Hate Speech Hindutva Muslims

முஸ்லிம் வெறுப்பு பிரசாரத்தில் முன்னிலை வகிக்கும் ‘ஹிந்துத்துவா பாப்’ இசை பாடல்கள் !

புது தில்லி, இந்தியா – “இன்சான் நஹி ஹோ சாலோ, ஹோ தும் கசாயி; “பஹுத் ஹோ சுகா ஹிந்து முஸ்லிம் பாய் பாய்” – நீங்கள் மனிதர்களே அல்ல, கசாப்புக் கடைக்காரர்கள்; இந்த இந்து-முஸ்லிம் சகோதரத்துவம் எல்லாம் போதும்.

பாடகர் பிரேம் கிருஷ்ணவன்ஷி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு யூடியூப்பில் வெளியிட்ட ஒரு ‘பஜன்’ (பக்தி பாடல்) பாடல் வரிகள் இவை.

சமகால வெறுப்பு அரசியலால் தூண்டப்பட்டு, கிருஷ்ணவன்ஷியின் பாடல் இந்தியாவில் ஒரு புதிய வெகுஜன கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக வட மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான பாடல்கள் இந்து மேலாதிக்க குழுக்களின் பேரணிகளில் இசைக்கப்படுகின்றன.

முஸ்லிம் சிறுபான்மையினரை இலக்காகக் கொண்ட வெறுப்பு, துஷ்பிரயோகம் மற்றும் இனப்படுகொலைக்கான அச்சுறுத்தல் போன்ற செய்திகளை உள்ளடக்கியதாக இப்பாடல்கள் உள்ளதால் இந்து தீவிர வலதுசாரிகளின் ஆதரவாளர்கள் இதை மிகவும் விரும்பி பரப்பி வருகின்றனர். இதுபோன்ற பல பாடல்கள் யுடியூப் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் காணலாம்.

‘இந்துத்வா பாப்’:

உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் பொறியியல் பட்டதாரியான கிருஷ்ணவன்ஷி, பாலிவுட் பாடகராக விரும்பினார். ஆனால் அது முடியாமல் போனது. அதனால் அவர் லைவ் (நேரடி) நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்வுகள் நடத்துவதன் மூலம் பணம் சம்பாதித்து வருகிறார்.

2014 இல் இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஆட்சிக்கு வந்ததும் திருப்புமுனை ஏற்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசாங்கத்தின் வருகையானது, முன் எப்போதும் இல்லாத வகையில் வகுப்புவாத சிந்தனைக்கு வித்திட்டது. இந்தியாவின் சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லீம்கள் மீதான வெறுப்புத் தாக்குதல்கள், கிட்டத்தட்ட தினசரி விவகாரமாக மாறியது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இசை, கவிதை, சினிமா போன்றவையும் இந்த வெறுப்பு அரசியலை நிலைநிறுத்துவதற்கான கருவிகளாக மாறிவிட்டன.

கடந்த சில மாதங்களில், இந்தியா பல மாநிலங்களில் இந்து பண்டிகைகளின் போது மத வன்முறையைக் கண்டது, முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கும் இடங்களில் அணிவகுப்புகளை நடத்தியது வலதுசாரி கும்பல். குறிப்பாக மசூதிகளுக்கு வெளியே இஸ்லாமோஃபோபிக் பாடல் வரிகளுடன் உரத்த இசையை இசைத்து நடமாடினர்.

“முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டிய தேச விரோதிகள்”:

கிருஷ்ணவன்ஷி இந்தி மற்றும் போஜ்புரி மொழிகளில் பாடுகிறார். அவரது ரசிகர் பட்டாளம் முக்கியமாக உத்தரபிரதேசத்தில் உள்ளது, கிட்டத்தட்ட 205 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம், பாஜகவின் காவி அங்கி அணிந்த இந்து சாமியார், யோகி ஆதித்யநாத் அவர்களால் ஆளப்படுகிறது, அவர் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு மற்றும் கொள்கை கொண்டவராக பெயர் பெற்றவர்.

