பொதுவாக வருமான வரிச்சட்டம் பிரிவு 80G-ல் இருந்து அனைத்து மத அறக்கட்டளைகளுக்கும் விதிவிலக்கு அளிக்கப்படுவதில்லை. ஒரு தொண்டு நிறுவனமோ அல்லது மத சம்பந்தமான அறக்கட்டளையோ வருமான வரிச்சட்டம் பிரிவு 11 மற்றும் 12-ன் கீழ் விண்ணப்பித்தால் மட்டுமே அவற்றின் நன்கொடையாளர்களுக்கு 80G பிரிவின் கீழ் வருமானவரிச் சலுகை அளிக்கப்படும்.
எனினும் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி அமைக்கப்பட்ட “ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா” என்ற அறக்கட்டளைக்கு கொடையளிக்கும் நன்கொடையாளர்களுக்கு 2020-21ஆம் நிதியாண்டிலிருந்து வருமானவரிவிலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீராம் ஜென்ம பூமி தீர்த் ஷேத்ராவினால் அயோத்தியில் அமைக்கப்படவிருக்கும் கோயிலை வருமானவரிச்சட்டம் பிரிவு 80G – உட்பிரிவு 2b-ன் கீழ் “வரலாற்று சிறப்பு மிக்க மற்றும் புகழ் பெற்ற பொது வழிபாட்டுத்தளமாக” அறிவித்துள்ள நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம் , இவ்வறக்கட்டளைக்கு கொடையளிப்பவர்களுக்கு 50% வரை வருமான வரியிலிருந்து விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது.
இதற்கு முன்பு 2017 ஆம் ஆண்டின் அறிவிப்பின்படி, சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் திருக் கோவில், கொட்டிவாக்கத்தில் உள்ள அரியக்குடி ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில் மற்றும் மஹாராஷ்ட்ரா சஜ்ஜன்காட்டில் உள்ள ஸ்ரீராம் ராம்தாஸ் ஸ்வாமி சமிதி கோயில், அம்ரிஸ்தரில் உள்ள ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் குருத்வாரா ஆகியவை இதே போன்று வரலாற்று சிறப்பு மிக்க மற்றும் புகழ் பெற்ற பொது வழிபாட்டுத்தளங்களாக அறிவிக்கப்பட்டு 80G பிரிவின் கீழ் வருமான வரிச் சலுகையும் அளிக்கப்படுவதாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் அதிகாரப்பூர்வ கெஜட் என்னும் அரசிதழில் “வரலாற்றுச் சிறப்பு, தொல்லியல் சிறப்பு, கலைநய சிறப்பு, மற்றும் புகழ் பெற்ற பொதுவழிபாட்டுத் தலமாக” அறிவிக்கப்படும் இடங்களின் புனரமைப்பிற்கு கொடையளிக்கும் நன்கொடையாளர்களுக்கு 80G-2b விதியின் கீழ் வருமான வரிச் சலுகை அளிக்கப்படுகிறது.