உ.பி: கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி, பதோஹியின் கத்ரா பஜாரின் ரசூலியத் கான் பகுதியில் பாஜக தலைவர் அடங்கிய 21 பேர் கொண்ட கும்பலால் முஸ்தகீம் (55) படுகொலை செய்யப்பட்டார்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு பலவந்தமாக உடல் அடக்கமும் செய்யப்பட்டதாக அவரது மகன் தெரிவித்துள்ளார். எனினும் இது ஊடகங்களில் பெரிய அளவில் செய்தியாக வெளி வரவில்லை.
“எங்களிடம் 2, 3 ஆடுகள் உள்ளன. அருகில் உள்ள பாஜக தலைவர் சந்தீப்பின் வீட்டில் புல்லை மேய்ந்து விட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர் மாலை 6 மணி அளவில் எங்கள் வீட்டிற்கு வந்து எனது அம்மாவை மிரட்டி உள்ளனர்.
வீட்டில் ஆண்கள் யாரும் இல்லாததால் போய் பிறகு வரவும் எனக் கூறிய எனது தங்கையையும் முகத்தில் அறைந்துள்ளனர்” என்கிறார் கொலை செய்யப்பட்ட முஸ்தகிமின் மகன் அஷ்பாக். இவர் குஜராத்தில் பணி புரிந்து வருபவர்.
வீடு புகுந்து தாக்குதல்:
பிறகு பத்து மணி அளவில் இரவு உணவு சாப்பிட்டு விட்டு உறங்கிக் கொண்டிருந்தோம் அப்போது திடீரென பாஜக தலைவர் ஜெஸ்வால், சந்தீப், அவரது மகன் அசோக் உள்ளிட்டோர், கதவை தட்டி பலவந்தமாக உள்ளே நுழைந்து என் தந்தையின் காலரைப் பிடித்து, அவரை வெளியே இழுத்து, அவரை அடிக்கத் தொடங்கினர்.
பெண்கள் மீதும் தாக்குதல்:
“தடுக்கச் சென்ற எனது தாய், சகோதரிகள் மற்றும் சகோதரர்களையும் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
70 கிலோ வரை எடையுள்ளவர்கள், எனது தந்தையின் நெஞ்சில் குத்துவதும், ஏறி மிதிப்பதும் என கொடூரமாக தாக்கினர். இந்த காட்சிகள் எல்லாம் அவர்களது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள மூன்று முதல் நான்கு கேமராக்களில் பதிவாகியுள்ளது. எனினும் அதை அவர்கள் போலீசாரிடம் தர மறுக்கின்றனர்.” என்கிறார் அஷ்பாக்.
“தந்தை தாக்கப்பட்ட பிறகு, அவர் மயக்கமடைந்தார் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் அவர் சுயநினைவு திரும்பவில்லை. நாங்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம், ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்,” என்கிறார் அவரது மற்றொரு மகனான சல்மான்.
பாதுகாப்பற்ற நிலையில் ஒற்றை முஸ்லிம் வீடு:
இதற்கு முன்பு இது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளதா என்று கேட்டதற்கு, ” எங்கள் வீடு இந்த பகுதியில் உள்ள ஒரே முஸ்லிம் வீடு என்பதால், இந்த வீட்டை விற்குமாறு பலமுறை எங்களிடம் வற்புறுத்தப்பட்டது. இது ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்தது. மற்றபடி யாருடனும் சண்டையோ சச்சரவுகளோ இல்லை.” என்றார் அஷ்ஃபாக்.
அஷ்ஃபாக் மேலும் கூறுகையில், “ஐபிசி பிரிவு 302 (கொலைக்கான தண்டனை) க்கு பதிலாக 304 ஆம் பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக கூறுகிறார்.
பலவந்தமாக உடல் அடக்கம்:
பிரேத பரிசோதனைக்குப் பிறகு, நிர்வாகம் தனது தந்தையை அடக்கம் செய்ய வற்புறுத்தியதாகவும் அஷ்ஃபாக் குற்றம் சாட்டினார். அடக்கம் செய்வதை நிறுத்துமாறு போலிசாரிடம் எத்தனை கெஞ்சி கேட்டும் கேட்கவில்லை. முகத்தைக் கூட பார்க்க விடாமல் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது எனக் கூறி அவசர அவசரமாக அடக்கம் செய்து விட்டனர் எனவும் அவர் வேதனையுடன் கூறுகிறார்.
போலீசார் பேட்டி:
ஏஎஸ்பி பார்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க கூடுதல் படைகள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நன்றி : தி குவின்ட்.