அவரது பல பாடல்களில், கிருஷ்ணவன்ஷி முஸ்லிம்களை “பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டிய தேச விரோதிகள்” என்று பரிந்துரைக்கிறார். “இந்துக்கள் விரைவில் விழித்தெழவில்லையானால் இறுதியில் இந்துக்களை நமாஸ் செய்ய முஸ்லிம்கள் கட்டாயப்படுத்துவார்கள்” என்று அவரது பாடல் ஒன்று கூறுகிறது:

ஆனால் இவையெல்லாம் வெறுப்பு கருத்துக்களை கொண்ட பாடல்கள் அல்ல என்று பாடகர் கூறுகிறார்.

“எனது இசை இஸ்லாமோஃபோபிக் என்று நான் நினைக்கவில்லை. எனது இசை உண்மையைக் குறிக்கிறது, அது இஸ்லாமிய வெறுப்பு என்று யாராவது நினைத்தால், அவர்கள் அப்படி உணருவதை என்னால் தடுக்க முடியாது, ”என்று அவர் அல் ஜசீராவிடம் கூறினார்.

சமீபத்தில், உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வர் ஆதித்யநாத்தை புகழ்ந்து பாடியதற்காக அவருக்கு உத்தரபிரதேச அரசு விருது வழங்கியது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் லக்னோவில் நடந்த ஆதித்யநாத்தின் பதவியேற்பு விழாவின் போது உத்தரப்பிரதேச மாநில விருதை பிரேம் கிருஷ்ணவன்ஷி பெற்றார்.

இந்த வெறுப்புப் பாடல்களில் பல இந்து தேசியவாத அரசியல்வாதிகளான மோடி, ஆதித்யநாத் மற்றும் பிற பிஜேபி தலைவர்களின் புகழுரையாக அமைந்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் லக்னோவில் நடந்த ஆதித்யநாத்தின் பதவியேற்பு விழாவின் போது உத்தரப்பிரதேச மாநில விருதை பிரேம் கிருஷ்ணவன்ஷி பெற்றார்.

முகலாயர்கள் மற்றும் துணைக் கண்டத்தின் பிற முஸ்லீம் ஆட்சியாளர்களைப் பற்றியும் பாடல்கள் உள்ளன, வன்முறை மற்றும் அச்சுறுத்தல்கள் மூலம் இஸ்லாத்தை பரப்பும் “படையெடுப்பாளர்கள்” என்று அவர்களை பற்றி குறிக்ககப்படுகின்றது. அவர்களின் இசை வீடியோக்களில் வாள், திரிசூலங்கள் மற்றும் கைத்துப்பாக்கிகளைக் காட்டிக் கொள்வதுமான காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

‘இந்துத்துவா பாப்’ புகழ் லக்ஷ்மி துபே:

மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபாலில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த லக்ஷ்மி துபே, இசைக்கலைஞரான தனது மறைந்த தாத்தாவிடமிருந்து இந்து பக்தி பாடல்களைக் கேட்டு வளர்ந்தார்.

அப்போது, பள்ளி நிகழ்வுகளில் முஸ்லீம்-இந்து சகோதரத்துவம் மற்றும் மத சகவாழ்வுக்கான பாடல்களைப் பாடி வந்ததாக அவர் கூறினார்.

31 வயதான துபே, உள்ளூர் செய்தித்தாளில் பகுதி நேர நிருபராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால், கிருஷ்ணவன்ஷியைப் போலவே, 2014-ல் மோடி பிரதமராக பதவியேற்றதன் மூலம் அவரது நிலைமையும் மாறியது.

“நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவள் அல்ல, ஆனால் இந்துக்களுக்காக மோடி செய்த அனைத்திற்கும் நான் நன்றி சொல்வேன்” என்று அல் ஜசீராவிடம் துபே கூறினார்.

துபே நெற்றியில் குங்குமமும், கழுத்தில் சாமந்தி மலர் மாலையும் அணிந்து பாடும்போது, அவரது “இந்துத்வா பாப்” பாடல்களை கேட்போர் ஆர்வத்துடன் கேட்கின்றனர். “ஹிந்துத்வா” என்பது ஹிந்து மேலாதிக்க இயக்கத்தைக் குறிக்கும் ஹிந்தி வார்த்தை.

