Muslims West Bengal

ரம்ஸான் அலி – சமஸ்கிருத பேராசிரியரானார்!

பனாரஸ் இந்து பல்கலையில் சமஸ்கிருத துறை துணை பேராசிரியராக அறிவிக்கப்பட்ட பிறகு பெரோஸ் கான் ,மிகுந்த மன உளைச்சல்களுக்கும், மாணவர்களின் கண்டனங்களுக்கும் ஆளானார். மாணவர்களது அட்ராசிடியில் பயந்து அவர், பல்கலைக்கு பணிபுரிய வருவதற்கே பயமாக உள்ளது என்றார்.

இந்து பல்கலையில் அதுவும் சமஸ்கிருத மொழி பயிற்றுவிக்க ஒரு முஸ்லிமை அனுமதிக்கமாட்டோம் என சில இந்து மாணவர்கள் போராட்டத்தில் இறங்கி வகுப்புகளை நடத்தவிடாமல் செய்துகொண்டிருந்த வேளையில் , சத்தமே இல்லாமல் மேற்கு வங்க மாநிலம், பேளூர் ராமகிருஷ்ண மிஷன் பல்கலையில் மீண்டும் சமஸ்கிருத பேராசிரியராக ஒரு முஸ்லிம் நியமிக்கப்பட்டுள்ளது வியப்பிற்குரியது. அவரது பெயர் ரம்ஸான் அலி.

அலிபுர்தார் நகரின் ஃபலகட்டா அரசினர் கல்லூரியில் கடந்த 2010 முதல் சமஸ்கிருத பேராசிரியராக இருந்த அவருக்கு கடந்த நவம்பர் 22ம் தேதி ராமகிருஷ்ண மிஷன் பல்கலையில் பணியாற்ற அழைப்புவிடுக்கப்பட்டது. இதுபற்றி ரம்ஸான் அலி கூறுகையில், இதற்கு முன்பு தாம் பணியெடுத்த இடத்திலும் சரி, இங்கும் சரி எனக்கு மதரீதியிலான தொந்தரவுகள் ஏதும் கொடுக்கப்படவில்லை.

ரம்ஸான் அலி

இந்த மாபெரும் நிறுவனத்தின் முதல்வர் சுவாமி சாஸ்த்ரானந்தாஜி மகாராஜ் அவர்களது அன்பிலும் அரவணைப்பிலும் இங்குள்ளவர்களுக்கு மதம், இனம்,மொழி மற்றும் மனித சமூக நல்லிணக்கத்தை குழைக்கும் விதமான நெருடல்களும் அனுமதிப்படுவதில்லை. இங்கே ஸ்வாமி விவேகானந்தர் போதித்த சர்வதர்ம சமன்வயம் எனும் தூய மனிதாபிமானக்கொள்கையை அனைவரும் கடைபிடிக்கின்றோம். மனிதர்களில் இருக்கும் ஏற்றத்தாழ்வினை போற்றியோ அவரது சாதி,மத அடையாளங்களை குறித்தோ இங்கே யாரும் பேசவே முடியாது..அது இந்து மனு தர்மத்திற்கு எதிரானது என்கிறார் இப்பல்கலையின் துணை செயலாளரான திவ்யானந்தஜி மகராஜ்.

பேளூர் ராமகிருஷ்ண மிஷன் சாரதபீடத்தில் சர்வமத பிரார்த்தனைகள் நடைபெறுவதோடு இங்கே யாவரும் சமம் என்பது மட்டுமே கற்பிக்கப்படுகிறது. கல்வி ஞானத்தால் மட்டுமே ஒருவர் உயர்ந்தவராகிவிட முடியாது அக்கல்வியை கொண்டு ஒருவர் பிற உயிர்களுக்கு நாடும் நன்மையே மேன்மையாக போற்றப்படும் என்கிறார் ஸ்வாமி. சாஸ்த்ரானந்தாஜி மகராஜ்.

சமஸ்கிருதம் பழமையான மொழி, அதனை கற்கவே பலரும் விரும்புகின்றனர். சமஸ்கிருத மொழியின் மீது பற்றால் தான் நான் இத்துறையை எடுத்து படிக்க முடிந்தது.. படித்தால் மட்டும் போதாது படித்ததை அடுத்தவர் மத்தியில் பரப்ப வேண்டும் என்கிற ஸ்வாமி விவேகானந்தரின் உயரிய கொள்கையை கடைபிடிக்கும் இப்பல்கலையில் எனக்கு பணி செய்ய வாய்ப்பு கிடைத்து பெருமையே என்கிறார் பேரா.ரம்ஸான் அலி.

எது எங்கே தடுக்கப்படுகிறதோ அது அங்கேயே நிகழ்த்திக்காட்டப்படும் என்பது விதி.

ஆக்கம் : நஸ்ரத்