Asadudin Owaisi

‘என் மார்பில் சுட்டாலும் சரி, நான் ஆவணங்களை காட்ட மாட்டேன்’ – அசாதுதீன் ஒவைசி சூளுரை!!

சி.ஏ.ஏ, என்.பி.ஆர் மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராக போராடி வரும் மக்களுக்கு எதிராக பாஜக மற்றும் சங்பரிவார கூட்டதினரின் தொடர் வெறுப்பு பிரச்சாரங்களுக்கு பதிலடி தரும் விதமாக ” எனது மார்பில் குண்டுகள் பாய்ந்தாலும், எனது ஆவணங்களை காண்பிக்க முடியாது” என AIMIM தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

பாஜக தொடங்கி வைத்த வெறுப்பு வன்முறை கோஷங்களில் முதன்மையானது “தேஷ் கே கத்தாரோ கோ, கோலி மாரோ சாலோ கோ” – ‘தேச துரோகிகளை சுட்டு தள்ளுங்கள்’ என்பது தான். தேச துரோகிகள் என்பவர்கள் ஷஹீன் பாகில் போராடுபவர்கள், அவர்களுக்கு ஆதரவாக உள்ளவர்கள் என்பதை பல்வேறு பாஜக தலைவர்கள் தங்கள் பேச்சுக்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஒவைசியின் உரை:

குடியுரிமை (திருத்தம்) சட்டம் (சி.ஏ.ஏ), குடிமக்களின் தேசிய பதிவு (என்.ஆர்.சி) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு (என்.பி.ஆர்) ஆகியவற்றிற்கு எதிராக தனது எதிர்ப்பை பதிவு செய்யும் முகமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆந்திராவின் கர்னூலில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் ” “நீங்கள் எங்களை சுடுவீர்களா? உங்களால் முடிந்ததை நீங்கள் செய்யுங்கள். நான் இந்த நாட்டில் தான் இருப்பேன், ஆனால் ஆவணங்களைக் காட்ட மாட்டேன்.

ஆவணங்களைக் காட்டும்படி கேட்டால், அதற்கு பதிலாக நான் என் மார்பைக் காண்பிப்பேன், தோட்டாக்களை சுடச் சொல்வேன். என் இதயத்தில் சுடுங்கள், அங்கு தான் இந்தியா மீதான எனது நேசம் உள்ளது . நாட்டிற்கான நம் நேசத்தை காட்டிட நம் பெயர்களே போதுமானது. இந்தியா மீதான நம் நேசத்தை காட்டிட நம் முன்னோர்களின் மரபே போதுமானது. ” என பேசினார்.

“நான் உயிர் இழந்தாலும் சரியே” :

முஸ்லிம்களை குறிவைப்பதன் மூலம் பாஜக அரசு மிகப்பெரிய தவறு செய்து வருகிறது. என்னிடம் எதுவும் இல்லை. இந்த நாடு தான் எனது எல்லாமுமே. நீங்கள் என் நாட்டை என்னிடமிருந்து பறிக்கப் போகிறீர்கள் என்றால், நான் அதற்கு எதிராக வலிமையாக போராடுவேன் . இந்த போரில் நான் என் உயிரை இழந்தாலும் சரியே, குறைந்தபட்சம் அடுத்த தலைமுறையினர் என்னை ஒரு வீரனாக நினைவில் கொள்வார்கள்” என்றும் அசாதுதீன் கூறினார்.

பாஜக வுக்கு நன்றி:

“உங்கள் ஆட்சி முஸ்லிம்களிடமிருந்து மரண பயத்தை நீக்கியதால் நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நாங்கள் இப்போது மரணத்திற்கு அஞ்சவில்லை, ஏனென்றால் உங்கள் அரசாங்கமும், உங்கள் அடிவருடிகளும் “தேஷ் கே கத்தாரோ கோ, கோலி மாரோ சாலோ கோ” – ‘தேச துரோகிகளை சுட்டு தள்ளுங்கள்’ என்ற (பாஜக அமைச்சர்) அனுராக் தாக்கூரின் கோஷத்தை செயல்படுத்த விரும்புகிறார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம், எங்களை சூடு! உங்களால் எத்தனை தோட்டாக்களை சுட்டு விட முடியும்?

அசாதுதீன் ஒவைசி
அசாதுதீன் ஒவைசி
வன்முறை பேச்சை பேசிய பாஜக அமைச்சர்:

முன்னதாக ஜனவரி மாதம் நடந்த டெல்லி தேர்தல் பிரச்சாரத்தின்போது, மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் அனுராக் தாக்கூர், சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று வன்முறையை தூண்டும் பேச்சை பேசினார். எனினும் ஒரு FIR கூட இது தொடர்பாக பதிய படவில்லை.

அவரின் பேச்சை தொடர்ந்து ஜாமியா மாணவர்கள் மற்றும் ஷாஹீன் பாக் எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்றன.. தேர்தல் ஆணையம் அவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதில் இருந்து 72 மணி நேரம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.