சமீபத்தில் கோவையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய காரப்பன் சில்க்ஸ் நிறுவுனர் காரப்பன் இந்துக் கடவுள்கள் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சைக்குள்ளானது. இதன் பின்னர் இந்துக்களை புண்படுத்திய தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து கொண்டார் காரப்பன்.
எனினும் இந்துத்துவ அமைப்புகள் காரப்பனுக்கு எதிராக கண்டன போஸ்டர்களை ஒட்டி வந்தனர். இது தொடர்பாக பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, “சிறுமுகையில் உள்ள காரப்பன் சில்க்ஸ் கடையில் இனி எந்த இந்து உணர்வாளரும் பொருட்கள் வாங்க மாட்டோம் என தீர்மானிப்போம். அவரது மன்னிப்பு போலியானது. இவரது ஸ்தாபனம் மட்டுமல்ல இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் இயக்கத்தைச் சேர்ந்த அனைவரது வர்த்தக ஸ்தாபனங்களையும் புறக்கணிக்க வேண்டும்” என தனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் (அட்மின் மூலமோ அல்லது தானாகவோ) பதிவிட்டு இந்து மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
எனினும் எச்.ராஜா எதிர்பார்த்ததற்கு மாற்றமாக தமிழக மக்கள் ட்விட்டரில் #WeSupportKarappanSilks என்ற ஹாஷ்டாக் இந்திய அளவில் ட்ரெண்டிங் செய்தனர். மேலும் இந்துத்துவ அமைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வெளியூர்களில் இருந்தும் கூட காரப்பன் சில்க்ஸ் கடைக்கு சென்று துணிவாங்க பயணிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். பலர் காரப்பன் சில்க்ஸிற்கு குடும்பத்தினர் நண்பர்கள் என புடைசூழ சென்று துணி வாங்கிவிட்டு போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த காரப்பன், “யாரென அறிமுகம் தெரியாதவர்கள் கூட எனக்கு ஆதரவு தெரிவிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆயிரங்களில் நடந்துகொண்டிருந்த வியாபாரம், இப்போது லட்சங்களில் நடந்துகொண்டிருக்கிறது.
அது மட்டுமின்றி சிறுமுகை பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளிலுமே வியாபாரம் அதிகரித்துள்ளது. பட்டுப்புடவை தயாரிப்பில் காஞ்சிபுரம், ஆரணிக்கு அடுத்து சிறுமுகை மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த விவகாரத்துக்குப் பிறகு சிறுமுகை முதல் இடத்துக்கு சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.” என கூறியுள்ளார்.