ஒரு அரசு சாரா நிறுவனத்தின் உதவி எண் மூலம் பெறப்பட்ட அழைப்புகளின் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆண்டு ஜூலை வரை கிறிஸ்தவர்கள் மீது 300-க்கும் மேற்பட்ட தாக்குதல்தல்கள் நடைபெற்றுள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல். இந்த மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ‘பொய்யானவை’ ‘உள்நோக்கம் கொண்டவை’ என்றும் உச்ச நீதிமன்றத்தில் மோடி அரசு தெரிவித்துள்ளது.
உபியில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்:
கடந்த ஆகஸ்ட் 28 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள ஹர்சந்த்பூர் என்ற கிராமத்தில் மூன்று நபர்கள் (ராம்வதி, தஷ்ரத் மற்றும் ரகுவீர்) கிராம மக்களை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்ய முயன்றதாகக் கூறி கைது செய்யப்பட்டனர். இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பிரிவு 3 மற்றும் 5 (1) பிரிவு 295A கீழ் போலீசார் அவர்கள் மூவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்துத்துவாவினர் தாக்குதல்:
“ நாங்கள் மதமாற்றம் செய்வதாக கூறி எங்கள் தேவாலயத்தில் அவர்கள் திரண்டனர். எங்கள் மீது போலீசில் புகார் அளித்தனர். அவர்கள் எங்களை கொடூரமாக தாக்கினர்” என்று மூவரும் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் மூவரும் சிறு விவசாயிகள் மற்றும் விவசாயக்கூலிகள் ஆவர்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 31 அன்று மூவரும் ஜாமீன் பெற்றனர். அவர்கள் கட்டாய மதமாற்ற முயற்சி செய்தார்களா என்பது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக அவர்களின் வழக்கறிஞர் சிவ குமார் கூறுகிறார்.
“கடவுள் தான் என்னை காப்பாற்றினார்.. நாங்கள் தாக்கப்பட்டோம். எங்களைக் காவலில் வைக்க அழைத்து செல்லப்பட்டபோது இந்துத்துவாவினரால் என் கை முறுக்கப்பட்டது. தஷ்ரத் மற்றும் ரகுவீர் ஆகியோரும் கொடூரமாக தாக்குதலுக்குள்ளானார்கள். நாங்கள் மக்களை மதமாற்றுகிறோம் என்று கூறி எங்களது பைபிளையும் பறித்து சென்று விட்டனர்.” என்று ராம்வதி கூறினார்.
பஞ்சாபில் தாக்குதல்:
ஆகஸ்ட் 31 அன்று, பஞ்சாபின் டார்ன் தரனில் முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட கும்பல் தேவாலயத்திற்குள் நுழைந்து, பீட்டா சிலையை சேதப்படுத்தியது; தேவாலயத்திற்கு சொந்தமான காரை தீ வைத்து கொளுத்தியது. இன்ஃபண்ட் ஜீசஸ் கத்தோலிக்க தேவாலயத்தின் பாதிரியாரான தாமஸ் பூச்சலில், பாதுகாப்புப் படையினரை துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறினார்.
United Christian Forum (ஐக்கிய கிறிஸ்தவ மன்றம்) கருத்துப்படி, 2022 முதல் ஏழு மாதங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 302 தாக்குதல்கள் நடந்துள்ளன. இதற்கான தரவுகள் உதவிமைய எண்ணின் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளது.
உதவிக்கு அழைக்க :
ஐக்கிய கிறிஸ்தவ மன்றம், ஒரு அரசு சாரா அமைப்பு. அதன் உதவிமையம் 1-800-208-4545 ஜனவரி 19, 2015 அன்று தொடங்கப்பட்டது. சட்டத்தைப் பற்றி அறியாதவர்கள் உதவி மற்றும் சட்டப்பூர்வ தீர்வுக்காக அணுகலாம். இது டெல்லியை தளமாகக் கொண்ட அமைப்பு. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை மாநிலங்கள் முழுவதும் உள்ள வழக்குகளை ஆவணப்படித்து, அதன் தரவுகளை தி வயர் செய்தி ஊடகத்திற்கு அனுப்பியுள்ளது. UCF இன் தரவு, உத்தரப்பிரதேச மாநிலத்தில் 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. சத்தீஸ்கர் மாநிலத்தில் 60 வழக்குகள் பதிவாகியுள்ளன.
உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் :
பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சாடோ, நேஷனல் சாலிடாரிட்டி ஃபோரம் மற்றும் எவாஞ்சலிக்கல் பெல்லோஷிப் ஆஃப் இந்தியா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
கிறிஸ்துவ சமூகத்திற்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளைப் பேசிய இந்துத்துவக் குழுக்களுக்கு எதிராகவும், தேவாலையங்கள், பிராத்தனைக் கூடங்கள், வழிபாட்டு தலங்களை சேதப்படுத்திய – பிராத்தனைக்கு இடையூறு செய்ய குழுக்களுக்கு எதிராகவும் உடனடியான நடவடிக்கைகளை எடுக்க அரசு தவறிவிட்டது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஜனவரி முதல் 2021 டிசம்பர் வரை கிறிஸ்தவ சமூகத்திற்கு எதிராக 505 தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும், 2022-ல் இத்தாக்குதல் அதிகரித்துள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
“தேவாலயங்கள் இடிப்பு, கட்டாய மதமாற்றம், உடல் ரீதியான வன்முறை, கைது, சிலை உடைப்பு, உடைமைகள் அழித்தல், பிரார்த்தனைக் கூடங்களை இழிவுபடுத்துதல், பைபிள்களை எரித்தல் மற்றும் கிறிஸ்தவ விரோத துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலான புகார்கள் இந்த தாக்குதல்களில் அடங்கும்.”
உச்சநீதிமன்றம் உத்தரவு:
கடந்த வாரம், நீதிபதி சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற பெஞ்ச், கிறிஸ்தவ சமூகம் மற்றும் நிறுவனங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக மனுதாரர்கள் கூறியுள்ள எஃப்.ஐ.ஆர் பதிவு, விசாரணையின் நிலை, கைதுகள் மற்றும் குற்றப்பத்திரிகைகள் பற்றிய தகவல்களை எட்டு மாநிலங்களிடமிருந்து பெறுமாறு உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டது.
மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பீகார், ஹரியானா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய எட்டு மாநிலங்களில் இருந்து அறிக்கைகளை பெறுமாறு உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மூத்த வழக்கறிஞர் கொலின் கோன்சால்வ்ஸ் சார்பில் ஆஜரான மனுதாரர்களும், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்த விவரங்களை நான்கு வாரங்களில் இந்திய சொலிசிட்டர் ஜெனரல் அலுவலகத்துடன் பகிர்ந்து கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மோடி அரசின் பதில்:
இந்த மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ‘பொய்யானவை’ ‘உள்நோக்கம் கொண்டவை’ என்றும் உச்ச நீதிமன்றத்தில் மோடி அரசு தெரிவித்துள்ளது.
“இதுபோன்ற ஏமாற்று மனுக்களை தாக்கல் செய்வதிலும், நாடு முழுவதும் அமைதியின்மையை உருவாக்குவதிலும், நமது நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட வெளியில் இருந்து உதவி பெறுவதிலும் சில மறைமுகமான செயல்திட்டங்கள் இருப்பதாகத் தெரிகிறது,” என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.
முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் :
டெல்லி சிறுபான்மையினர் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினரும், UCF இன் தேசிய ஒருங்கிணைப்பாளருமான ஏ.சி.மைக்கேல்,
“இந்தியாவில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என இரு சிறுபான்மையினர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். தாக்குதல்களைப் பற்றி நாம் பேசும்போது, வெறும் உடல்ரீதியான தாக்குதல்களை மட்டும் குறிக்கவில்லை. மதமாற்றத் தடைச் சட்டங்கள் என்று சொல்லப்படுவதை நாம் மனதில் கொள்ள வேண்டும். மதச் சுதந்திரத்தைப் பற்றி நாம் பேசும்போது, இந்தச் சட்டங்கள் மக்களுக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் மதத்தைப் பின்பற்றுவதற்கு அதிகாரம் கொடுப்பதில்லை” என கூறினார்.