கேரளாவின் மலை மாவட்டமான வயநாட்டில் உள்ள நெய்குப்பா பழங்குடியினர் காலனியைச் சேர்ந்த மூன்று ஆதிவாசி மைனர் குழந்தைகள், நெல் வயலில் நுழைந்ததற்காக அண்டை வீட்டுகாரரால் தாக்கப்பட்டனர். ஆறு மற்றும் ஏழு வயதுடைய சிறுவர்கள் தனது வயலை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டி பக்கத்து வீட்டுக்காரர் கொடூரமாக அடித்துக் காயப்படுத்தி உள்ளார்.
இச்சம்பவம் ஆகஸ்ட் 15ம் தேதி நடந்தது.
சம்பவத்தை நேரே கண்ட உறவினர், நெற்செய்கைக்கு தயார்படுத்தப்பட்டிருந்த வயலில் பிள்ளைகள் இறங்கிய காரணத்தால் இடத்தின் உரிமையாளர் ராதாகிருஷ்ணன் பிள்ளைகளை அடித்து உதைத்ததாக தெரிவித்துள்ளார். மீடியாஒன் தொலைக்காட்சியின்படி, குழந்தைகள் அருகில் உள்ள ஓடையில் மீன் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த போது தாக்கப்பட்டுள்ளனர்.
தாக்கப்பட்ட மூன்று குழந்தைகளுக்கும் கால் மற்றும் வயிற்றில் காயம் ஏற்பட்டது.
பிறவி வால்வு குறைபாடுள்ள ஆறு வயது சிறுவன், இரண்டு முறை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால், வேகமாக ஓட முடியாமல், தொடர்ந்து தாக்கப்பட்டதால், அதிக காயம் ஏற்பட்டது.
குழந்தைகள் அருகில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. ‘அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை’ என போலீசார் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமைச் சட்டம் மற்றும் ஐபிசி பிரிவு 324 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
40 வயது மதிக்கத்தக்க ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.