புதுடெல்லி: பெங்களூரு சாமராஜ்பேட்டையில் உள்ள இத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி அளித்த கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கர்நாடக வக்பு வாரியம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு:
முஸ்லீம் அமைப்பின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன்பு இந்த விஷயத்தைக் குறிப்பிட்டு, இந்த விவகாரத்தை அவசரமாக விசாரிக்கக் கோரினார். அப்பகுதியில் தேவையற்ற மத பதற்றம் உருவாக்கப்படுவதாக சிபல் தெரிவித்தார். சுருக்கமான சமர்ப்பிப்புகளைக் கேட்ட உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை செவ்வாய்கிழமை விசாரிக்க ஒப்புக்கொண்டது.
பெங்களூரு சாமராஜ்பேட்டையில் உள்ள இத்கா மைதானத்தில் விநாயக சதுர்த்தி விழாவை நடத்த உயர் நீதிமன்றம் கடந்த வாரம் அனுமதி வழங்கியது.
ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று, இடைக்கால உத்தரவை எதிர்த்து மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
இந்துத்துவ அமைப்புகள் மிரட்டல்:
முஸ்லிம்கள் வசம் இருந்த ஈத்கா மைதானம் குறித்து இந்துத்துவ அமைப்புகள் சர்ச்சை எழுப்பி நீதிமன்றம் சென்றன. மேலும் மைதானத்தில் உள்ள தூண்களை எடுத்து தகர்ப்போம் எனவும் இந்துத்துவ அமைப்புகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அங்கு இரு பெரு நாட்கள் தினங்களுக்கு மட்டும் தொழுகை நடத்துவது மற்றும் விளையாட்டு மைதானமாக பயன்படுத்துவதை தவிர மற்ற எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது.
கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவு:
இந்த நிலையில் உயர் நீதிமன்றம் இந்த இடைக்கால உத்தரவை மாற்றியமைத்து, ஆகஸ்ட் 31 முதல் குறிப்பிட்ட காலத்திற்கு மத மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட நிலத்தைப் பயன்படுத்தக் கோரும் விண்ணப்பங்களை பரிசீலித்து உரிய உத்தரவுகளை பிறப்பிக்க மாநில அரசுக்கு அனுமதி அளித்தது.