கொரோனவால் பாதிக்கப்பட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த வாரம் தான் கொரோனா நோயில் இருந்து மீண்டு விட்டதாகவும், நெகட்டிவ் ரிசல்ட் வந்து விட்டதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
குர்கானில் உள்ள மெடந்தா என்ற தனியார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜும் செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவர் மீண்டும் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே அமித் ஷாவின் உடல் நிலை குறித்த உண்மை செய்தியை வெளியிட வேண்டும் என நெட்டிசன்கள் ஒருபுறம் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த 3-4 நாட்களாக உடற்சோர்வு மற்றும் உடல் வலியால் அவர் அவதிப்பட்டு வருகிறார், அதனால் தான் அமித் ஷா மீண்டும் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார், மேலும் அவர் மருத்துவமனையில் இருந்தவாறே தனது வேலையை செய்து வருவதாகவும் எய்ம்ஸ் மருத்துவர் ஆர்த்தி விஜ் தெரிவித்துள்ளார்.
எனினும் மோடி ஆதரவு மீடியாவாக விமர்சிக்கபடும் ஜீ நியூஸ் இது குறித்து செய்தி வெளியிடுகையில் மார்பில் ஏற்பட்டுள்ள நோய் தொற்று காரணமாக அமித் ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று அமித் ஷா ஒரு தனியார் மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் செய்ததாகவும், அவரது மார்பில் இன்னும் நோய் தொற்று இருப்பதாக சோதனை முடிவுகள் வெளியானதாகவும் ஜி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.அமித் ஷா தற்போது எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியாவின் கண்காணிப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.