Babri Masjid Indian Judiciary

பாபர் பள்ளி:’நீதி வழக்காடிக்கு சாதகமாக இருந்தாலும், சட்டம் முரணாக இருக்கும்’- வழக்கறிஞர் பிரபு ராஜதுரை!

சில சமயங்களில் நீதி ஒரு வழக்காடிக்கு சாதகமாக இருந்தாலும், சட்டம் அதற்கு முரணாக இருக்கும்.

நீதிபதிகளும், ‘உங்களுக்காக நாங்கள் அனுதாபப்படுகிறோம். சாரி’ என்று வழக்கை முடித்து விடுவார்கள். கேட்டால் ‘இது கோர்ட் ஆஃப் லா நாட் கோர்ட் ஆஃப் ஜஸ்டிஸ்’ என்பார்கள்.

நீதிபதி பகவதி, ‘பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமாக சட்டம் வளைக்கப்பட வேண்டும்’ என்று வெளிப்படையாக சொல்லிச் செய்ததை பல நீதிபதிகள் சொல்லாமல் செய்வார்கள்.

உச்ச நீதிமன்றத்துக்கு அந்தப் பிரச்னையில்லை.

முழுமையான நீதி என்ற பெயரில், சட்டத்தைப் பற்றிக் கவலைப்படாமல் நீதி வழங்குவதற்கு அரசியலமைப்புச் சட்ட ஆர்ட்டிகிள் 142 உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.

அனிதா வழக்கில், இந்தப் பிரிவைப் பயன்படுத்தியிருக்கக் கூடாதா என உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஆதங்கப்பட்டிருந்தேன்.

ஆனால் அயோத்யா வழக்கில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

‘ராம ஜென்மபூமி’ எனப்படும் இடம் ஶ்ரீராமர் பிறந்த இடம் என்று நம்பப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்ட நிலம் என்பதால், அந்த நிலத்தையே ‘சட்டரீதியிலான நபர்’ (juristic person) என்று கருதப்பட வேண்டும் என்பது ஒரு வாதம்.

ராம ஜென்மபூமி ஒரு நபர் என்று கருதப்பட்டால் மற்றவர்கள் அந்த இடத்தின் (நபர்) மீது உரிமை கொண்டாட முடியாது. எவ்வளவு வருடங்கள் கழிந்தாலும் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்று கூறப்பட்ட இந்த வாதத்தை. உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

இந்து கடவுள் (Idol) எப்போதும் மைனர் (perpetual minor). எனவே மைனராக இருக்கும் ஒருவர் காலவரையறை சட்டம் ( Limitation Act) பற்றிக் கவலைப்படாமல் எவ்வளவு காலம் கழிந்தும் இழந்த நிலத்தை மீட்க வழக்கு தாக்கல் செய்யலாம் என்பது இரண்டாவது வாதம்.

அதாவது மைனர் அவரது கார்டியன் மூலமாக வழக்கு நடத்துவது போல உயிருடனிருக்கும் நபர் மூலமாகத்தான் கடவுள் வழக்கு நடத்த முடியும். கடவுளை மைனர் என்று கூறுவது இவ்வாறு வழக்கு நடத்துவதற்கு மட்டும்தானேயொழிய காலவரையறை சட்டத்திலிருந்து விலக்கு கோருவதற்கு அல்ல. அந்த மைனர் வேறு இந்த மைனர் வேறு என்று இந்த வாதத்தையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

இரண்டு வாதங்களும் நிராகரிக்கப்பட்ட நிலையில் அது ராமர் பிறந்து அவருக்காகவே கோவிலும் கட்டப்பட்ட இடமாகவே நிரூபிக்கப்பட்டாலும் இந்துக்கள் அந்த இடத்தை திரும்பப் பெற சட்டத்தில் இடம் இல்லை.

இந்துக்களுக்கு எதிராக மொகலாயர்கள் செயல்பட்டதை வைத்து எழும் கோரிக்கைகளை நீதிமன்றங்களில் ஏற்றுக் கொள்ள இயலாது. பழங்கால ஆட்சியாளர்களின் செயல்பாட்டிற்கு எதிரான கோரிக்கைளுக்கு சட்டத்தில் பதில் இல்லை என்று தெளிவாகவே தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், மசூதி இருக்குமிடத்தின் வெளிப்பகுதியை பல வருடங்களாக இந்துக்கள் தங்கள் வசம் வைத்திருந்து பூசை நடத்தி வருவதால் அந்தப் பகுதியைப் பொறுத்து அவர்களுக்கு சொந்தமானது, என்று விளம்புகை செய்யப்பட்டுள்ளது தவறில்லை.

இந்துக்கள் வசமான வெளிப்பகுதி 1857ம் வருடம் மசூதியிருக்கும் பிற பகுதிகளிலிருந்து இரும்புகிராதி-செங்கல் சுவரால் தனியே பிரிக்கப்பட்டது.

மசூதியிருக்குமிடம்?

பாபர் மசூதி கட்டிய காலம் முதல் 1857 வரை மசூதி இஸ்லாமியர் அனுபவத்திலிருந்து அங்கு தொழுகை நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களை இஸ்லாமிய அமைப்புகள் சமர்ப்பிக்கவில்லை. எனவே மசூதியிருந்த பகுதி இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது என்பதும் நிரூபிக்கப்படவில்லை.

கண்களை ஒருமுறை கசக்கிக் கொண்டேன். தீர்ப்பில் இந்தப் பகுதியிருக்கும் பக்கம் 899ஐ படிக்கையில் இரவு மணி 330. படித்த வரிகள் கனவு இல்லை.

மசூதியிருந்த இடம் இரண்டு பேருக்கும் சொந்தமில்லை என்பதால் ஆர்ட்டிகிள் 142ஐ பயன்படுத்தி அந்த இடத்தை ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் தாரை வார்த்துள்ளது.

அந்த இடம் இந்துக்களுக்கு என்பதால் அதை ஈடு செய்ய இஸ்லாமியர்களுக்கு அயோத்யாவின் வேறு பக்கம் ஐந்து ஏக்கர் நிலம்.

1949ம் வருடம் சிலைகள் சட்டவிரோதமாக நிறுவி மசூதி கறைபடுத்தப்பட்டது. இஸ்லாமியர்களை மசூதியிலிருந்து விரட்டி அவர்களின் வழிபாடு உரிமையை பறிப்பதற்காகவே சட்டபூர்வ அதிகாரிகளின் துணை கொண்டு நடத்தப்பட்ட செயல். பின்னர் வழக்கு நிலுவையிலிருக்கையில் திட்டமிட்ட செயலால் மசூதி இடிக்கப்பட்டது

இதுவும் இதற்கு கீழிருப்பதும் மசூதி இருக்கும் பகுதி இஸ்லாமியர்களுக்கு சொந்தமானதல்ல என்று கூறப்பட்ட அதே தீர்ப்பில் இருபத்திரண்டு பக்கங்கள் கடந்து இருக்கிறது.

The Muslims have been wrongly deprived of a mosque which had been constructed well over 450 years ago

மசூதி இடிக்கப்பட்ட அந்தத் நேரம் எங்கு என்ன செய்து கொண்டிருந்தேன் என்று இன்றும் நினைவிருக்கிறது. தீர்ப்பு வெளிவந்த தருணமும் இனி நினைவிலிருக்கும்.

-சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பிரபு ராஜதுரை