ஹைதராபாத்: நபிகள் நாயகம் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ ராஜா சிங் கூறிய இழிவான கருத்துக்களில் இருந்து தெலுங்கானா மாநில பாஜக விலகியுள்ளது. “எங்கள் கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கிறது, இதற்கு மாறாக யாரும் பேசியிருந்தால், நாங்கள் அதைக் கவனிப்போம்” என்று பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் கிருஷ்ண சாகர் ராவ் தெரிவித்துள்ளார்.
கோஷாமஹாலைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஜெய் ஸ்ரீ ராம் சேனலில் யூடியூப்பில், திங்கள்கிழமை இரவு வெளியிட்ட காணொளியில் நபிகளார் குறித்து இழிவான கருத்துக்களை தெரிவித்தார். இது வெளிச்சத்திற்கு வந்த பிறகு, நகர போலீஸ் கமிஷனர் சி.வி.ஆனந்த் அலுவலகத்திற்கு வெளியேயும், ஹைதராபாத்தில் உள்ள மற்ற பகுதிகளிலும் அவரைக் கைது செய்யக் கோரி ஏராளமான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மக்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து பாஜக எம் எல் ஏ கைது செய்யப்பட்டார்.
“நாங்கள் ஒரு தேசிய கட்சி, மத நம்பிக்கைகளுக்கு இடையே வேறுபாடுகள் காண்பதில்லை. பாஜக அனைவரையும் சமமாக நடத்துகிறது. வெறுப்புப் பேச்சுக்களை நாங்கள் ஆதரிப்பதில்லை, ராஜா சிங் கட்சியின் இந்த நிலைபாட்டிலிருந்து விலகியிருந்தால், கட்சி அதைக் கவனிக்கும்,” என்று பாஜகவின் தலைமை செய்தித் தொடர்பாளர் கிருஷ்ண சாகர் ராவ் தெரிவித்துள்ளார்.