“அகர் ஹிந்துஸ்தான் மெய்ன் ரெஹ்னா ஹோகா, தோ வந்தே மாதரம் கெஹ்னா ஹோகா” (நீங்கள் இந்தியாவில் இருக்க விரும்பினால், வந்தே மாதரம் கட்டாயமாக சொல்லியே ஆக வேண்டும்) என துபேயின் மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்று கூறுகிறது:

பேராசிரியர் பிரம்மா பிரகாஷ்:

வெறுப்பின் இசை இந்தியாவில் மத வன்முறையின் வடிவத்தை மாற்றியுள்ளது என்கிறார் புது தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான பிரம்மா பிரகாஷ்,

இந்தியாவில் நடந்த கலவரங்கள் மற்றும் படுகொலைகளின் வரலாற்று வடிவங்களை நாங்கள் அறிவோம்: தலைவர் உரை நிகழ்த்துவார், கலவரம் தெருக்களில் பரவும். ஆனால் தற்போது இந்த முறை மாறிவிட்டதாகத் தெரிகிறது. இவர்களுக்கு இப்போது தலைவர் தேவையில்லை. அவர்களுக்கு தேவையானது ‘பக்தி வைப்ரேட்டர்’” என்றார் பிரகாஷ்.

நீங்கள் DJ [டிஸ்க் ஜாக்கி] பாடல்களை ஒளிபரப்புங்கள், அது அதன் பணியை நிறைவேற்றும். இது கும்பல்களை நகர்த்தி படுகொலையில் பங்கேற்க வைக்கும். வன்முறையைத் தூண்டுவதற்குத் தூண்டுபவர் தேவையில்லை.இந்த இசையும், பாடலுமே போதும் வெறுப்பு அதன் வேலையை செய்து முடிக்கும் ”என்று பிரகாஷ் மேலும் கூறினார்.

1930 களில் ஜெர்மனியில் நாஜி ஆட்சியின் கீழ் தயாரிக்கப்பட்ட இசையுடன் இந்த இசை வடிவம் “அதிர்ச்சியூட்டும்” இணையாக இருப்பதாக பிரகாஷ் கூறினார்.

“மார்ச் பேண்ட், ஊர்வல இசை, திரும்பத் திரும்ப எழுப்பப்படும் ஜெய் ஸ்ரீ ராம் போன்ற கோஷங்கள், வகுப்புவாதப் பாடல்கள், (நாஜி ஜெர்மனி நாட்டின்) ‘ஹெய்லை’ ஒத்துள்ளன ” என்று அவர் கூறினார். “ இந்த இசை, வெறுமென சில அதிர்வுகளை மட்டுமே கொண்டது அல்ல, கூட்டத்தினரை உணர்ச்சிவசப்பட வைக்கும். (நாஜி பாடல்களுடன் ஒப்பிடுகையில்) ஒற்றுமைகள் அதிர்ச்சியளிக்கின்றன.”

துபேயின் யூடியூப் சேனலுக்கு கிட்டத்தட்ட 300,000 சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர், மேலும் அவரது பாடல்கள் பல லச்ச கணக்கான பார்வைகள் கொண்டதாகவும் இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் கருத்துகளைக் கொண்டுள்ளன. இவர் பிஜேபி உறுப்பினர்களால் அவர்களது நகரங்களில் நிகழ்ச்சி நடத்த அடிக்கடி அழைக்கப்படுகிறார்.

“முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக எனது பாடல்களில் எதுவும் இல்லை” ஆனால் “நாட்டின் எதிரிகள் மற்றும் பாகிஸ்தானை ஆதரிப்பவர்களுக்கு” எதிராக மட்டுமே கருத்துக்கள் உள்ளதாக துபே கூறுகிறார்.

