், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் நிலை. ஒருவேளை உணவிற்கு கூட வழியில்லாத இந்திய சிறுபான்மையினர், கலவரங்களில் கூட்டுப்பாலியல் மூலமும் கொலைகள் மூலமும் வீடுகளை இழந்தவர்களுக்கான உரிமைகள் மீட்புக்குழுக்களில் பணியாற்றியபடியே அவர்களுக்கான நலனில் அக்கறை கொண்டு நஷ்ட ஈடுகள் பெற்றுத்தருவதையே தன் வாழ்நாள் குறிகோளாக கொண்டவர். 2010ம் ஆண்டு நேசனல் அட்வைசரி கவுன்சிலில் பணியாற்றிய சிறந்த சிந்தனையாளர்.
Citizenship Amendment Bill எனப்படும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவினை எதிர்த்து இன்று டெல்லி பல்கலைக்கழக மாணவரிடையே உரையாற்றிய அவர் தெரிவித்தது என்னவென்றால் , இது முழுக்க முழுக்க இந்திய இஸ்லாமிய மக்களை அச்சுறுத்தும் விதமான மசோதாவாகும், இது நிறைவேற்றப்பட்டால் முஸ்லிம்கள் சொந்த நாட்டிலேயே அனாதைகளாகவும் அகதிகளாகவும் ஆக்கப்படுவார்கள். எனவே இந்த மசோதா நிறைவேறி யாராவது ஒரு முஸ்லிம் பாதிக்கப்பட்டால் முதலாவதாக நான் முஸ்லிமாக மாறுவேன், இரண்டாவதாக நான் இந்திய குடியுரிமை பெற்றவன் என்ற எந்த ஆதாரத்தையும் அரசிடம் சமர்பிக்கமாட்டேன், இறுதியாக யாரும் ஒரு முஸ்லிம் வஞ்சிக்கப்பட்டு அகதி என்ற பெயரில் சிறையிலடைக்கப்பட்டால் நானும் அவருடன் சேர்ந்து சிறைக்கு செல்வேன் என்று ஆவேசமாக பேசினார்.
இந்திய முஸ்லிம்களின் குடியுரிமையை மீட்டெடுக்க என்னாலான எல்லா முயற்சிகளிலும் ஈடுபடுவேன் என உறுதியளித்தார்.
கடந்த 2017ம் ஆண்டு நடந்த கூட்டுக்கொலைகள் மற்றும் சிறுமி ஆசிபா படுகொலை சம்பந்தமாக ஆளும் பாஜக அரசினை கண்டித்து பல கட்டுரைகள் இயற்றினார், 2002 குஜராத் படுகொலைகள் மறைக்கப்படுவது மாறி தற்போது அவை மறக்கப்பட்டுக்கொண்டுள்ளது என துணிச்சலாக பேசியவர். இந்தியாவில் சிறுபான்மையினருக்கு ஏதும் பிரச்சனையெனில் அவர்களை பாதுகாக்க பெரும்பான்மை சமூகமான இந்துகள் தான் முன்னேறி வரவேண்டுமே தவிர அடக்குமுறை செய்பவர்களோடு கரம் சேர்த்து முஸ்லிம்களையும் பழங்குடிகளையும் அழிக்க நினைக்க கூடாது அது இந்து மத இறையாண்மைக்கு இழுக்கானது, இந்தியராக இருப்பதற்கே தகுதியற்றது என்றார்.
இந்திய மக்களின் ஏழ்மை, இந்தியாவில் நிகழும் மதக்கலவரங்கள், முஸ்லிம்களுக்கெதிரான அரசு மற்றும் அதிகார வரம்புகளின் அடக்குமுறையை வேடிக்கை பார்க்கும் சக இந்தியன் , உணவில்லாமல் தெருக்களில் திரியும் இந்திய எதிர்காலம் என்பன போன்ற சமூக அக்கறையுடய விஷயங்களை பற்றி தவறாமல் குரலெழுப்பி வரும் திரு.ஹர்ஷ் மந்தர் , முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க வந்திருக்கும் இவரது பேச்சுகள் வரவேற்கத்தக்கது.
ஆக்கம் : நஸ்ரத்