சமூக ஊடகங்களில் ஏறக்குறைய 86 சதவீத முஸ்லிம்களுக்கு எதிரான பதிவுகள், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தியாவிலிருந்து உள்ளது என்று ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட இஸ்லாமிய கவுன்சில் ஆஃப் விக்டோரியாவின் (ICV) ஆய்வு அறிக்கை கண்டறிந்துள்ளது. ட்விட்டரில் கடந்த 28 ஆகஸ்ட் 2019 முதல் 27 ஆகஸ்ட் 2021 க்கு இடையில் (மூன்று ஆண்டுகளில்) செய்யப்பட்ட டிவீட்டுகளில் குறைந்தது 3,759,180 இஸ்லாமிய வெறுப்பு இடுகைகள் இருப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு “தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க” கடந்த 2021 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச சமூகத்தை கேட்டுக்கொண்டது. மேலும் “வன்முறையைத் தூண்டும் மத வெறுப்பின் அனைத்துவித ஆதரவையும் தடைசெய்திட வேண்டும்” எனவும், முஸ்லிம் வெறுப்பு “தொற்றுநோய் விகிதத்தை எட்டியுள்ளது” என்றும் எச்சரித்தது.
எனினும் இந்த அறிக்கையும் எச்சரிக்கையும் எந்த வித பலனையும் அளிக்கவில்லை.
உலக அளவில் இந்தியா முதலிடம்:
ICV ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி , 871,379 டிவீட்டுகளுடன் இந்தியா அதிகமான இஸ்லாமிய வெறுப்பு ட்வீட்களை உருவாக்கியது எனவும் அதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா 289,248 மற்றும் இங்கிலாந்து 196,376 டிவீட்டுகள் இஸ்லாமிய வெறுப்பை வெளிப்படுத்தி இருந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் 55 சதவீதம் முஸ்லிம்களுக்கு எதிரான உள்ளடக்கம் இந்தியாவில் இருந்து வருகிறது என அறிக்கை கண்டறிந்துள்ளது.
முக்கிய உள்ளடக்கம்:
இஸ்லாத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் தொடர்பு இருப்பதை போன்றும், முஸ்லிம்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்களாக சித்தரிப்பதும், மேற்குலகில் வெள்ளையர்களையும், இந்தியாவில் இந்துக்களையும் முஸ்லீம்கள் இடம்பெயரச் செய்கிறார்கள் என்று பொய்யான கூற்றுகளும், முஸ்லிம்கள் உண்ணும் ஹலால் உணவை மனிதாபிமானமற்ற நடைமுறை என்று முத்திரை குத்துதல் ஆகியவையே ட்விட்டரில் இஸ்லாமிய வெறுப்பு உள்ளடக்கத்தில் உள்ள நான்கு முக்கிய கருப்பொருள்கள் என இந்த ஆய்வு அடையாளம் கண்டுள்ளது.
“முஸ்லிம்களுக்கு எதிரான உள்ளடக்கத்தை அகற்றுவதில் ட்விட்டர் கடுமையாகத் தோல்வியடைந்து வருகிறது என்பதை அறியமுடிகிறது” என்று அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.