“பாகிஸ்தானைச் சேர்ந்த யாராவது தங்கள் (இஸ்லாமிய) மதத்தின் ( இந்திய) தேசவிரோதிகளிடமிருந்து பாரிய தளவாட ஆதரவையோ அல்லது தங்குமிடத்தையோ பெறாவிட்டால், நம் நாட்டைத் தாக்க முடியுமா? இந்தியாவில் உணவை உண்டுவிட்டு அண்டை நாட்டிற்கு உதவுவது தேசவிரோதம் என்கிறார் அப்பாடகி, எனினும் இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தானுடன் சேர்ந்து தேச விரோத செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுவது பாசிஸ்டுகளின் பொய்களில் ஒன்றேயாகும்.

அவரது குழுவில், துபேக்கு ஒரு மேலாளர், பின்னணி பாடகர்கள் மற்றும் பிற நபர்களும் உள்ளனர். இவருக்கு பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. இந்த பணத்தை இந்து விதவைகள் மற்றும் ஏழைகளின் நலனுக்காக செலவிடுவதாகக் அவர் கூறுகிறார்.

இங்கு பிரச்னை என்னவெனில் “லவ் ஜிஹாத்” (இந்து தீவிர வலதுசாரிகளால் பரப்பப்படும் நிரூபிக்கப்படாத சதி கோட்பாடு, இது முஸ்லிம் ஆண்கள் இந்து பெண்களை திருமணம் செய்து கொண்டு அவர்களை இஸ்லாத்திற்கு மாற்றுவதற்காக அவர்களுடன் உறவுகளை உருவாக்குகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறது) என்கிறார் துபே.

துபே மற்றொரு வலதுசாரி சதி கோட்பாட்டையும் நம்புகிறார்: ஏராளமான முஸ்லிம்கள் “நிறைய குழந்தைகளைப் பெற” மற்றும் “தங்கள் மக்கள் தொகையை அதிகரிக்க” பலதார மணத்தை கடைப்பிடிக்கின்றனர் என்கிறார்.

அவர்கள் [முஸ்லீம்கள்] ஏன் இந்து பெண்களை திருமணம் செய்து மதம் மாற்றுகிறார்கள்? சிறுபான்மை சமூகத்தினர் 5-10 திருமணங்களை செய்து 20-50 குழந்தைகளை பெற்றுள்ளனர். அவர்களின் மக்கள் தொகை பெருகி வருகிறது. நம் நாடு அவர்களை ஆதரிக்கவில்லை என்றால், அவர்களின் மக்கள் தொகை இந்த அளவுக்கு வளருமா? எங்கிறார் அவர்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அரீப் உதின், இதுபோன்ற “வெறுப்பு பாடல்கள் வெறுப்புப் பேச்சுக்கு சமம்” என்கிறார்.

“வெறுப்பு பேச்சுகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத வழக்குகளுக்கு, நீதிமன்றங்கள் வழிகாட்டுதல்களை உருவாக்குவதற்கான நேரம் இது” என்று அவர் அல் ஜசீராவிடம் கூறினார்.

ஆனால் துபே தனது பாடல்கள் இந்து சமூகத்தினரிடையே “விழிப்புணர்வு ஏற்படுத்தவே” என்று கூறுகிறார் – மேலும் இது “தனக்கு பெருமை சேர்க்கும் ஒன்று” என்கிறார் துபே.

ஹூடி மற்றும் கிழிந்த ஆடைகளை அணிந்த இளைஞர்கள் இப்போது பெருமையுடன் காவி ஆடை அணிகின்றனர். அவர்கள் இந்து மதத்திற்காக தங்களை தியாகம் செய்ய தயாராக உள்ளனர், இந்துக்களை ஒன்றிணைத்து ராணுவத்தை உருவாக்க விரும்புகிறேன்.” என்று அவர் கூறினார்

2019ல் இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரின் சுயாட்சி அந்தஸ்தை ரத்து செய்ததற்காக, மோடியை துபே பாராட்டினார். “நாங்கள் காஷ்மீரை கிட்டத்தட்ட இழந்தே விட்டிருந்தோம், பிரதமர் நரேந்திர மோடியால் தான் எங்களால் காஷ்மீரை இன்னும் வைத்திருக்க முடிகிறது” என்று அவர் கூறினார்.

