மனித உரிமை ஆர்வலர் சுதா பரத்வாஜ் உலக புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கழைக்கழக கண்காட்சியில் “சட்டம் மற்றும் கொள்கை துறைகளில் உலகெங்கிலும் உள்ள பெண்களின் வியக்கத்தக்க பங்களிப்புகளை” வெளிப்படுத்திய உலகெங்கிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 21 பெண்கள் பட்டியலில் இடம் பெற்றவர்.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் வழக்கறிஞரும் மனித உரிமை ஆர்வலருமான சுதா பரத்வாஜ் கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி பாஜக ஆளும் அரசாங்கத்தின் மீது காங்கிரஸ் மூத்த தலைவர் சஷி தரூர் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் கடுமையாக தாக்கி பேசினார். இந்த ஆண்டு மார்ச் மாதம் உலக புகழ் பெற்ற ஹார்வர்ட் சட்ட கல்லூரியால் சுதா பரத்வாஜ் அவர்களுக்கு மதிப்புமிக்க கவுரவ விருது வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சுதா பரத்வாஜை விருதின் மூலம் கண்ணியப்படுத்தி கொண்டிருக்க, நம் நாட்டிலோ அவரை கைது செய்து சிறையில் அடைப்பதில் முனைப்பு காட்டியுள்ளது பாஜக அரசு.
விமான பயணத்தில் இருக்கும்போது சுதா பரத்வாஜ் அவசரஅவசரமாக கைது செய்து பின்னர் டெல்லி ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த ஆர்வம் என்னவோ வங்கிகளில் பல்லாயிரக்கணக்கான கோடிகளை கடனாக சுருட்டி கொண்டு ஓட்டமெடுத்த மோசடி பேர்வழிகளை பிடித்து சிறையிலடைப்பதில் காணக் கிடைப்பதில்லை.
சுதா பரத்வாஜ் கைது :
கடந்த 2017 டிசம்பரில் நடந்த “எல்கர் பரிஷத்” கூட்டத்தைத் தொடர்ந்து நிகழ்ந்த பீமா-கோரேகான் வன்முறை தொடர்பாக பரத்வாஜ் புனே போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அசாமில் உள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (N R C ) அமலாக்க நடைமுறையில் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் அதன் காரணமாக மக்கள் தாங்க வேண்டிய கஷ்டங்களை எடுத்துக்காட்டி தரூர் அரசாங்கத்தை கடுமையாக தாக்கி பேசினார்.
என்.ஆர்.சி முறைகேடுகள்:
“அசாமில் இது வரை 57 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர், காரணம் தேசிய குடிமக்களின் பதிவேட்டில் (என்ஆர்சி) அவர்களின் பெயர்கள் இடம்பெறாமல் போனது தான். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள் ”என்று தரூர் கூறினார்.
அசாமில் உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் என்.ஆர்.சி புதுப்பிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்ட தரவை இறுதி வெளியிடுவதற்கான காலக்கெடுவாக ஜூலை 31 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பல இந்திய மக்களின் பெயர்கள் விடுபட்டிருக்க கூடும் என்பதாலும் , பல போலி பெயர்கள் என்.ஆர்.சி பட்டியலில் நுழைந்து விட்டதாலும் , பதிவை இறுதி செய்வதில் அதிக கால அவகாசம் கோரி மத்திய அரசாங்கம் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.
“நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த வார தொடக்கத்தில் மாநிலங்களவையில், நாட்டின் மண்ணின் ஒவ்வொரு அங்குலத்திலும் வாழும் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோரை அடையாளம் கண்டு நாடுகடத்துவதற்கான தனது பணியில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது” என்று கூறியிருந்தார்.