மோடி அரசாங்கத்தின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏறத்தாழ 25 கோடி மக்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
10 மத்திய தொழிற்சங்கங்கள் புதன்கிழமை நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் நாடு முழுவதும் வங்கி, போக்குவரத்து மற்றும் பிற சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
மத்திய அரசாங்கத்தின் ‘மக்கள் விரோத’ கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்படும் இந்த போராட்டத்தில் 25 கோடி பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
INTUC, AITUC, HMS, CITU, AIUTUC, TUCC, SEWA, AICCTU, LPF, UTUC போன்ற பத்து மத்திய தொழிற்சங்கங்கள் பல்வேறு துறைசார்ந்த சுயாதீன கூட்டமைப்புகள் மற்றும் பல சங்கங்கள் ஒன்றிணைந்து கடந்த செப்டம்பர் மாதம் 2020, ஜனவரி 8 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்ததில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.
கோரிக்கைகள் என்ன?
வேலைவாய்ப்பின்மை, அனைத்து விதமான தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்துதல் போன்றவையே முக்கிய கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டுள்ளது
வங்கி, போக்குவரத்து சேவைகள் பாதிப்பு :
புதன்கிழமை வேலைநிறுத்ததினால் ஏற்பட போகும் தாக்கம் குறித்து பல வங்கிகள் ஏற்கனவே பங்குச் சந்தைகளுக்குத் ( stock exchanges) தெரிவித்துள்ளன.
AIBEA, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் (AIBOA), BEFI, INBEF, INBOC மற்றும் வங்கி கர்மாச்சாரி சேனா மகாசங் (BKSM) உள்ளிட்ட பல்வேறு வங்கி ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளன.
வேலைநிறுத்தம் காரணமாக பணம் டெபாசிட் செய்ய, பணம் எடுக்க, காசோலை விநியோகம் போன்ற பல்வேறு வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இருப்பினும், தனியார் துறை வங்கிகளில் சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பில்லை.
நாடு தழுவிய இந்த வேலைநிறுத்த அழைப்பின் காரணமாக வங்கி சேவைகள் மட்டுமின்றி , போக்குவரத்து மற்றும் பிற முக்கிய சேவைகளும் பல மாநிலங்களில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அறிக்கை:
“கடந்த 2020, ஜனவரி 2-ம் தேதி மத்திய தொழிலாளர் துறை அமைச்சகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 14 அம்ச கோரிக்கைகளில் ஒன்றைக்கூட தீர்ப்பதற்குரிய உறுதிமொழியை அமைச்சர் வழங்கவில்லை. மேலும் தொழிலாளர்களை மதிக்கக்கூடாது என்ற மனநிலையில் அரசு இருக்கிறது.”
ஜனவரி 8, 2020 அன்று நடைபெறவிருக்கும் தேசிய அளவிலான வேலைநிறுத்தத்தில் குறைந்தது 25 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.,வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து தொழிலாளர் எதிர்ப்பு, மக்கள் விரோத மற்றும் தேச விரோதக் கொள்கைகளை திரும்பப்பெற இன்னும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று பத்து மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
அரசு மிரட்டல் :
“எதிர்ப்பு உட்பட எந்தவொரு வடிவத்திலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் எந்தவொரு ஊழியரும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும், இது ஊதியங்களைக் குறைப்பதைத் தவிர, பொருத்தமான ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் உள்ளடக்கும்” என்று அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அலுவலக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.