தணிக்கை அறிக்கையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 9,000 பள்ளி செல்லாத சிறுமிகள் இருப்பதாகவும், ஆனால் 36 லட்சம் என ஜோடிக்கப்பட்டதும் அம்பலம் ஆகியுள்ளது.
மத்தியப் பிரதேச அரசின் ரேஷன் திட்டத்தில் பல முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன, இதில் ரூ. 100 கோடிக்கும் அதிகமான ஊழல் நடந்ததாக செய்தி வெளியாகி உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் இலவச ரேஷன் வினியோகத் திட்டமான, டேக் ஹோம் ரேஷன் (THR) திட்டத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது என்பதை கணக்காளர் ஜெனரலின் அறிக்கை அம்பலப்படுதி உள்ளது.
இந்த திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 45.98 லட்சம் பயனாளிகளில் சுமார் 12 லட்சம் (24%) பேரிடம் விசாரணை நடத்தியதன் அடிப்படையில் கணக்காளர் ஜெனரல் 36 பக்க அறிக்கையைத் தயாரித்துள்ளார். இந்த அறிக்கை ரேஷன் விநியோகத்தின் பல்வேறு கட்டங்களில் ஊழல் நடந்துள்ளது என்பதை அம்பலப்படுத்துகிறது.
9,000 பயனாளிகளின் எண்ணிக்கை 36 லட்சம் என குறிக்கப்பட்டுள்ளது:
டேக் ஹோம் ரேஷன் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மொத்த பெண்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை, ஆறு மாதங்கள் முதல் மூன்று வயது வரை உள்ள 34.69 லட்சம் குழந்தைகள்; கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் 14.25 லட்சம் பேர்; 11 முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லாத பெண் குழந்தைகள் 0.64 லட்சம் பேர்.
2018-19 ஆம் ஆண்டில் பள்ளி செல்லாத பெண்களின் எண்ணிக்கை 9,000 ஆக இருக்கும் என்று பள்ளிக் கல்வித் துறை கண்டறிந்திருந்தாலும், WCD துறையானது அடிப்படைக் கணக்கெடுப்பு நடத்தாமல், அதே எண்ணிக்கையை 36.08 லட்சமாகக் ஜோடிக்கப்பட்டுள்ளது
தணிக்கையில் மாநிலத்தில் உள்ள 49 அங்கன்வாடி மையங்களில், பள்ளி செல்லாத மூன்று சிறுமிகள் மட்டுமே பயனாளிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இருப்பினும், WCD அதே 49 மையங்களுக்கு 63,748 சிறுமிகளை பட்டியலிட்டுள்ளது. ஆனால், 2018-21 ஆண்டுகளில் 29,104 பேருக்கு மட்டுமே உதவியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் இயங்கும் ஆறு உற்பத்தி ஆலைகள் 1,125.64 மெட்ரிக் டன் ரேஷன்களை கொண்டு சென்றதாக கூறியது, (அதன் மதிப்பு ரூ.6.94 கோடி ஆகும்). இருப்பினும், தணிக்கையில், ரேஷன் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் லாரிகளின் பதிவுகளை போக்குவரத்து துறை பதிவேடுகளுடன் குறுக்கு சோதனை செய்தபோது, பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் கார்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பது தெரியவந்தது.
மாநிலத்தின் பாடி, தார், மாண்ட்லா, ரேவா, சாகர் மற்றும் ஷிவ்புரி ஆகிய பகுதிகளில் உள்ள ஆறு உற்பத்தி ஆலைகள், மதிப்பிடப்பட்ட மற்றும் உற்பத்தி செய்ய அனுமதிக்கப்பட்டதை விட கணிசமாக உற்பத்தி அளவைப் பதிவு செய்திருப்பது கண்டறியப்பட்டது. இந்த ஆறு ஆலைகளும் 821 மெட்ரிக் டன் ரேஷன் வினியோகம் செய்துள்ளது. அதன் மதிப்பு ரூ.4.95 கோடி என்று தெரிவித்தன. மேலும், உண்மையில் ரேஷன் உற்பத்தியை தேவையான மூலப்பொருட்களின் அளவு மற்றும் நுகரப்படும் மின்சாரத்தின் அளவு ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்தபோது, 58 கோடி ரூபாய் முரண்பாடு தெரியவந்தது.
மேலும், எட்டு மாவட்டங்களில் ஆய்வு செய்யப்பட்டதில், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் மொத்தம் 97,000 மெட்ரிக் டன் ரேஷன் பெற்றுள்ளது கண்டறியப்பட்டது, ஆனால் அங்கன்வாடிகளுக்கு 86,000 மெட்ரிக் டன் மட்டுமே வினியோகித்துள்ளனர். கிடங்குகளிலும் காணாமல் போன 11,000 மெட்ரிக் டன் ரேஷன் பொருட்களின் மதிப்பு ரூ.62.72 கோடி.
2020 ஆம் ஆண்டில், மாநில WCD அமைச்சர் இமார்தி தேவி இடைத்தேர்தலில் தோல்வியடைந்ததால் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்தத் துறை முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் மேற்பார்வையின் கீழ் வந்தது. THR திட்டத்தை WCD துறையின் கூடுதல் தலைமைச் செயலர் அசோக் ஷா மேற்பார்வையிடுகிறார், அவருக்கு மாநில அளவிலான இயக்குநர், 10 இணை இயக்குநர்கள், 52 மாவட்ட திட்ட அலுவலர்கள் மற்றும் 453 CDPOக்கள் உதவுகிறார்கள்.
உற்பத்தி ஆலைகள் மற்றும் அங்கன்வாடிகள் ரேஷனை தர ஆய்வுக்காக ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும், இருப்பினும், இது ஒருபோதும் செய்யப்படவில்லை, எனவே, பயனாளிகளுக்கு வழங்கப்படும் ரேஷன்களின் தரத்தை கண்டறிய வழிஇல்லை. மேலும், ஆய்வு செய்யப்பட்ட எட்டு மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள், 2018-2021 முதல், உள் தரக் கட்டுப்பாட்டுக்காக அங்கன்வாடிகளை ஆய்வு செய்யவில்லை.
“எனவே, இந்த பிரச்சனைகளை விசாரித்து, அனைத்து மட்டங்களிலும் உள்ள அதிகாரிகளின் பொறுப்பை -CDPOக்கள், DPOக்கள், ஆலை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்த அதிகாரிகள், முதலியன மற்றும் அனைத்து அதிகாரிகளின் பொறுப்பை- சரிசெய்ய GoMP-க்கு (மத்தியப் பிரதேச அரசு) பரிந்துரைக்கிறது” என்று அறிக்கை கூறுகிறது. மேலும், எதிர்காலத்தில் மோசடிகளைத் தவிர்க்க இந்தத் திட்டத்தை முழுமையாக மாற்றியமைக்கவும், தகவல் தொழில்நுட்ப அமைப்பைச் செயல்படுத்தவும் அறிக்கை பரிந்துரைக்கிறது.
நன்றி : வினவு