சிஏஏ மற்றும் என்.ஆர்.சி க்கு எதிராக சாதி மதம் கடந்து இந்திய அளவில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் கொல்கத்தாவின் மாயோ சாலையில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு அருகே கடந்த திங்களன்று (30-12-19) குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என்.ஆர்.சி ஆகியவற்றை எதிர்த்து பிராமண அர்ச்சகர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தினர். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து நாட்டை மத அடிப்படையில் பிளவுபடுத்தும் முயற்சிகள் கவலை அளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பஸ்ச்சிம் பங்கா சனாதன் பிராமின் எனும் அறக்கட்டளை சார்பில் இப்போராட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பிராமண அர்ச்சகர்கள் கலந்து கொண்டு “No NRC & No CAA ” என்ற பதாகைகள் தாங்கியும் , கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முன்னேற வேண்டுமானால் முதலில் அமைதி நிலவ வேண்டும் என கூறிய அவர்கள், மத்திய அரசின் CAA மற்றும் NRC ஆகியவற்றினால் தான் நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக குற்றம் சாட்டினர்.
‘CAA மற்றும் NRC ஐப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ஒதுக்கி வைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் துரதிர்ஷ்டவசமானது’ என்று அறக்கட்டளை பொதுச் செயலாளர் ஸ்ரீதர் மிஸ்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
இதை ஒரு முன்னுதாரணமாக கொண்டு நாடு முழுவதுதிலும் உள்ள நல்ல உள்ளம் கொண்ட பிராமண சமூகத்தவரும் கூட ஒன்றிணைந்து பாசிச சக்திகளை வீழ்த்த வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.