பிரதமரைப் பாதுகாக்கும் பணியில் உள்ள சிறப்புப் பாதுகாப்பு படையினரின் ஒதுக்கீட்டை மத்திய அரசாங்கம் ரூ .540 கோடியிலிருந்து சுமார் 600 கோடியாக உயர்த்தியுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இது ரூ .420 கோடியிலிருந்து சுமார் ரூ .540 கோடியாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது 3000 பேர் கொண்ட சிறப்பு பாதுகாப்புக் படையினரால் பாதுகாப்பு வழங்கப்படும் ஒரே நபர் பிரதமர் மோடி மட்டுமே. நாட்டின் ஜனாதிபதியும் கூட இந்த பட்டியலில் இல்லை.
முன்னாள் பிரதமர் குடும்பத்தினரின் பாதுகாப்பு நீக்கம்:
அதே சமயம் கடந்த ஆண்டு நவம்பரில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வாத்ரா ஆகிய மூன்று பேருக்கான எஸ்பிஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கான எஸ்பிஜி பாதுகாப்பும் கடந்த ஆகஸ்டில் திரும்பப் பெறப்பட்டது. இது தவிர முன்னாள் பிரதமர்கள் எச்.டி.தேவேகவுடா மற்றும் வி.பி. சிங் ஆகியோரின் எஸ்பிஜி பாதுகாப்பும் திரும்பப் பெறப்பட்டது.
எஸ்பிஜி பாதுகாப்பு எப்போது துவக்கப்பட்டது?:
ராகுல் காந்தியின் பாட்டி மற்றும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட ஒரு வருடம் கழித்து 1985 ஆம் ஆண்டில் எஸ்பிஜி அமைக்கப்பட்டது. நாட்டின் பிரதமர்களைப் பாதுகாப்பதே இதன் பிரதான பணி.1991 இல், ராகுல் காந்தியின் தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர், எஸ்பிஜி பாதுகாப்பு முழு குடும்பத்திற்கும் நீட்டிக்கப்பட்டது.
வாஜ்பாய் காலத்தில்:
1999 ஆம் ஆண்டில், அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான என்டிஏ அரசாங்கம் எஸ்பிஜியின் நடவடிக்கைகளை மறுஆய்வு செய்ய முடிவு செய்தது, மேலும் முன்னாள் பிரதமர்கள் பி.வி. நரசிம்மராவ், எச்.டி.தேவேகவுடா மற்றும் ஐ.கே.குஜ்ரால் ஆகியோரின் பாதுகாப்பை வாபஸ் பெற்றது.
அடல் பிஹாரி வாஜ்பாய் 2018 இல் இறக்கும் வரை எஸ்பிஜி பாதுகாப்பு பெற்று இருந்தார்.
கடந்த ஆண்டு, ஸ்பிஜி சட்டம் மோடி அரசால் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி தற்போதைய மற்றும் முன்னாள் – பிரதம மந்திரி – மற்றும் அவர்களுடன் வசிக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு (பிரதமர்) பதவியில் இருந்து வெளியேறிய ஐந்து ஆண்டுகளுக்கு எஸ்பிஜி பாதுகாப்பு கிடைக்கும் என மோடி அரசு திருத்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.