“1947ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினையின் போது மதத்தின் அடிப்படையில் பிரிவினை செய்யப்பட்டது. அப்போதே, பாகிஸ்தானை ஒரு மதத்திற்கும், இந்தியாவை மற்றொரு மதத்திற்கும் வழங்கியிருக்க வேண்டும். அப்போது இந்த சண்டையை தவிர்த்திருக்கலாம். ” என்கிறார் துபே.

இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய மக்கள்தொகையாக இந்தியாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கின்றனர். எனினும் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று துபே விரும்புகிறார்.

உபேந்திர ராணாவின் பாடல்கள் கடந்த கால இந்து ஆட்சியாளர்களை புகழ்பவை

இந்திய தலைநகரின் புறநகரில் உள்ள உத்தரபிரதேச நகரமான நொய்டாவைச் சேர்ந்த பாடகரும் பாடலாசிரியருமான உபேந்திர ராணா, யூடியூபில் இல் 370,000 க்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டுள்ளார்.

ராணா உள்ளூர் லேபிளுடன் ஆடியோ கேசட்டுகள் வெளியிடுவதன் மூலம் தனது பக்தி இசை பயணத்தை துவங்கினார். அவர் புகழ் பெறத் தொடங்கியபோது, சுயாதீனமாக பாடல்கள் இயற்ற முடிவு செய்தார், மேலும் அவர் தனது சொந்த சேனலை உருவாக்கினார்.

ராணாவின் “இந்துத்வா பாப்” இசை பயணம் 2017 இல் தொடங்கியது, அவர் வரலாற்றைப் பற்றி பெரும்பாலும் பாடல்களை எழுதத் தொடங்கினார், அதில் அவர் கடந்த கால இந்து ஆட்சியாளர்களைப் புகழ்ந்து மதத்துடன் சம்பந்தம்படுத்தி பாடல் இயற்றுகிறார். கடந்த இந்திய வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மதத்தின் கண் கொண்டு பார்ப்பது தவறானது என்று வரலாற்றாசிரியர்கள் வலியுறுத்தினாலும், அதற்கு மதிப்பு அளிக்கப்படுவதில்லை.

“தர்ம் கே நாம் ஜமீன் கயீ, இஸ்லாமி முல்க் பனாயே” (அவர்களின் மதத்தின் பெயரால், நாங்கள் எங்கள் நிலத்தை இழந்தோம்; அவர்கள் அதை இஸ்லாமிய தேசமாக்கினர்). என்கிறது ராணாவின் பாடல் வரிகளில் ஒன்று.

இந்தப் பாடலின் வீடியோ, நொய்டாவின் அண்டை மாவட்டமான காஜியாபாத்தில் உள்ள தஸ்னா தேவி கோயிலில் படமாக்கப்பட்டது. முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களுக்காக சமீபத்தில் கைது செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய இந்துத்துவா தலைவர் யதி நரசிங்கானந்த் என்பவரால் இந்த கோவிலை நிர்வகிக்கப்படுகிறது. இந்த இசை வீடியோவில் நரசிங்கானந்த் ராணாவுடன் வாள் ஏந்துவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

“பள்ளி பாடத்திட்டத்தில் இந்து புராணங்கள் பயிற்று விக்கப்படுவதில்லை . எனது பாடல்கள் மூலம், குழந்தைகள் இந்து வீரர்களை நினைவுகூர வேண்டும் என்று விரும்புகிறேன்,” என்றார்.

https://twitter.com/Uday_Tweet/status/1531180980865597440

பெரிய அளவிலான இந்த “இந்துத்வா பாப்” வெகுஜன தயாரிப்பு ஒரு புதிய நிகழ்வு என்கிறார் கல்வியாளர் பிரகாஷ்.

முன்பு அரசியல் கட்சிகளால் இது செய்யப்பட்டது. இப்போது அது வெகுஜன கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறி வருகிறது, இது ஆபத்தானது ”என்று அவர் அல் ஜசீராவிடம் கூறினார்.

நன்றி: அல் ஜஸீரா