கர்நாடக அமைச்சரும் பாஜக தலைவருமான பி.சி. பாட்டீல் செவ்வாய்க்கிழமை ஹிரேகேருவில் உள்ள தனது வீட்டில் சொகுசாக இருந்து கொண்டு கோவிட் -19 தடுப்பூசி போட்டு கொண்டதை அடுத்து கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். இது அரசின் கொரோனா வைரஸ் தொடர்பான நெறிமுறையை மீறிய செயலாகும்.
“இன்று # COVID19 தடுப்பூசியை என் மனைவியுடன், எனது ஹைரேகூர் வீட்டில், அரசு மருத்துவர்கள் மூலம் போட்டு கொண்டேன்… ‘மேட் இன் இந்தியா’ தடுப்பூசிகள் பல நாடுகளால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகின்ற நிலையில்,நம் நாட்டில் உள்ள சிலர் தடுப்பூசிகள் குறித்து தவறான தகவல்களை பரப்புகின்றன, ”என்று பாஜக எம்எல்ஏ படங்களுடன் ட்வீட் செய்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளதாக மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்தார்.
“கொரோனவிற்கான நெறிமுறையின்படி இப்படி செயல்பட அனுமதியில்லை. நாங்கள் இது குறித்து மாநில அரசிடம் அறிக்கை கேட்டுள்ளோம், ”என்று பூஷன் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
நான் என்ன தவறு செய்து விட்டேன் – அமைச்சர்:
கடும் விமர்சனத்திற்கு பின்னரும் அமைச்சர் தனது செயலை ஆதரிக்கும் வகையில்
“நான் தடுப்பூசி போடுவதற்காக ஒரு மருத்துவமனைக்குச் சென்றிருந்தால், அங்குள்ள மக்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால் வீட்டில் இருந்தால் நான் மக்களையும் சந்தித்து கொள்ள முடியும், மேலும் தடுப்பூசியும் போட்டு கொள்ள முடிகிறது. இதில் என்ன தவறு? ” என்று கூறினார்.